வெள்ளி, 6 ஏப்ரல், 2018

ராஜராஜ சோழனின் பிரான்ஸ் மற்றும் சீன தேச தொடர்புகள்.. அசைக்க முடியாத ஆதாரங்கள்


Krishnavel T S : ராஜராஜ சோழனின் பிரான்ஸ் மற்றும் சீன தேச தொடர்புகள்
சிலநாட்களுக்கு முன் ஒரு யூ-டியுப் வீடியோ ஒன்றை பார்த்து பொறி கலங்கிவிட்டது எனக்கு.
ராஜராஜன் கட்டிய தஞ்சை பெரியகோயிலில், ஒரு ஐரோப்பியனின் சிலை, தொப்பி அணிந்து, காலர் வைத்த சட்டை போட்டுக்கொண்டு இருக்கிறது பாருங்கள், அது மட்டுமல்ல, மேலும் ஒரு நீண்ட மீசையுடன் ஒரு சீனதேசத்து மனிதரின் சிலையும் பாருங்கள்.
வேத சாஸ்திரப்படி, கோயில் கோபுரத்தில் மனிதர்கள் சிலையை வைக்க கூடாது, அரசர்களின் சிலை மற்றும் தெய்வங்களின் சிலையை மட்டுமே வைக்கலாம்.
அந்த ஐரோப்பியனின் சிலை அதே காலகட்டத்தில் வாழ்ந்த பிரான்ஸ் தேச மன்னனான இரண்டாம் ராபர்ட்டின் சிலை, அந்த சீன தேசத்தவர் டாங் அரசவம்சத்தி சேர்ந்த சீன மன்னரின் சிலை.
கிமு.1000 வருடத்திலேயே மேற்கிலும் கிழக்கிலும் கடல் கடந்து தமிழனின் தொடர்புகளை பாருங்கள் என்று கதறியிருந்தார்.
சோழர்கள் உச்சத்தில் இருந்த காலத்தில் அவர்கள் யாருமே ஐரோப்பிய தேசங்கள் பக்கம் தலைவைத்து கூட படுக்கவில்லை, என்பதே வரலாற்று உண்மை,

ஏனெனில் அந்த காலகட்டமான கிபி1095-1291-ல் மொத்த ஐரோப்பிய மன்னர்களும் போப் ஆண்டவர்கள் பேச்சை கேட்டுக்கொண்டு, சுமார் 300 வருன்டங்கள் சிலவை போர்களில் இடுபட்டு கொண்டிருந்த காலகட்டம் அது. பல ஐரோப்பிய மன்னர்கள் சோத்துக்கே சிங்கி அடித்துகொண்டிருந்த காலம் அது.
அந்த காலகட்டத்தில் பல மன்னர்கள், இப்போது இந்தியாவில் நடந்த டீமானிடைசேசனை ஒவ்வொரு வருடமும் செய்து கொண்டிருந்தார்கள் சிலவை போர் செலவை ஈடுகட்ட. அதாவது ஒவ்வொரு வருட முடிவிலும் மக்கள் தங்களிடம் உள்ள எல்லா தங்க, வெள்ளி, செம்பு காசுகளையும் கொண்டுவந்து அரசனிடம் கொடுத்துவிட்டு புதிய காசுகளை பெற்றுக்கொள்ளவேண்டும், புதிய காசு பழைய காசுகளை விட 10% எடை குறைவாக இருக்கும்.
இந்த சிலுவைபோரில் இருந்து தப்பிக்கவே இங்கிலாந்து முதலில் போப்பை எதிர்த்தனர்
இப்படி ஐரோப்பிய நாடுகள் முழுவதும் சிலுவைபோரில் சீரழிந்து கொண்டிருக்கும் போது ராஜராஜன் ஏன் அங்கே போய் வியாபாரத் தொடர்பை தேடப்போகிறான்.
அதுவும் போக பிரான்ஸ் மன்னர் ஏன் தொப்பி அணியவேண்டும் அவர் கிரீடம் அல்லவா அணிந்திருப்பார், ஒருவேளை சிலை செய்ய தெரிந்த ராஜராஜனின் சிற்பிகளுக்கு ஒரு மண்ணின் கிரீடம் செதுக்கத் தெரியவில்லையோ, என்று மண்டை குழம்பி சித்தம் கலங்கி போனேன்
சரி என்னடா இது தமிழனுக்கு வந்த சோதனை என்று பலதளங்களில் தேடிப்பார்த்தேன், என்ன செய்வது தமிழன் செய்த பாவம் இந்த பிரான்ஸ் தொடர்பு பற்றி எங்குமே இல்லை.
பின்னர் தஞ்சையில் உள்ள எனக்கு அண்ணன் போன்ற ஒருவரை தொடர்பு கொண்டு கேட்டேன். அவரது வழிகாட்டலில் பிறகு தான் தெரிந்தது, நான் தேடிய வருடமான கிபி1000 என்பது தவறு, கிபி1800-ல் தேடவேண்டும் என்று தெரிந்தது.
கடைசியில் விஷயம் வேறு ஒன்றும் இல்லை. கிபி.1800-ல் மராட்டிய அரசர்கள் தஞ்சையை ஆண்டபோது, அப்போதைய மராட்டிய அரசன் ராஜா இரண்டாம் சரபோஜியின் காலத்தில், கிழக்கிந்திய கம்பனியில் பணிபுரிந்த கர்னல் வில்லியம் லாம்டன் என்பவர் இருந்தார், மொத்த இந்தியாவையும் Trignometric Survey, என்ற முறையில் அளந்து இந்திய வரைபடத்தை உருவாக்கவேண்டும் என்பதே அவரது பணி. அவர் தஞ்சை பகுதியில் சர்வே செய்யவந்த போது. தியோடலைட்டு, என்ற சர்வே கருவியை பொருத்த சரியான உயரமான இடம் எதுவும் கிடைக்கவில்லை. தஞ்சை பகுதியே மொத்தமாக ஒரு சமதள பகுதி. இறுதியாக, தஞ்சை பெரியகோயிலின் கோபுரமே பொருத்தமான இடம் என்று தேர்வு செய்கிறார்.
அந்த கோபுரத்தில் இருந்து சுற்றிவுள்ள எல்லா ஊர்கள் மற்றும் கிராமங்களை எல்லாம் துல்லியமாக தனது வரிபடத்தில் குறிக்கும் பணியில் ஈடுபடுகிறார்.
அது எப்படி டெலஸ்கோப் போன்ற ஒருகருவியை வைத்து, உயரமான ஒரு இடத்தில் உட்கார்ந்துகொண்டு தொலைவில் உள்ள ஊர்களை ஒரு வரைபடத்தில் சரியான தூரத்தை அளவிடமுடியும் என்று கேட்பவர்கள் 10ஆம் வகுப்பில் கணிதப்பாடத்தில் திரிகோணமிதி சரியாக படிக்கவில்லை என்று அர்த்தம், மீண்டும் போய் பத்தாம் வகுப்பு கணிதபாடத்தை நன்றாக படிக்கவும்.
கர்னல் வில்லியம் லாம்டன், இந்த வரைபடம் தயாரிக்கும் பணியில் ஈடுபட்டிருந்த போது, எதிர்பாராத விதமாக, சுமார் அரை டன் எடையுள்ள அவரது தியோடலைட்டு, என்ற சர்வே கருவி மேலிருந்து கீழ விழுந்து, கோபுரத்தின் ஒரு பகுதியை சிதைத்து விட்டு உடைகிறது. தனது கருவியை சீர்செய்ய அவருக்கு பலமாதங்கள் ஆகிறது. அந்த காலகட்டத்தில் உள்ளூர் சிற்பிகளின் துணையுடன் அவரது சொந்த செலவில் கோபுரத்தையும் சீர்செய்கிறார், அப்போது தான் இந்த தொப்பிக்காரன் சிலை தஞ்சை பெரியகோயிலில் இடம்பெறுகிறது.
இந்த சம்பவத்தை பற்றி ஜூலை 1, 1970-ல் வெளியான Engineers Journal-ல் நூலில் தெளிவாக எழுதப்பட்டுள்ளது. இன்றைய இந்தியாவின் வரைபடத்தை உருவாக்கிதந்த, கர்னல் வில்லியம் லாம்டன் 1823-ல் இறந்தபிறகு வார்தாவில் அவருக்கு ஏற்படுத்தப்பட்ட நினைவிடம் இன்றும் உள்ளது.
என்னை கேட்டால் அந்த நினைவிடத்தைவிட, தஞ்சை கோயிலில் உள்ள சிலையே இந்திய நாட்டுக்கு அவர் செய்த பணிக்கான சிறப்பான அடையாளம்.
ஐரோப்பியன் சிலை பற்றிய விளக்கம் சரி, அந்த சீனதேசத்தவரின் சிலை யாரென்று கேட்டால், தஞ்சை பெரிய கோயிலின் லிங்கபீடத்தை அமைத்து கொடுத்த போகசித்தர் சிலைதான் அது என்று சொல்கிறார்கள், அது பற்றிய சரியான ஆவணங்கள் எனக்கு கிடைக்கவில்லை, நண்பர் பாலாஜி கிருஷ்ணமூர்த்தியின் உதவியை நாடுகிறேன்.
இதை பற்றி பல தளங்களில் தேடும்போது எனக்கு பல அதிர்ச்சிகள் ஏற்பட்டது, அதில் உச்சகட்ட கொடுமை, ஒரு வலைதளத்தில், தஞ்சை கோயிலின் மேலே உள்ள 80 டன் எடையுள்ள கல்லை, ராஜராஜனின் குருவாக இருந்த கருவூர்சித்தர், தனது அஷ்டமாசித்திகளில் ஒன்றான இலகிமா என்ற சக்தியை பயன்படுத்தி அந்த கல்லை பஞ்சை விட எடை குறைந்ததாக மாற்றி மேலே பறக்கவிட்டு, கோபுரத்தின் உச்சியில் அமரும்படி செய்தார் என்று போட்டிருந்தார்கள். நான் படித்த இயற்பியல் முதுகலை புத்தகங்கள் எதிலுமே 80 டன் பஞ்சுக்கு எடையே இருக்காது என்று போடவில்லை, என்னசெய்வது அந்த புத்தங்கள் எழுதிய இயற்பியல் அறிஞர்கள் யாரும் வேத அறிவியல் படிக்கவில்லையே
அந்த கோயில் கட்ட ஏலியன்கள் ராஜராஜனுக்கு உதவினர் என்று மட்டும் தான் இன்னும் யாரும் பதிவு போடவில்லை
------------------------
“தெரிந்த வரலாற்றின் தெரியாத பக்கங்கள்” என்ற எனது நூலின் ஒரு பகுதியே மேலே உள்ள கட்டுரை.
-------------------------------------------------------------------------------------
ஐயா சு.ப.வீ அவர்களால், தோழர் மதிமாறன் முன்னிலையில் வெளிடப்பட்டு ஆசிரியர் வீரமணி அவர்களால் பாராட்டப்பட்ட நூல்.
ஐயா சு.ப.வீ அவர்கள் இந்த நூல் குறித்து பேசிய காணொளி இந்த சுட்டியில் காணலாம் https://goo.gl/xzQp6A
--------------------------------------------------------------------------------------
தெரிந்த வரலாற்றின் தெரியாத பக்கங்கள் நூல் – முதல் பதிப்பின் கடைசி 50 பிரதிகள் மட்டுமே மிச்சம் உள்ளது, இன்றும் நாளையும் அதை வாங்கும் 50 நண்பர்களுக்கு ஐயா சுபவீ அவர்களின் “இது தான் ராமராஜ்ஜியம்” நூல் இலவசமாக சேர்த்து அனுப்பிவைக்கப்படும்.
.
.
.
நண்பர்கள் https://bit.ly/2GLuIKP இந்த சுட்டியை பயன்படுத்தி நூல்களை பெற்றுக்கொள்ளலாம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக