ஞாயிறு, 15 ஏப்ரல், 2018

சிறுமி ஆசிபா மரணத்தை கொண்டாடிய கேரளா ஆர் எஸ் எஸ் வங்கி அதிகாரி பதவி நீக்கம்


தினத்தந்தி :கொச்சி: காஷ்மீர் சிறுமி பலாத்காரம் செய்யப்பட்டு கொல்லப்பட்டது குறித்து சர்ச்சைக்குரிய கருத்தை பேஸ்புக்கில் பதிவிட்ட வங்கி ஊழியரை வங்கி நிர்வாகம் நீக்கியுள்ளது. காஷ்மீரில் காதுவா பகுதியில் முஸ்லிம் பழங்குடியினர் பிரிவைச் சேர்ந்த 8 வயது சிறுமி கூட்டு பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டது தெரியவந்தது. இந்தச் சம்பவத்துக்கு நாடு முழுவதும் பெரும் கண்டனக் குரல்கள் எழுந்துள்ளன. இந்தச் சூழலில் கேரள மாநிலம் கொச்சியில் உள்ள தனியார் வங்கியில் துணை மேலாளராகப் பணியாற்றி வந்த விஷ்ணு நந்தகுமார் காஷ்மீர் சிறுமி பாலியல் பலாத்காரம் சம்பவம் தொடர்பாகச் சமீபத்தில் அவரின் பேஸ்புக் பக்கத்தில் சர்ச்சைக்குரிய கருத்து பதிவிட்டிருந்தார். அதில் நல்லவேளை அந்தச் சிறுமி இந்தச் சின்ன வயதிலேயே கொல்லப்பட்டு விட்டார். இல்லாவிட்டால், வளர்ந்த பின் என்றாவது ஒருநாள் மனித வெடிகுண்டாக மாறி இந்தியாவுக்கு எதிராக மாறி விடுவார் என்று பதிவிட்டு இருந்தார் இந்தக் கருத்துக்கு அனைத்துத் தரப்பிலும் கடும் கண்டனங்கள் எழுந்தன. பேஸ்புக்கில் பலரும் விஷ்ணு கண்டித்து வாசகங்கள் எழுப்பினர். உடனடியாக விஷ்ணுவை வேலையில் இருந்து நீக்க வேண்டும் என்று பலர் வலியுறுத்தினார்கள்.
இதற்காக டுவிட்டரில் டிஸ்மிஸ் யுவர் மேனேஜர் என்று பிரத்யேகமாக ஹேஷ்டேக் ஒன்று உருவாக்கப்பட்டு வைரலானது. இந்த ஹேஷ்டேக்கை பயன்படுத்தி அந்தத் தனியார் வங்கியில் வாடிக்கையாளர்களாக இருக்கும் ஏராளமானோர் கடும் கண்டனத்தையும், விஷ்ணுவை டிஸ்மிஸ் செய்யவும் வலியுறுத்தினார்கள். இதனால் வங்கி நிர்வாகம் அதிர்ச்சியடைந்தது.
இதையடுத்து, வங்கி நிர்வாகத்தின் சார்பில் அறிக்கை வெளியிடப்பட்டது. அதில் வங்கியின் துணை மேலாளர் விஷ்ணு வேலையில் இருந்து நீக்கப்பட்டு விட்டார். வேலையில் மோசமாகச் செயல்பட்டதால் அவர் பணி நீக்கம் செய்யபட்டார். அவரின் சர்ச்சைக்குரிய கருத்துகள் அனைவரின் மனதையும் புண்படுத்தி விட்டது. இதை வங்கி நிர்வாகமும் கண்டிக்கிறது எனத் தெரிவிக்கப்பட்டது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக