சனி, 14 ஏப்ரல், 2018

சந்திரபாபு நாயுடு : பாஜகவைத் தப்பிக்கவைத்த அதிமுக...

பாஜகவைத் தப்பிக்கவைத்த அதிமுக:  சந்திரபாபு நாயுடுமின்னம்பலம்: தெலுங்கு தேசம் கட்சித் தலைவரும், ஆந்திர முதல்வருமான சந்திரபாபு நாயுடு சிங்கப்பூரில் தான் கலந்துகொண்ட நிகழ்ச்சியில், பாஜகவையும் அதிமுகவையும் ஒருசேரத் தாக்கியிருக்கிறார்.
சிங்கப்பூருக்கு ஒரு நாள் பயணம் மேற்கொண்ட சந்திரபாபு நாயுடு நேற்று (ஏப்ரல் 13) வெளிநாடு வாழ் இந்தியர்கள் பங்குபெற்ற தெலுங்கு தேசம் கட்சியின் நிகழ்ச்சியில் பேசினார். அவர் பேசுகையில் பிரதமர் நரேந்திர மோடியையும் மற்றும் பாஜக தலைமையில் உள்ள அரசையும் கடுமையாகத் தாக்கினார்.
பாஜக தலைமையிலான அரசு ஆந்திராவுக்கு நன்மைகள் செய்யும் என்று நம்பியே அக்கட்சியுடன் கூட்டணி வைத்துப் புறப்பட்டதாகவும், ஆனால் பாஜக அரசு உறுதி அளித்தவாறு நடந்துகொள்ளாத நிலையில்தான் இந்த நிலைக்கு ஆந்திர அரசு வந்ததாகவும் அவர் கூறினார்.

“முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் ஆட்சியில் இருந்தபோது ஆந்திராவின் மறுசீரமைப்புச் சட்டத்திலும், மாநிலங்களவையிலும் அளித்த வாக்குறுதி இன்னும் நிறைவேற்றப்படவில்லை. இதற்காக 29 முறை நான் டெல்லி சென்றிருக்கிறேன். ஆனாலும் எந்த விளைவும் இல்லை. அதனாலேயே தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து வெளியேறி, ஆந்திராவிற்குச் சிறப்பு அந்தஸ்து பெற்றுத்தரும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளேன்’’ என்று குறிப்பிட்டுள்ள சந்திரபாபு நாயுடு, பிரதமர் மோடியையும் கடுமையாகத் தாக்கினார். 2500 கோடி ரூபாய் செலவில் குஜராத்தில் சிலை வைக்க விரும்பும் மோடிக்கு 1500 கோடியை அமராவதியின் வளர்ச்சிக்குத் தர மனம் வரவில்லை என்று மோடியை விமர்சித்தார் அவர். .
தொடர்ந்து பேசுகையில் மத்திய அமைச்சரவைக்கு எதிராக ஆந்திரா அரசு மேற்கொண்ட நம்பிக்கை இல்லாத் தீர்மானத்தைப் பற்றியும் குறிப்பிட்டுள்ளார்.
“நாம் மத்திய அரசுக்கு எதிராக நம்பிக்கை இல்லாத் தீர்மானம் கொண்டுவந்தோம். ஆனால் மத்திய அரசோ அதிமுகவை வைத்து நாடாளுமன்றத்தில் தொடர் அமளியைக் கிளப்பிவிட்டு, நம்பிக்கை இல்லாத் தீர்மானத்தின் மீதான விவாதத்தில் இருந்து தப்பித்துக்கொண்டது’’ என்று அதிமுகவையும் சேர்த்துக் குறை கூறியுள்ளார்.
உலகின் பல நாடுகளில் இருக்கும் கூட்டாட்சி அமைப்பு முறை பற்றி விளக்கிய சந்திரபாபு நாயுடு அங்கெல்லாம் நிலவும் மத்திய மாகாண உறவுகள் பற்றிக் குறிப்பிட்டு, “மாநிலங்கள் மத்திய அரசிடம் பிச்சை எடுக்க வேண்டிய அவசியம் இல்லை” என்றார் சந்திரபாபு நாயுடு.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக