வெள்ளி, 20 ஏப்ரல், 2018

குஜராத் நரோடா பாட்டியா படுகொலை வழக்கு : குற்றவாளி பாஜக அமைச்சர் மாயா கோட்னானி விடுதலை !

நரோடா பாட்டியா படுகொலை வழக்கில், அக்கலவரத்தை முன்னின்று நடத்திய முக்கியக் குற்றவாளியான, பா.ஜ.க. அமைச்சர் மாயா கோட்னானியை விடுதலை செய்திருக்கிறது, குஜராத் உயர்நீதிமன்றத்தின் அமர்வு. By வினவு:

மாயா கோட்னானி
பாபு பஜ்ரங்கி
குஜராத் 2002 முசுலீம் மக்கள் மீதான இனப்படுகொலையில் முக்கியமான வழக்கு நரோடா பாட்டியா படுகொலை வழக்கு. குஜராத் உயர்நீதிமன்றத்தின் அமர்வு, வெள்ளி (20.04.2018) அன்று முன்னாள் பா.ஜ.க. அமைச்சர் மாயா கோட்னானியை விடுதலை செய்திருக்கிறது. பாபு பஜ்ரங்கியை மட்டும் குற்றவாளியென அறிவித்திருக்கிறது.
இதே வழக்கில் மாயா கோட்னானி குற்றவாளி என அவருக்கு  விசாரணை நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்திருந்தது. இந்துமதவெறியர்களால் கொலை செய்யப்பட்ட முசுலீம்கள் பலர் தொடுத்திருந்த வழக்குகளை வைத்து உச்சநீதிமன்றம் நியமித்த சிறப்பு புலனாய்வுக் குழு நடத்திய வழக்கு இது. தற்போது விசாரணை நீதிமன்றத்தின் அரை குறை தீர்ப்பையும் ரத்து செய்திருக்கிறது உயர்நீதிமன்றம். விசாரணை நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்ட 11 குற்றவாளிகள் தொடுத்திருந்த மனு மீதான தீர்ப்பில்தான் குஜராத் உயர்நீதிமன்றம் இத்தீர்ப்பினை அளித்திருக்கிறது.



பாபு பஜ்ரங்கி மற்றும் சுரேஷ் டாங்டோவை மட்டும் குற்றவாளிகளென தீர்ப்பளித்த நீதிமன்றம், மாயா கோட்னானியின் உதவியாளர் கிர்பால் சிங் சாப்தாவையும் விடுதலை செய்திருக்கிறது. இவரும் முன்னர் விசாரணை நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்டவர்.
ஹர்ஷா தேவானி மற்றும் ஏ.எஸ். சுபிஹியா அடங்கிய உயர்நீதிமன்ற அமர்வு கடந்த ஆகஸ்டில் இவ்வழக்கை எடுத்துக் கொண்டு தீர்ப்பளிப்பதாக அறிவித்திருந்தது. விசாரணை நீதிமன்றத்தின் தீர்ப்பில் விடுதலை செய்யப்பட்ட எழுவரை தண்டிக்குமாறும், குற்றவாளியென தீர்ப்பளிக்கப்பட்ட மூவரின் தண்டனையை அதிகப்படுத்துமாறும் இந்த மேல் முறையீட்டில் சிறப்பு புலனாய்வுக் குழு வாதிட்டது. நரோடா பாட்டியா படுகொலையில் மொத்தம் 97 முஸ்லீம்கள் படுகொலை செய்யப்பட்டனர்.
சோராபுதின் என்கவுண்டர் கொலை வழக்கில் இருந்து அமித்ஷா விடுதலை, பல்வேறு குண்டுவெடிப்பு வழக்குகளில் இருந்து அசீமானந்தா – பிரக்யா சிங் விடுதலை, குஜராத் போலீஸ் அதிகாரி வன்சாரா விடுதலை என அனைத்து வழக்குகளில் இருந்தும் இந்துமதவெறியர்கள் விடுதலை செய்யப்படுகின்றனர். மோடி ஆட்சியில் நீதித்துறை படுவேகமாக காவித்துறையாக மாறி வருகிறது. பார்ப்பன பாசிச அபாயத்திற்கு இதைவிட வேறு என்ன அறிவிப்பு வேண்டும்?
– வினவு செய்திப் பிரிவு.
நரோடா பாட்டியா படுகொலை வழக்கு குறித்து முன்னர் வந்த எமது கட்டுரையில் இருந்து சில பத்திகள்:
அகமதாபாத் நகரின் கிழக்குப் பகுதியில் அமைந்துள்ள முசுலீம்களின் காலனியான நரோடா பாட்டியாவில் நடந்த இத்தாக்குதலின்பொழுது 97 பேர் கொல்லப்பட்டனர்.  இந்த 97 பேரில் 30 பேர் ஆண்கள்; 32 பேர் பெண்கள்; 35 பேர் குழந்தைகள் மற்றும் சிறுவர் சிறுமியர்.  இப்படுகொலையின்பொழுது கொல்லப்பட்டோரில் பெரும்பாலோர் கண்டம் துண்டமாக வெட்டப்பட்டு, குற்றுயிராகக் கிடந்த அவர்களின் மேல் மண்ணெண்ணெய் ஊற்றப்பட்டு எரித்துக் கொல்லப்பட்டனர்; பெண்கள் கும்பல் பாலியல் வன்முறைக்கு ஆளாக்கப்பட்டு, பின் தீவைத்துக் கொல்லப்பட்டனர்; இப்படி உயிரோடு எரித்துக் கொல்லப்பட்டவர்களுள் 20 நாட்களே ஆன ஒரு பச்சிளங்குழந்தையும், ஒன்பது மாத நிறை கர்ப்பிணியான கவுசர் பானுவும் அடக்கம்.
இப்படுகொலை வழக்கில் தண்டிக்கப்பட்டுள்ள 32 பேரில், அப்படுகொலை நடந்த சமயத்திலும் தற்பொழுதும் நரோடா பாட்டியா தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராகவுள்ள மாயாபென் கோட்னானி; குஜராத் மாநில பஜ்ரங்தள் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் பாபு பஜ்ரங்கி; பா.ஜ.க.வைச் சேர்ந்த அகமதாபாத் மாநகராட்சி மன்ற உறுப்பினர் கிஷன் கோரானி ஆகியோரோடு, விசுவ இந்து பரிசத்தைச் சேர்ந்த  பிபின் பாஞ்சால், அசோக் சிந்தி, சுரேஷ் சாரா உள்ளிட்டு, அவ்வமைப்பைச் சேர்ந்த ஏழு உள்ளூர் தலைவர்களும் அடக்கம்.
கோத்ரா ரயில் தீ விபத்து நடந்த மறுநாளே 10,000-க்கும் அதிகமான இந்து மதவெறிக் குண்டர்கள் நரோடா பாட்டியைச் சுற்றி வளைத்துத் தாக்குதல் நடத்திய சமயத்தில், அத்தொகுதியின் எம்.எல்.ஏ.வாக இருந்த கோட்னானி கைத்துப்பாக்கியோடு அப்பகுதியைச் சுற்றிசுற்றி வந்ததோடு, இந்து மதவெறி பயங்கரவாதிகளுக்குத் தேவையான ஆயுதங்களையும், மண்ணெண்ணெயையும் சப்ளை செய்தார். பெண்களையும் குழந்தைகளையும் தீயில் போட்டுத் துடிதுடிக்கக் கொன்ற வெறியாட்டத்துக்குத் தலைமை தாங்கிய மாயாபென் கோட்னானி ஒரு மகப்பேறு மருத்துவர் என்பது முரண்நகைக்கு எடுத்துக்காட்டு; அப்படிபட்ட ஈவிரக்கமற்ற கொலைகாரியை, மோடி தனது அமைச்சரவையில் குழந்தைகள் மற்றும் பெண்கள் நலத் துறையின் துணை அமைச்சராக்கி அழகு பார்த்தார் என்பது அவரது குரூரப் புத்திக்கு எடுத்துக்காட்டு.  இப்படுகொலையின் இன்னொரு தளகர்த்தாவான பாபு பஜ்ரங்கி, தான் எப்படியெல்லாம் முசுலீம் பெண்களையும், குழந்தைகளையும் துடிதுடிக்கக் கொன்றேன் என்பதை தெகல்கா இதழின் நிருபர் ஆஷிஷ் கேதான் எடுத்த இரகசிய பேட்டியில் எகத்தாளத்தோடு பட்டியலிட்டிருக்கிறான்.
மேலும் படிக்க:

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக