திங்கள், 9 ஏப்ரல், 2018

காவிரி: தமிழகமும் வஞ்சிக்கிறது புதுவை முதல்வர் நாராயணசாமி எடப்பாடி அரசுமீது குற்றச்சாட்டு ..

காவிரி: தமிழகமும் வஞ்சிக்கிறது!மின்னம்பலம்: காவிரி நதி நீர் பங்கீட்டில் கர்நாடகா மற்றும் தமிழகம் ஆகிய மாநிலங்களும் தங்களை வஞ்சிப்பதாகப் புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி குற்றம்சாட்டியுள்ளார்.
புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி நேற்று (ஏப்ரல் 8) செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது, “காவிரி மேலாண்மை வாரியம் தொடர்பாக தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது. மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி நடைபெற்ற உண்ணாவிரதத்தில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி மற்றும் துணை முதல்வர் பன்னீர்செல்வம் ஆகியோர் மத்திய அரசைச் சாடாமல் முந்தைய காங்கிரஸ் அரசு மீது குற்றம்சாட்டியுள்ளனர். இதை ஏற்றுக்கொள்ள முடியாது. பாஜக கூட்டணியின் அங்கமாக அதிமுக உள்ளது” என்று தெரிவித்தார்.

காரைக்கால் விவசாயிகளின் நலன் தங்களுக்கு முக்கியம் எனக் குறிப்பிட்ட அவர், “காரைக்கால் கடைமடைப் பகுதியாக இருப்பதால் வறட்சி என்றாலும், வெள்ளம் என்றாலும் அதிகம் பாதிக்கப்படுகிறது. தமிழகம், கர்நாடகாவில் இருந்து பெறும் காவிரி நீரில் உரிய விகிதாச்சாரத்தைக் காரைக்காலுக்குத் தருவதில்லை. தமிழகம், கர்நாடகம் ஆகிய இரண்டு மாநிலங்களும் புதுச்சேரியை வஞ்சிக்கின்றன” என்று குற்றம்சாட்டினார்.
“கர்நாடகாவில் காங்கிரஸ் ஆட்சி இருந்தாலும் எங்களுக்குக் கவலையில்லை. புதுச்சேரி விவசாயிகளின் நலன்தான் எங்களுக்கு முக்கியம். அவர்களைக் காக்கும் கடமையும் பொறுப்பும் புதுச்சேரி அரசுக்கு உண்டு” என்றும் அவர் தெரிவித்தார்.
காவிரி மீட்புப் பயணத்தில் பங்கேற்கவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். “திமுக செயல் தலைவர் ஸ்டாலின் காவிரியைக் காக்க வலியுறுத்தி திருச்சியில் இருந்து கடலூர் வரை மீட்புப் பயணம் மேற்கொண்டுள்ளார். இந்தப் பயணம் வரும் 11ஆம் தேதி காரைக்காலுக்கு வருகிறது. அதில் நான், காங்கிரஸ் தலைவர் அமைச்சர் நமச்சிவாயம், காரைக்காலைச் சேர்ந்த வேளாண் துறை அமைச்சர் கமலக்கண்ணன் ஆகியோர் பங்கேற்கிறோம். மத்திய அரசுக்கு எந்தளவுக்கு அழுத்தம் கொடுக்க முடியுமோ, அந்தளவுக்கு அழுத்தம் கொடுப்போம்” என்று நாராயணசாமி கூறியுள்ளார்.
“கடந்த 2014இல் பாஜக மத்தியில் ஆட்சிக்கு வந்தது முதல் தொடர்ந்து பெட்ரோல், டீசல் விலையை உயர்த்தி வருகிறது. காங்கிரஸ் ஆட்சியில் ஒரு பீப்பாய் கச்சா எண்ணெய் 145 டாலராக இருந்தது. அப்போது பெட்ரோல் ரூ.70க்கும், டீசல் ரூ.58க்கும் விற்பனை செய்யப்பட்டது. ஆனால், தற்போது ஒரு பீப்பாய் கச்சா எண்ணெய் விலை 65 டாலராகக் குறைந்தாலும் பெட்ரோல் ரூ.75க்கும், டீசல் ரூ.63க்கும் விற்பனை செய்யப்படுகிறது. கச்சா எண்ணெய் விலை குறைவு மூலம் ஆண்டுக்கு ரூ.2 லட்சம் கோடி லாபம் கிடைக்கிறது. உடனடியாக மத்திய அரசு பெட்ரோல் டீசலுக்கான வரியைக் குறைக்க வேண்டும்” என்று வலியுறுத்திய அவர், அனைத்துத் தரப்பினரையும் கலந்தாலோசித்த பின்னர் முழுமையான பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் என்று குறிப்பிட்டார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக