திங்கள், 2 ஏப்ரல், 2018

ஆளுநர் திடீர் ஆலோசனை.. சட்டம் ஒழுங்கு அதிகாரிகளுடன் ...

governorதினமணி :தமிழக சட்டம் - ஒழுங்கு விவகாரம்
தொடர்பாக தலைமைச் செயலாளர் உள்ளிட்ட முக்கிய அதிகாரிகளை ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் ஞாயிற்றுக்கிழமை நேரில் அழைத்து ஆலோசனை நடத்தினார்.
 உச்சநீதிமன்றம் விதித்த 6 வாரக் கெடுவுக்குள் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்காததைக் கண்டித்து, தமிழகம் முழுவதும் அரசியல் இயக்கத்தினரும், பல்வேறு அமைப்பினரும், பொதுமக்களும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
 தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை மூட வலியுறுத்தி பொதுமக்கள் 46 நாள்களாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
 நியூட்ரினோ திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்தும் போராட்டம் நடைபெற்று வருகிறது.

 தமிழகம் முழுவதும் போராட்டக் களமாக உள்ள நிலையில், பிரதமர் நரேந்திரமோடி ராணுவ தளவாட கண்காட்சியைத் திறந்து வைப்பதற்காக விரைவில் சென்னைக்கு வர உள்ளார்.
 பிரதமர் வருகையின்போது திமுக சார்பில் கருப்புக் கொடி போராட்டம் நடத்தப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
 ஆளுநர் ஆலோசனை: இந்த நிலையில் தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன், உள்துறை செயலாளர் நிரஞ்சன் மார்டி, டிஜிபி டி.கே.ராஜேந்திரன், அரசு தலைமை வழக்குரைஞர் விஜய் நாராயணன் ஆகியோர் கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகைக்கு ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் அழைப்பின் பேரில் ஞாயிற்றுக்கிழமை வந்தனர். இந்தச் சந்திப்பு சுமார் அரை மணி நேரம் நீடித்தது.
 அப்போது, சட்டம் ஒழுங்கு விவகாரம் தொடர்பாகவும், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காததற்கு எதிர்ப்பு தெரிவித்தும் நடைபெறும் போராட்டங்கள் குறித்தும் அதிகாரிகளிடம் ஆளுநர் கேட்டறிந்தார்.
 தமிழகத்துக்கு பிரதமர் வருகையின்போது அளிக்கப்படும் பாதுகாப்பு குறித்து கேட்டறிந்துள்ளார். தமிழக அதிகாரிகள் தெரிவித்த கருத்துகளை மத்திய உள்துறை அமைச்சருக்கு ஆளுநர் அனுப்பி வைக்கவும் உள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக