புதன், 4 ஏப்ரல், 2018

ஆசிரியையுடன் லெஸ்பியன் உறவு ... அனுமதிக்காத தாயைக் கொன்ற மகள்! டெல்லியில் ...

தினமணி :டெல்லி கவி நகர் பகுதியில் வசிக்கும் ராஷ்மி ராணா எனும் 21 வயதுப் பெண் கடந்த மார்ச் 9 ஆம் தேதியன்று தனது ஆசிரியையும், லெஸ்பியன் துணையுமான நிஷா கெளதமாவுடன் இணைந்து தன் அம்மா புஷ்பா தேவியை இரும்புத் தடியால் அடித்துக் கடுமையான காயங்கள் ஏற்படுத்தி இருக்கிறார். இது குறித்து ராஷ்மியின் தந்தை சதிஷ் குமார் சம்பவம் நடந்த அன்றே ‘தன் மனைவியை மகளும் அவளது லெஸ்பியன் துணையும் இணைந்து உயிருக்கு ஆபத்தான நிலையில் தாக்கியதாக் கூறி கவி நகர் காவல்நிலையத்தில் முதல் தகவல் அறிக்கை (FIR) பதிவு செய்திருக்கிறார். தற்போது உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த புஷ்பா தேவி மரணமடைந்ததைத் தொடர்ந்து இன்று ஆசிரியை நிஷாவும், தாயின் மரணத்துக்குக் காரணமாகி விட்ட மகள் ராஷ்மியும் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். 
காவல்துறை விசாரணையின் போது கொலைக்கான தூண்டுதலாக ராஷ்மி சொன்ன காரணம்;
தனக்கும் தனது ஆசிரியைக்கும் இருந்த லெஸ்பியன் உறவைத் தொடர்ந்து தனது தாய் கடுமையாக விமர்சித்து வந்ததாகவும், அது குறித்துப் பேசி தினமும் தன்னை டார்ச்சர் செய்து வந்ததாகவும். தாயின் தொடர் சித்ரவதைகளைத் தாங்க இயலாமல் தனது லெஸ்பியன் இணையும் ஆசிரியையுமான நிஷாவுடன் இணைந்து தாய் புஷ்பா தேவியை இரும்புத் தடியால் கடுமையாகல் தலையில் தாக்கியதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
தற்போது ராஷ்மியும், நிஷாவும் கைது செய்யப்பட்டு சிறையில அடைக்கப்பட்டுள்ளனர்.
இந்தியாவைப் பொறுத்தவை லெஸ்பியன் @ ஓரினச்சேர்க்கையாளர்கள் எனும் வரிசையிலான பாலியல் ஆர்வப் பிரிவினரை முறையாக அங்கீகரிக்கும் வழக்கம் இன்றும் கூட இல்லை. 'ஓரினச் சேர்க்கை​யாளர்கள், ஒருவர் பால் ஒருவர் முழு சம்மதத்துடன் அந்தரங்கமாக உறவில் ஈடுபடுவதும், இணைந்து வாழ நினைப்பதும் குற்றம் அல்ல’ என்று கடந்த 2009-ம் ஆண்டு பரபரப்பான தீர்ப்பை உச்ச நீதிமன்றம் வழங்கியது. இதற்கு நாட்டின் பல மாநிலங்களில் கடும் சர்ச்சை எழுந்தது. இதை எதிர்த்து பல்வேறு சமூக - மத அமைப்புகள் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. அந்த மனுவில், 'ஓரினச் சேர்க்கை நமது நாட்டின் கலாசார, மத கோட்பாடுகளுக்கு எதிரானது’ என்று குறிப்பிடப்பட்டு இருந்தது.
உச்ச நீதிமன்ற நீதிபதிகள் ஜி.எஸ்.சிங்வி, எஸ்.ஜே.முகோபாத்யாயா ஆகியோர் வழக்கை விசாரித்து, டெல்லி உயர் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை ரத்து செய்தனர். அதோடு, இந்திய தண்டனைச் சட்டம் 377-வது பிரிவின்படி ஓரினச் சேர்க்கை கிரிமினல் குற்றம் என்றும், இதற்கு ஆயுள் தண்டனை வரை விதிக்கலாம் என்றும் உத்தரவிட்டனர். மேலும், சர்ச்சைக்குரிய இந்த விவகாரத்தில் நாடாளுமன்றம் விவாதித்து ஒரு முடிவை எடுக்கலாம் என்றும் நீதிபதிகள் கருத்து தெரிவித்தனர். இந்தத் தீர்ப்பு ஓரினச்சேர்க்கை ஆர்வலர்களைத் துயரத்தில் ஆழ்த்தியுள்ளது. தீர்ப்பை எதிர்த்து அவர்கள் மறுஆய்வு மனு தாக்கல் செய்தனர்.
தேசிய எய்ட்ஸ் கட்டுப்பாட்டு துறை, மத்திய சுகாதாரத் துறை, குடும்ப நல துறை மூன்றும் கலந்தாலோசித்தன.
முடிவில், இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு-377 தடை செய்யப்பட்டது. அதனால், ஓரினச் சேர்க்கைக்கு சட்டபூர்வமான அங்கீகாரம் அளிக்கப்படவில்லை.
இருப்பினும், இரு ஆண்டுகளுக்கு முன்பு பஞ்சாப் மாநிலத்தில் இரு பெண்கள் திருமணம் செய்து கெண்டனர். இவர்களே இந்தியாவில் முதல் ஓரினச் சேர்க்கை தம்பதிகள். இப்படி பெற்றோர் மற்றும் உறவினர் சம்மதத்துடன் திருமணம் செய்து கொள்ளும் ஓரினச் சேர்க்கை தம்பதிகளும் அத்திப்பூத்தாற் போல இந்தியாவில் இருக்கத்தான் செய்கின்றனர்.
தோராயமாக 2006-ம் ஆண்டு கணக்குப்படி, இந்தியாவில் மட்டும் 24 லட்சம் ஓரினச் சேர்க்கையாளர்கள் இருப்பதாகக் கணக்கிடப்பட்டுள்ளதாகத் தகவல். இந்நிலையில் தலைநகர் டெல்லியில் நடைபெற்றுள்ள இந்த லெஸ்பியன் கொலை... அதிலும் தனது லெஸ்பியன் உறவை அங்கீகரிக்க மறுத்து தொடர்ந்து தன்னைக் கடுமையாக விமர்சித்த தாயை மகளே கடுமையாகத் தாக்கி அது கொலையில் முடிந்த சம்பவம், இந்திய அளவில் லெஸ்பியன் மற்றும் ஓரினச் சேர்க்கையாளர்களுக்கான சமூக அங்கீகாரம் குறித்த விவகாரங்களை மீண்டும் பேசுபொருளாக்கியிருக்கிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக