திங்கள், 30 ஏப்ரல், 2018

உதகை ..ஹிந்துஸ்தான் போட்டோ ஃபிலிம் நிறுவனம் மூடல்...பொன்விழா கண்ட தொழிற்சாலையைக் கைவிடலாமா?


மின்னம்பலம்: வழக்கறிஞர். கே. எஸ். இராதாகிருஷ்ணன்:

உதகையில் 1967இல் அப்போதைய பிரதமர் இந்திரா காந்தியால் மத்திய அரசின் கனரகத் தொழில் துறை சார்பில் ஹெச்.பி.எஃப் என்ற போட்டோ பிலிம் தொழிற்சாலை தொடங்கப்பட்டது. தெற்காசியாவின் ஒரே ஃபிலிம் தொழிற்சாலை என்ற பெருமையுடைய இந்த ஆலையில் தொடக்கத்தில் போட்டோ ஃபிலிம் ரோல், எக்ஸ்-ரே பிலிம், கருப்பு - வெள்ளை ஃபிலிம், ‘ப்ரோமைட் பேப்பர்’ ஆகியவை உற்பத்தி செய்யப்பட்டன. இதன் மூலம் 5,000 தொழிலாளர்கள் நேரடியாகவும், 1 லட்சம் பேர் மறைமுகமாகவும் பயனடைந்துவந்தனர். குறிப்பாக இந்தத் தொழிற்சாலையில், பார்வையற்ற பலருக்கு வேலை வாய்ப்பு அளிக்கப்பட்டது. உதகமண்டலம் இந்தத் தொழிற்சாலைக்கேற்ற தட்ப வெப்ப நிலையில் பொருத்தமாக இருந்தது.
ராஜீவ் காந்தி ஆட்சிக் காலத்தில் இந்த ஆலையை உத்தரப் பிரதேசத்தின் நைனிட்டாலுக்கு மாற்ற முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. 1984 காலக்கட்டம் என்று நினைவு. இந்தத் தொழிற்சாலையை இடம் மாற்றக் கூடாது என்று அன்றைய தமிழ்நாடு காங்கிரஸ் (கா) தலைவர் பழ. நெடுமாறன் சட்டமன்ற முன்னாள் உறுப்பினர் கரிச்சாக் கவுண்டர் ஆகியோர் தலைமையில் இந்த தொழிற்சாலையை உத்தரப் பிரதேசத்துக்கு கொண்டு செல்லக் கூடாதென்று ஆர்ப்பாட்டம் நடத்தியதும் உண்டு. இந்தப் போராட்டத்தில் அடியேனும் கலந்துகொண்டதுண்டு. பின்னர் வி.பி. சிங் காலத்தில் உ.பி.க்கு மாற்றும் இந்தத் திட்டம் கைவிடப்பட்டது.
இந்தத் தொழிற்சாலையை மேலும் விரிவுபடுத்த எண்ணிய மத்திய அரசு, 500 கோடி ரூபாய் மதிப்பில் புதிய எக்ஸ்-ரே தொழிற்சாலையை, உதகை இந்து நகர் பகுதியில் அமைத்தது. கடந்த 2017ஆம் ஆண்டில் பொன்விழா கண்ட இந்தத் தொழிற்சாலை கடந்த ஏப்ரல் 24ஆம் தேதியுடன் மூடப்படுவதாக அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியிடப்படவுள்ளது. லாபத்துடன் இயங்கிவந்த ஹெச்.பி.எப் தொழிற்சாலை சுமார் 570 ஏக்கரில் அமைந்திருக்கிறது. இதில் தமிழக அரசுக்குச் சொந்தமான நிலம் மட்டுமே 303 ஏக்கர். இந்த தொழிற்சாலை வளாகத்துக்குள், சின்னதாய் ஒரு நகரத்தையே கட்டமைக்கும் அளவுக்கு அடிப்படை வசதிகள் இருக்கின்றன.

சிறப்புக் கட்டுரை: பொன்விழா கண்ட தொழிற்சாலையைக் கைவிடலாமா?1991ஆம் ஆண்டிற்குப் பிறகு கடைபிடிக்கப்பட்ட புதிய பொருளாதாரக் கொள்கையின் வரவால் இந்தத் தொழிற்சாலையின் ஃபிலிம் உற்பத்தியில்தான் பின்னடைவு ஏற்பட்டது. ஆனால், இங்கு தயாரிக்கப்பட்ட எக்ஸ்-ரே ஃபிலிம் உற்பத்திக்கு எந்தப் பாதிப்பும் ஏற்படவில்லை. இங்கு உற்பத்தியான எக்ஸ்-ரே ஃபிலிம்கள்தான் அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் பயன்படுத்தப்பட்டன. இங்கிருந்து ஃபிலிம் அனுப்பப்பட்டவரை, அரசு மருத்துவமனைகளில் எக்ஸ்-ரே இலவசமாக எடுக்கப்பட்டது. இங்கே உற்பத்தியை நிறுத்திய பிறகுதான் அரசு மருத்துவமனைகளில் எக்ஸ்-ரே எடுக்கக் கட்டணம் வசூலிக்கப்பட்டது. மற்ற தயாரிப்புகளை நிறுத்தியிருந்தாலும் எக்ஸ்-ரே உற்பத்தியை நிறுத்தாமல் தொடர்ந்திருந்தால் இன்றைக்கு இந்தத் தொழிற்சாலையை மூடக்கூடிய நிலை வந்திருக்காது. ஆனால், நிர்வாகக் குளறுபடிகள் காரணமாக அது நடக்காமல் போய்விட்டது.
எக்ஸ்-ரே மட்டுமின்றி, பூமிக்கடியில் செல்லும் காஸ் குழாய்களில் கசிவைக் கண்டறிய உதவும் ஃபிலிம்களும் இங்கு தயார்செய்யப்பட்டன. ராணுவத்திலும் இந்த ஃபிலிம் பயன்படுத்தப்பட்டுவந்தது. இங்கே உற்பத்தியை நிறுத்திவிட்டதால் தற்போது ராணுவத்துக்கும் வெளிநாடுகளிலிருந்து ஃபிலிம் இறக்குமதி செய்யப்படுகிறது.
இருப்பினும் அந்த நஷ்டத்தையே பொய்யாகக் காரணம் காட்டி மத்திய அரசு 1996ஆம் ஆண்டு நலிவடைந்த நிறுவனமாகவே இதை அறிவித்தது. இதையடுத்து, தொடர் சரிவைச் சமாளிக்க முடியாத சூழல் ஏற்பட்டதாகக் கூறி இதில் பணியாற்றிவந்த தொழிலாளர்கள் விருப்ப ஓய்வுத் திட்டத்தின்படி வெளியேற்றப்பட்டனர். இறுதியாக கடந்த 2 ஆண்டுகளாக 165 தொழிலாளர்கள் மட்டுமே பணியில் இருந்தனர். இவர்களுக்குக் கடந்த 2 ஆண்டுகளாக ஊதியம் எதுவும் வழங்கப்படவில்லை. இந்த நிலையில் 165 பேரும் உடனடியாக வெளிறே நிர்வாகம் அறிவிப்பு கொடுத்து உத்தரவிட்டுள்ளது. இவர்களுக்குச் சேர வேண்டிய நிலுவைத் தொகை, பணிக்கொடை, விருப்பு ஓய்வுத் திட்டத்தின் கீழான நிதியிலிருந்து 80 சதவீதம் மற்றும் அதற்கான வருமான வரிப் பிடித்தம் செய்யப்பட்டு பாக்கித் தொகை மட்டும் உடனடிறயாக வழங்கப்படுவதாகத் தெரிவித்துள்ளனர். மீதமுள்ள தொகை இந்தத் தொழிற்சாலை மீதுள்ள வழக்கின் இறுதித் தீர்ப்புக்குப் பின் வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த தொழிற்சாலைக்குள் ஏப்ரல் 27ஆம் தேதிக்கு பின் யாரும் நுழையக் கூடாது என உத்தரவிடப்பட்டுள்ளது. மத்திய அரசு ‘மேக் இன் இந்தியா’ எனச் சொல்லிவிட்டு, உள்நாட்டுத் தொழிற்சாலைக்கு இப்படிப் பூட்டுப் போடுவது கவலையளிக்கிறது. சிறு சிறு மாற்றங்களைச் செய்தால் மீண்டும் இங்கே உற்பத்தியை தொடங்கலாம். தொழிற்சாலையை மூட அரசு முடிவெடுத்துள்ள நிலையில், தொழிலாளர்களுக்கு 2 ஆண்டுகளாக ஊதியம் வழங்கப்படாதது வெந்த புண்ணில் வேலைப் பாய்ச்சுவதுபோல் உள்ளது. நிலுவையில் உள்ள சம்பளத்தைக் கேட்டு ஊழியர்கள் குடும்பத்துடன் பிச்சையெடுக்கும் போராட்டம் உள்ளிட்ட பல போராட்டங்களை நடத்தியுள்ளனர். ஆனால், நிர்வாகம் எதற்குமே இறங்கிவர மறுக்கிறது.
இத்தொழிற்சாலைக் கட்டிடத்தைத் தமிழக அரசின் சார்பில் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையாக மாற்றும் முயற்சிகள் நடைபெறுவதாகத் தகவல்கள் உள்ளன. சிலர் இந்த நிறுவனத்தையும் இடத்தையும் தனியாருக்கு விற்பனை செய்யலாமென்ற யோசனையை முன்வைக்கிறார்கள். தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைப்பதற்கான இடத்தைத் தேர்வு செய்வதில் இன்னமும் இழுபறி நீடிக்கிறது. இந்நிலையில், ஹெச்.பி.எஃப் தொழிற்சாலை வளாகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனையைத் தொடங்கி அந்தத் தொழிற்சாலையின் தொழிலாளர்களுக்கும் வேலைவாய்ப்பை ஏற்படுத்தித் தரலாம் என்ற கருத்தும் பேசப்படுகிறது.
உள்நாட்டுத் தொழிற்சாலைகளை மூடுவது அல்லது தனியாருக்குத் தாரை வார்ப்பது என்பது தொடர்கதையாக உள்ளது. சேலம் இரும்பாலைக்காக 1950லிருந்து போராடி 1980களில்தான் அது நிறுவப்பட்டது. நீண்டதொரு போராட்டத்திற்குப் பின் அமைந்த ஆலையைத் தற்போது தனியாருக்கு மொத்தமாகத் தாரை வார்க்கிறது மத்திய அரசு. தமிழகம் வஞ்சிக்கப்படுகிறது. ஆனால், இதையெல்லாம் தட்டிக் கேட்கக்கூடிய சரியான நாடாளுமன்ற உறுப்பினர்களைத்தான் நாம் டெல்லிக்கு அனுப்புவது இல்லையே.
(கட்டுரையாளர் பற்றிய குறிப்பு: வழக்கறிஞர் கே.எஸ்.இராதாகிருஷ்ணன் திமுக செய்தித் தொடர்பாளர், கதைசொல்லி இதழின் இணையாசிரியர், பொதிகை - பொருநை கரிசல் பதிப்பகத்தின் நிறுவனர். இவரைத் தொடர்புகொள்ள: rkkurunji@gmail.com)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக