செவ்வாய், 3 ஏப்ரல், 2018

காவிரி வழக்கு : ‘ஸ்கீம்’ என்பது காவிரி மேலாண்மை வாரியம் இல்லை- உச்சிகுடுமி நீதிமன்றத்தின் துரோகம் ! தமிழக விவசாயிகள் அதிர்ச்சி



tamilthehindu :காவிரி வழக்கில் உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பில் குறிப்பிடப்பட்டுள்ள ‘ஸ்கீம்’ (செயல் திட்டம்) என்கிற வார்த்தைக்கு காவிரி மேலாண்மை வாரியம் இல்லை என தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா கூறியுள்ளார்.
காவிரி நீர் பங்கீடு தொடர்பான மேல்முறையீட்டு வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம் கடந்த பிப்ரவரி 16-ம் தேதி தீர்ப்பு வழங்கியது. அதில், “காவிரி நடுவர் மன்றம் வழங்கிய இறுதித்தீர்ப்பை செயல்படுத்த ‘ஸ்கீம்’ (செயல் திட்டம்) ஒன்றை 6 வாரங்களுக்குள் மத்திய அரசு ஏற்படுத்த வேண்டும்” என குறிப்பிட்டுள்ளது.
இதற்கு தமிழக அரசு, காவிரி நடுவர் மன்றம் தனது தீர்ப்பில் காவிரி மேலாண்மை வாரியம் மற்றும் காவிரி நீர் ஒழுங்காற்று குழு ஆகிய இரு அமைப்புகளையும் ‘ஸ்கீம்’ என குறிப்பிட்டுள்ளது. எனவே மத்திய அரசு காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்று வலியுறுத்தியது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்த கர்நாடக அரசு, உச்ச நீதிமன்றம் குறிப்பிடும் ‘ஸ்கீம்’ காவிரி மேலாண்மை வாரியத்தை குறிக்கவில்லை. இது தீர்ப்பை செயல்படுத்த காவிரி மேற்பார்வை ஆணையத்தையே குறிக்கிறது என தெரிவித்தது.
இதுதொடர்பாக மவுனம் காத்த மத்திய அரசு, உச்ச நீதிமன்றம் விதித்த காலக்கெடு மார்ச் 29-ம் தேதியுடன் நிறைவடைந்த நிலை யில் புதிய மனுவை தாக்கல் செய்தது. அதில், “உச்ச நீதிமன்றம் குறிப்பிட்டுள்ள ‘ஸ்கீம்’ என்பதன் பொருள் என்ன? அது காவிரி மேலாண்மை வாரியமாக இருந்தால், அதனை உருவாக்க கூடுதலாக‌ 3 மாதங்கள் கால அவகாசம் வழங்க வேண்டும் . கர்நாடகாவில் தேர்தல் நடைபெறுவதால் காவிரி மேலாண்மை வாரியம் அமைத்தால் சட்டம் ஒழுங்கு பாதிக்கப்படும்” என குறிப்பிட்டுள்ளது.

தமிழக அரசு தாக்கல் செய்த மனுவில், “உச்ச நீதிமன்ற உத்தரவை அவமதித்த மத்திய அரசு மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இதனால் தமிழக விவசாயிகளுக்கு காவிரி நீர் கிடைப்பது சிக்கலாக மாறியுள்ளது” என தெரிவித்துள்ளது. தமிழக அரசின் வழக்கறிஞர் உமாபதி நேற்று உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா அமர்வின் முன்பாக இந்த வழக்கை உடனடியாக விசாரிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தார்.
தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, “உச்சநீதிமன்ற தீர்ப்பில் குறிப்பிடப்பட்டுள்ள ‘ஸ்கீம்’ என்கிற வார்த்தைக்கு காவிரி மேலாண்மை வாரியம் என்பது பொருள் அல்ல. அது காவிரி நதிநீர் பிரச்சினைக்கு தீர்வு தரக்கூடிய மற்ற அம்சங்களையும் உள்ளடக்கியது. எனவே காவிரியில் இருந்து தமிழகத்திற்கு கிடைக்க வேண்டிய நீர் முழுவதும் கிடைக்கும் வகையில் உச்ச நீதிமன்றம் நடவடிக்கை எடுக்கும்” என வாய்மொழியாக தெரிவித்தார்.
இதையடுத்து மத்திய அரசுக்கு எதிராக தமிழக அரசு தொடர்ந்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கை வருகிற 9-ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது. அன்றைய தினம் காவிரி வழக்கில் உள்ள மற்ற விவகாரங்களும் விசாரணைக்கு ஏற்றுக் கொள்ளப்படும் என தெரிகிறது.
உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ராவின் ‘ஸ்கீம்’ குறித்த விளக்கம் தமிழக விவசாயிகளிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உச்ச நீதிமன்றம் இதே போக்கை அடுத்த விசாரணையிலும் பின்பற்றினால் காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது கேள்விக்குறியாக மாறிவிடும் என விவசாயிகள் தெரிவித்துள்ளனர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக