வெள்ளி, 6 ஏப்ரல், 2018

தஞ்சையில் மாணவர்கள் - போலீஸ் மோதல்!


தஞ்சையில் மாணவர்கள் - போலீஸ் மோதல்!மின்னம்பலம் :காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரி தஞ்சையில் மாணவர்கள் இரண்டாவது நாளாக இன்று (ஏப்ரல் 6) வகுப்புகளைப் புறக்கணித்துச் சாலை மறியலில் ஈடுபட்டபோது காவல் துறைக்கும் மாணவர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது..
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காதததைக் கண்டித்து நேற்று (ஏப்ரல் 5) தமிழகத்தில் முழு அடைப்பு போராட்டங்கள் நடைபெற்றன.. பல்வேறு கட்சியினர், விவசாய சங்கங்கள், வணிகர் சங்கங்கள் என அனைவரும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தஞ்சை மன்னர் சரபோஜி அரசுக் கல்லூரி மாணவர்களும் இந்திய மாணவர் சங்க மாவட்ட செயலாளர் அரவிந்த சாமி தலைமையில் வகுப்புகளைப் புறக்கணித்துப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இவர்களது போராட்டம் இன்றும் தொடர்கிறது சுமார் 500க்கும் மேற்பட்ட மாணவர்கள் கல்லூரி வாசலிலும், 300கும் மேற்பட்ட மாணவர்கள் தஞ்சாவூர் ஆற்றுப்பாலம் மற்றும் கல்லணை கால்வாய் பகுதிகளிலும் போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர்.

காவிரி மேலாண்மை வாரியம் அமையும்வரை போராட்டம் தொடரும் என்று அவர்கள் தெரிவித்துள்ளனர். போராட்டத்தில் மாணவ மாணவியரை போலீசார் வலுக்கட்டாயமாக இழுத்துச் சென்றதால் அங்கு சற்று நேரம் பதற்றம் நிலவியது.
மாணவர்கள் மட்டுமல்லாது மத்திய அரசைக் கண்டித்து இன்று பல்வேறு தரப்பினரும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். உயர் நீதிமன்ற வழக்கறிஞர்கள் காவிரி விவகாரத்தில் தமிழகத்தை வஞ்சிக்கும் மத்திய அரசைக் கண்டித்து நீதிமன்றப் புறக்கணிப்புப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமி சென்னையில் இன்று உண்ணாவிரதப் போராட்டத்தைத் தொடங்கியுள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக