செவ்வாய், 10 ஏப்ரல், 2018

திரை இயக்குனர்கள் "தமிழர் கலை இலக்கிய பண்பாட்டு பேரவை" தொடக்கினர்

இயக்குனர்கள் புதிய பேரவை தொடங்கினர்
தமிழர் பிரச்சினைக்காக போராடப்போவதாக அறிவிப்புதினதிநதி :தமிழ் மற்றும் தமிழர் பிரச்சினைகளுக்காக போராட நடிகர் சத்யராஜ், பாரதிராஜா, தங்கர்பச்சான் உள்ளிட்ட சினிமா இயக்குனர்கள் புதிய பேரவை தொடங்கினர். சென்னை,< தமிழகத்தில் காவிரி பிரச்சினைக்கான போராட்டம் தீவிரம் அடைந்துள்ளது. இளைஞர்கள், மாணவர்கள், அரசியல் கட்சியினர் என பல்வேறு தரப்பினரும் போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர். தமிழ் திரையுலகம் சார்பில் நேற்று முன்தினம் மவுன போராட்டம் நடத்தப்பட்டது. இந்நிலையில் சினிமா இயக்குனர்கள் பாரதிராஜா, ஆர்.கே.செல்வமணி, அமீர், தங்கர்பச்சான், கவுதமன், நடிகர் சத்யராஜ் ஆகியோர் தலைமையின் கீழ் புதிய பேரவை சென்னையில் நேற்று தொடங்கப்பட்டது. இதற்கு ‘தமிழர் கலை இலக்கிய பண்பாட்டுப் பேரவை’ என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது.
இந்த பேரவைக்காக வில் அம்பு, மீன் மற்றும் புலி உருவம் பொறிக்கப்பட்ட கொடியும் அறிமுகப்படுத்தப்பட்டது. அதில், மானமும் வீரமும் தமிழனின் அடையாளம் என்றும், வெல்க தமிழ் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. தமிழ் மற்றும் தமிழர் பிரச்சினைகளுக்காக தமிழர் கலை இலக்கிய பண்பாட்டுப் பேரவை போராடும் என்று அவர்கள் கூட்டாக அறிவித்தனர்.

இதுகுறித்து இயக்குனர் பாரதிராஜா கூறியதாவது:-

தமிழக மக்கள் கடந்த 2 வருடங்களாக மிகப்பெரிய சோதனைகளை சந்தித்து வருகிறார்கள். தமிழ் நிலத்துக்கு தற்போது பேராபத்து ஏற்பட்டுள்ளது. தமிழ் மற்றும் தமிழர்களின் பிரச்சினைகளுக்கு போராடுவதற்காக தமிழர் கலை இலக்கிய பண்பாட்டு பேரவையை தொடங்கியிருக்கிறோம். பேரவையில் யாருக்கும் எந்தவித அடையாளமும் இருக்காது. அரசியல் வேற்றுமை, காழ்ப்புணர்ச்சி இல்லாமல் இருப்பார்கள்.

அரசியல் என்ற சாயத்தை கலைத்துவிட்டு தமிழனாக இந்த கூடாரத்துக்குள் வரவேண்டும். தமிழகமே கொந்தளிக்கும்போது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியை சென்னையில் நடத்தக்கூடாது. இந்த போட்டியை தமிழகத்தில் நடத்துவது இளைஞர்களை திசைதிருப்புவதற்கு நடத்தப்படுகிறதா? என்ற சந்தேகத்தை ஏற்படுத்துகிறது. எங்கள் பேரவை நடத்தும் போராட்டம் ஜனநாயக முறைப்படியும், தார்மீகமாகவும் இருக்கும்.

இவ்வாறு அவர் கூறினார்.

தமிழ் திரையுலகம் நடத்திய போராட்டத்தில் பங்கேற்காதது ஏன்? என்று பாரதிராஜாவிடம் கேட்டதற்கு, ‘மொழிவாரியாக மாநிலங்கள் பிரிந்த பின்னரும் சென்னையை மையமாக கொண்ட நடிகர் சங்கம் தென்னிந்திய நடிகர் சங்கம் என்ற பெயருடன் இருக்கிறது. இது தமிழ் நடிகர் சங்கமாக மாறும்வரை எந்த நிகழ்ச்சிகளிலும் பங்கேற்கமாட்டேன்’ என்றார்.

தமிழர் கலை இலக்கிய பண்பாட்டுப் பேரவை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

நம் ஒற்றுமையை சிதறடித்து காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க திரளும் போராட்டத்தை நீர்த்துப்போகச் செய்துவிடலாம் எனும் சூழ்ச்சியை அனைவரும் புரிந்துகொண்டு ஒன்றுகூடி சென்னையில் கிரிக்கெட் போட்டியை தடுத்துநிறுத்தி வென்றெடுக்க வேண்டும். கட்டணம் செலுத்தி அனுமதி சீட்டு வாங்கிவிட்டோமே என நினைக்காமல் நமக்கு உணவிடும் விவசாயிகளுக்காக அதை கிழித்தெறியுங்கள். பார்வையாளர் இன்றி விளையாட்டு போட்டியை நடத்திக்கொள்ளட்டும்.

எனவே, நமக்கு வேண்டியது காவிரி மேலாண்மை வாரியம். அதற்காக கட்சிகளாக, தனித்தனி இயக்கங்களாக, அமைப்புகளாக பிரிந்துகிடக்கின்ற அனைவரும் அவரவர்களின் அடையாளங்களை ஒதுக்கிவைத்துவிட்டு விவசாயிகளுக்காக நம் காவிரி அன்னைக்காக ஒன்றுபடுங்கள். உரிமையை வென்றெடுப்போம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

சினிமா இயக்குனர்கள் பாரதிராஜா, அமீர், கவுதமன், வெற்றிமாறன் மற்றும் தமிழக அனைத்து விவசாயிகள் சங்க ஒருங்கிணைப்புக்குழு தலைவர் பி.ஆர்.பாண்டியன் உள்பட பலர் நேற்று ராஜ்பவனில் கவர்னர் பன்வாரிலால் புரோகித்தை சந்தித்து ஜனாதிபதிக்கு ஒரு மனு கொடுத்தனர். அதில், காவிரி மேலாண்மை வாரியத்தை உடனடியாக அமைக்க வேண்டும். கர்நாடகத்தை சேர்ந்த சூரப்பாவை அண்ணா பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக நியமித்ததை ரத்துசெய்ய வேண்டும் என்று கூறியுள்ளனர்.

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக்கோரி தமிழக அனைத்து விவசாய சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு தலைவர் பி.ஆர்.பாண்டியன் தலைமையிலான ‘காவிரி உரிமை மீட்பு போராட்டக்குழு’ சார்பில் சென்னை எழும்பூரில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் இயக்குனர்கள் பாரதிராஜா, சேகர், அமீர், வெற்றிமாறன், கவுதமன், நடிகர் ஆரி உள்பட பலர் சாலையில் அமர்ந்து போராட்டத்தில் பங்கேற்றனர்.

பி.ஆர்.பாண்டியன் நிருபர்களிடம் கூறும்போது, “காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கும் வரை போராட்டங்கள் தொடரும். பிரதமர் தமிழகம் வரும் தினத்தை வீடுகளிலும், சட்டைகளிலும் கருப்பு கொடி ஏந்தி துக்கநாளாக நாங்கள் கடைபிடிப்போம்” என்றார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக