ஞாயிறு, 29 ஏப்ரல், 2018

சந்திரசேகர ராவுடன், தேர்தல் வரும்போது கூட்டணிபற்றி அறிவிப்போம் - மு.க.ஸ்டாலின் பேட்டி

சந்திரசேகர ராவுடன் ஆலோசனை, தேர்தல் வரும்போது கூட்டணி குறித்து அறிவிப்போம் - மு.க.ஸ்டாலின் பேட்டிதினத்தந்தி :அரசியல் சூழ்நிலைகள் குறித்து தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவுடன் ஆலோசனை நடைபெற்றது என மு.க. ஸ்டாலின் கூறினார். சென்னை, தெலுங்கானா முதல்-மந்திரியும், தெலுங்கானா ராஷ்டிர சமிதி கட்சியின் தலைவருமான சந்திரசேகர ராவ் பா.ஜனதா, காங்கிரஸ் கட்சிகள் அல்லாத கூட்டாட்சி முன்னணி (பெடரல் பிரண்ட்) என்னும் 3-வது அணியை தேசிய அளவில் அமைப்பதற்கான முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார். இது தொடர்பாக அவர் ஏற்கனவே, மேற்கு வங்காள முதல்-மந்திரி மம்தா பானர்ஜி, மதசார்பற்ற ஜனதா தளம் தலைவரும், முன்னாள் பிரதமருமான தேவே கவுடா ஆகியோரை சந்தித்து பேசி ஆதரவு திரட்டினார். இந்தநிலையில் தமிழகத்தில் பிரதான எதிர்க்கட்சியாக திகழும் தி.மு.க.வின் ஆதரவை பெறுவதற்காக இன்று சென்னை வந்தார். அவர் முதலில் தி.மு.க. தலைவர் கருணாநிதியை சந்தித்து உடல் நலம் விசாரித்தார்.
பின்னர் தி.மு.க. செயல்தலைவர் மு.க.ஸ்டாலினை சந்தித்து நீண்ட நேரம் ஆலோசனை நடத்தினார். பின்னர் இருவரும் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்கள்.  தி.மு.க. செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் செய்தியாளர்களிடம் பேசுகையில், தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் தலைவர் கருணாநிதியை சந்தித்து உடல் நலம் விசாரித்தார்.
அதனை தொடர்ந்து என்னுடைய வீட்டிற்கு வந்து, மதிய உணவு சாப்பிட்டார். பின்னர் அரசியல் நிலவரம் தொடர்பாக ஆலோசனை நடைபெற்றது. அரசியல் சூழ்நிலை, எதிர்காலத்தில் அரசியல் அமைவது தொடர்பாக நீண்ட நேரம் என்னிடம் விவாதித்தார். முக்கியமாக மதசார்பின்மையை காப்பாற்றுவது, மாநிலத்திற்கு கூடுதல் உரிமையை பெறுவது, சுயாட்சி உரிமையை பெறுவது, கல்வியை மாநில பட்டியலுக்கு மாற்றுவது.

 மாநிலங்களுக்கு நிதி பங்கீட்டு உரிமையை பெறுவது, மத்திய அரசின் சர்வாதிகார போக்கு குறித்து ஆலோசித்தோம். ஆரோக்கியமான பேச்சுவார்த்தை நடைபெற்றது. முதல்கட்டமாக பேச்சுவார்த்தை தொடங்கினாலும், தொடர்ந்து பேச்சுவார்த்தை நடைபெறும். அவரும் (சந்திரசேகர ராவ்) பிற மாநில முதல்-மந்திரிகள், அரசியல் தலைவர்களிடம் பேசிவருகிறார். நாங்களும் எங்களுடன் ஒத்த கருத்துடைய கருத்துக்கள் கொண்ட கட்சிகள் உள்ளது. அவர்களிடமும் ஆலோசிக்க வேண்டும் என்றோம். திமுக பொதுக்குழு, நிர்வாக குழு, உயர்மட்ட குழுவில் ஆலோசிக்க வேண்டும். தொடர்ந்து பேசுவேன் என்று கூறிஉள்ளேன். ஆரோக்கியமான முறையில் பேச்சுவார்த்தை நடந்து முடிந்தது மகிழ்ச்சியளிக்கிறது. விரைவில் திமுக தரப்பில் மாநில சுயாட்சி மாநாட்டை நடத்த நடவடிக்கை வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டது, அதுதொடர்பாக முடிவு எடுப்பதாக கூறிஉள்ளார் என்றார். 

தொடர்ந்து தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் பேசுகையில் மதச்சார்பற்ற நாடாக இந்தியா இருக்க வேண்டும், அதை நோக்கியே எங்களது பயணம் இருக்கும் என்று குறிப்பிட்டார். திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் தலைவர் மம்தா பானர்ஜியும் எதிர்க்கட்சிகளை ஒன்றிணைக்கும் பணியை தொடர்ந்து மேற்கொண்டு வருகிறார். அவருடைய பணியை திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் வரவேற்றார். இந்நிலையில் கூட்டணி தொடர்பான கேள்விக்கு மு.க.ஸ்டாலின் பேசுகையில், தேர்தல் வரும்போது கூட்டணி குறித்து அறிவிப்போம் என்று கூறினார்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக