புதன், 11 ஏப்ரல், 2018

இந்தியாவில் பிளவு: எச்சரிக்கும் தென்மாநில நிதியமைச்சர்கள்!

இந்தியாவில்  பிளவு: எச்சரிக்கும்  நிதியமைச்சர்கள்!மின்னம்பலம்: கேரளாவில் திருவனந்தபுரத்தில் நேற்று நடைபெற்ற தென்னிந்திய நிதியமைச்சர்கள் மாநாட்டில் கேரளா, கர்நாடகா, ஆந்திரா மற்றும் புதுச்சேரி மாநிலங்களைச் சேர்ந்த பிரதிநிதிகள் பங்கேற்றனர்.
15ஆம் நிதிக்குழுவுக்கான வரையறைகளை அளித்துள்ள ஒன்றிய அரசு, 2011ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட மக்கள்தொகை கணக்கெடுப்பின் அடிப்படையில் பகிர்ந்தளிக்கக் கூறியுள்ளது. 2011ஆம் ஆண்டு மக்கள்தொகை அடிப்படையில் நிதி பகிர்ந்தளிக்கப்பட்டால், தென்மாநிலங்கள் மிகப் பெரிய இழப்பைச் சந்திக்கும். எனவே, இது தொடர்பாக விவாதிக்கவும் ஆலோசிக்கவும் தென்னிந்திய நிதியமைச்சர்கள் மாநாட்டுக்குக் கேரள நிதியமைச்சர் தாமஸ் அழைப்பு விடுத்திருந்தார்.
அதன்படி, கேரளாவில் திருவனந்தபுரத்தில் நேற்று (ஏப்ரல் 10) நடைபெற்ற இந்த மாநாட்டில் புதுச்சேரி சார்பில் முதல்வர் நாராயணசாமி, ஆந்திரா சார்பில் நிதியமைச்சர் யனமலா ராமகிருஷ்ணடு, கர்நாடகா சார்பில் விவசாய அமைச்சர் கிருஷ்ணா பைரே கௌடா, கேரளா சார்பில் நிதியமைச்சர் தாமஸ் ஐசக் ஆகியோர் பங்கேற்றனர்.


கேரள முதல்வர் பினராயி தலைமை தாங்கி பேசுகையில், “நிதிக்குழு தொடர்பாக மத்திய அரசு வரையறுத்துள்ள வரையறைகள் அதன் அரசியலமைப்பு பொறுப்புகளை நிறைவேற்றுவதைத் தடுத்துவிடுமோ என்ற அச்சம் ஏற்படுகிறது. எனவே, 15ஆவது நிதிக்குழு வரைமுறைகள் தொடர்பாக ஒன்றிய அரசிடம் முறையிடு செய்வதே ஒரே வழி” என்று குறிப்பிட்டார். ஜிஎஸ்டியால் மாநிலங்களின் நிதி தன்னாட்சி அரிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குற்றம்சாட்டினார்.
நாராயணசாமி பேசுகையில், 15ஆவது நிதி கமிஷனில் புதுச்சேரி யூனியன் பிரதேசத்தையும் சேர்க்க வேண்டும் என்று ஏற்கனவே மத்திய நிதித்துறை அமைச்சருக்குக் கடிதம் கொடுத்ததாகவும், மத்திய அரசு இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும் குறிப்பிட்டார்.
இதனால் புதுச்சேரிக்குக் கிடைக்க வேண்டிய 42 சதவிகித நிதி கிடைக்காமல் வெறும் 27 சதவிகித நிதி மட்டுமே கிடைப்பதாகத் தெரிவித்த அவர், புதுச்சேரியையும் 15ஆவது நிதி கமிஷனில் சேர்க்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தார்.
கர்நாடக அமைச்சர் கிருஷ்ண கௌடா பேசுகையில், இந்தப் பிரச்சினையில் ஒன்றிய அரசு வெற்றியாளர், தோல்வியாளர் ஆகியோரை உருவாக்குவதற்குப் பதிலாக வெற்றியாளர் - வெற்றியாளர் என்ற தீர்வை உருவாக்க வேண்டும். இந்திய ஒன்றியத்துக்குள் பிளவுகளை ஏற்படுத்தினால், ஒன்றியம் பலவீனமடையும் என்று எச்சரித்தார்.

ஆந்திர நிதியமைச்சர் ராமகிருஷ்ணடு பேசுகையில், “நிதிக்குழுவை நாங்கள் எதிர்க்கவில்லை. ஆனால், மாநில அரசுகளை கலந்தாலோசிக்காமல் மத்திய அரசு உருவாக்கியுள்ள வரைமுறைகளைத்தான் எதிர்க்கிறோம். எனவே அவற்றில் மாற்றம் செய்ய வேண்டும்” என்று தெரிவித்தார்.
15ஆவது நிதிக்குழுவின் பரிந்துரைப்படி நிதி பகிர்ந்தளிக்கப்பட்டால் கேரளாவுக்கு ரூ.80 ஆயிரம் கோடி இழப்பு ஏற்படும் என குறிப்பிட்ட அம்மாநில நிதியமைச்சர் தாமஸ், “இரண்டு வாரங்கள் கழித்து இது தொடர்பாக மேலும் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த நிதியமைச்சர்களுடன் விசாகப்பட்டினத்தில் ஆலோசிக்கப்படும். 15ஆவது நிதிக்குழுவின் வரைமுறைகளில் மாற்றம் ஏற்படுத்த வேண்டும் எனக் குடியரசு தலைவரிடம் வலியுறுத்தப்படும்” என்று குறிப்பிட்டார்.
தெலங்கானா மற்றும் தமிழகம் இந்த ஆலோசனைக் கூட்டத்தை புறக்கணித்த நிலையில், தமிழகம் சார்பில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நேற்று 15ஆவது நிதிக்குழு தொடர்பாக ஆலோசனை கூட்டம் நடத்தப்பட்டது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக