புதன், 4 ஏப்ரல், 2018

கமலஹாசன் டிவிட்டரில் முன்னணியில் நிற்பதற்கு கடும் முயற்சி ... விளம்பரத்தால் ஆட்சியை பிடிக்கமுடியுமா?

ஸ்பெஷல்: கமலின் ‘ட்விட்டர் நிதி மய்யம்’ தாக்குப்பிடிக்குமா?மின்னம்பலம் : தமிழ்நாட்டின் புதிய அரசியல்வாதிகளாக, நடிகர்களாக இருக்கும் ரஜினிகாந்த் - கமல்ஹாசன் இருவரும் புதிதாக களத்தில் இறங்கியுள்ளார்கள். கமல்ஹாசன், ரஜினிகாந்த்தை முந்திக்கொண்டு மக்கள் நீதி மய்யம் என்ற கட்சியை ஆரம்பித்துவிட்டார். மதுரையில் பொதுக்கூட்டம், ஈரோடு மாவட்டத்தில் சுற்றுப்பயணம் என ஒரு ரவுண்டை முடித்துக்கொண்டு, அடுத்ததாக இன்று (04.04.18) திருச்சியில் பிரமாண்ட பொதுக் கூட்டத்தில் பேச உள்ளார். நேற்று இதற்காக ரயில் மூலம் திருச்சி புறப்பட்டுச் சென்றார்.
எம்ஜிஆர், திமுகவில் இருந்து நீக்கப்பட்ட பின் அவர் அரசியல் ரீதியாக மேற்கொண்ட முதல் பயணம் மதுரை. விமானத்தில் பயணித்து வந்த எம்ஜிஆர் மதுரைக்கு ரயில் பயணத்தைத் தேர்வு செய்தார். சென்னையிலிருந்து பாண்டியன் எக்ஸ்பிரஸ் ரயிலில் இரவு 7.30 மணிக்கு சென்னை எழும்பூரில் இருந்து பயணமானார் எம்ஜிஆர். காலை 7 மணிக்கு மதுரைக்கு வழக்கமாக சென்று சேர வேண்டிய ரயில் 32 மணி நேரம் தாமதமாக மதுரை வந்தடைந்தது. வழி எங்கும் மக்கள் எம்ஜிஆர் அவர்களைப் பார்க்க ரயிலை மறித்ததால் இந்த தாமதம். கட்சி தொடக்க விழாவுக்கு மதுரையைத் தேர்வு செய்த கமல்ஹாசன் எம்ஜிஆர் பாணியில் ரயில் பயணத்தை மேற்கொள்ளவில்லை.


திருச்சி பொதுக் கூட்டத்துக்கு எம்ஜிஆர் பாணியில் ரயில் பயணத்தைத் தேர்வு செய்த கமல்ஹாசன் அதைக் கடந்த ஒரு வார காலமாகப் பொது வெளியில் விவாதப் பொருளாகவும் மாற்றினார். காவிரி மேலாண்மை வாரிய பிரச்சினையில் தமிழக அரசியல் களம் கனன்று கொண்டிருப்பதால் கமல்ஹாசன் ரயில் பயணம் கவனிப்புக்கு உள்ளாகவில்லை.
நடிகர் கமல்ஹாசன் ட்விட்டர் தளத்தில் அரசியல் கருத்துகளையும், விமர்சனங்களையும் வெளியிட்டபோது அது சினிமா அரசியல் தளங்களில் கவனிக்கப்பட்டது. இப்போது அவர் ஓர் அரசியல் கட்சியின் நிறுவனத் தலைவர். அரசியல்வாதிகள் போல் அல்லாமல் இன்னும் சினிமா நடிகராகவே அவரது அன்றாட செயல்பாடுகள் இருப்பதாகக் கூறுகின்றனர் அவரது ஆதரவாளர்கள்.

சினிமாவில் நடிகர்கள் தங்களை ட்ரெண்டிங்கில் வைத்துக் கொள்வதற்கென்று இருக்கும் தொழில்முறை ட்விட்டர் ஏஜெண்டுகளுக்கு கப்பம் கட்டி தங்களைப் பற்றியும், ரிலீஸாக உள்ள தங்கள் படங்கள் பற்றியும் ட்விட்டரில் புகழுமாறு கூறுவார்கள். அவர்களும் கூச்சமின்றி குப்பைப் படங்களையும், கோமாளித்தனம் செய்யும் நடிகர்களையும் வானளாவப் புகழ்வார்கள். 260 நபர்கள் ஒரு செய்தியை ரீட்விட் செய்தால் அது ட்ரெண்டிங்கில் வந்துவிடும் என்கின்றனர் அதே வேலையாக இருப்பவர்கள்.

120 கோடி மக்கள்தொகை கொண்ட இந்தியாவில், 118 கோடி மொபைல் இணைப்புகள் இருப்பதாக புள்ளிவிபரத் தகவல் கூறுகிறது. இதில் 260 மொபைல் பயன்பாட்டாளர் ரீட்வீட் செய்தால் ட்ரெண்டிங் என்பது ஏமாற்று வேலை என சமூக வலைதளப் பயன்பாட்டாளர்கள் உரக்கக் கூறி விட்டார்கள். அது சினிமா துறையினரை பொறுத்தமட்டில் போகாத ஊருக்கு வழி சொன்ன கதையாகவே இன்று வரை உள்ளது. இது அரசியல்வாதியாக மாறியுள்ள கமல்ஹாசனுக்கும் தொற்றிக்கொண்டு விட்டதோ என சந்தேகப்பட வைக்கிறது அவரது சமீபத்திய செயல்கள்.

பணம் கொடுத்தால் ஒரு நடிகரைப் பற்றியோ, படத்தைப் பற்றியோ ட்விட்டரில் ஒரு நாளைக்கு இத்தனை டிவீட் எனப் போட்டு பத்திரிகையாளர்கள் என்ற பெயரில் வியாபாரம் செய்யும் சில நபர்களை கமல்ஹாசன் இன்று அவருடன் திருச்சிக்கு அழைத்துச் சென்றிருக்கிறார் எனப் பத்திரிகையாளர்கள் மத்தியில் பரபரப்பு கிளம்பியுள்ளது.
கோடிக்கணக்கான மக்கள் ஆதரவை வென்றெடுக்க வேண்டிய கமல்ஹாசன் இப்படியொரு மலிவான விளம்பர யுக்திக்கு எப்படி ஒப்புக்கொண்டார். பத்திரிகைகள் மூலமாகவும், டிவி மூலமாகவும் மக்கள் மனதில் இடம்பிடித்துவரும் கமல்ஹாசன், ட்விட்டர் ட்ரெண்டிங்கிற்காக இப்படி செய்வதை அவரைச் சுற்றியிருப்பதாக அவரே சொல்லும் அறிவார்ந்தவர்கள் எப்படி அனுமதித்தார்கள்?

இதனால், சினிமாவை புரமோஷன் செய்ய ஆசைப்படும் சிலரைப் போல கமல்ஹாசன், அவருடைய கட்சியை சமூக வலைதளங்கள் மூலம் புரமோஷன் செய்ய ஆசைப்படுகிறாரோ என்ற சந்தேகம் எழுவதில் ஆச்சர்யம் இல்லையல்லவா?

ட்விட்டரில் ட்ரெண்டிங்கில் வந்தால் தமிழக முதல்வராக மட்டுமல்ல வார்டு மெம்பராகக் கூட வெற்றி பெற முடியாது என்பதை கமல்ஹாசன் உணரும் வரை அவரும் அவரது கட்சியும் அரசியல் அரங்கில் தாக்குப் பிடித்திருக்க வேண்டுமே.
படங்கள்: மக்கள் நீதி மய்யம் ட்விட்டர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக