புதன், 4 ஏப்ரல், 2018

திமுகவின் ஆரம்பகால தலைவர் மாதவன் மறைவு: தலைவர்கள் இரங்கல்!

செ.மாதவன் மறைவு: தலைவர்கள் இரங்கல்!மின்னம்பலம்: மறைந்த முன்னாள் அமைச்சர் செ.மாதவன் உடலுக்கு திமுக செயல்தலைவர் ஸ்டாலின் அஞ்சலி செலுத்தினார். மாதவன் மறைவுக்கு வைகோ, திருநாவுக்கரசர் உள்ளிட்ட தலைவர்களும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
முன்னாள் அமைச்சரும் திராவிட முன்னேற்றக் கழகத்தின் மூத்த முன்னோடியுமான செ.மாதவன் உடல்நலக்குறைவால் நேற்று (ஏப்ரல் 3) சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரியிலுள்ள அவரது இல்லத்தில் காலமானார். திமுக சார்பில் 1962 ஆம் ஆண்டு அப்போதைய திருக்கோஷ்டியூர் தொகுதியில் போட்டியிட்டு, திமுகவின் முதல் 15 எம்.எல்.ஏ.க்களில் ஒருவராக சட்டமன்றம் சென்றவர் செ.மாதவன். 1962, 1967, 1971, 1984 என 4 முறை எம்.எல்.ஏ.வாக இருந்துள்ளார்.
இதில் 1984 ஆம் ஆண்டு எம்.ஜி.ஆர். தலைமையிலான அதிமுக சார்பில் வென்றார். அதிமுகவின் பொருளாளராகவும் பதவி வகித்த மாதவன், எம்.ஜி.ஆர் காலமான பின் மீண்டும் திமுகவுக்குத் திரும்பினார். 1990 முதல் 1996 வரை மாநிலங்களவை உறுப்பினராகவும் இருந்தார்.

மாதவன் மறைவுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் சிங்கம்புணரி பகுதியில் வணிகர் சங்கங்கள் சார்பில் கடைகள் அடைக்கப்பட்டன. சென்னையிலிருந்து இன்று காலை சிங்கம்புணரி சென்ற திமுக செயல்தலைவர் ஸ்டாலின் மாதவன் உடலுக்கு அஞ்சலி செலுத்தினார். அவரது குடும்பத்துக்கு ஆறுதலும் தெரிவித்தார். மேலும் எ.வ.வேலு, கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமச்சந்திரன் உள்ளிட்ட முன்னாள் அமைச்சர்களும் அஞ்சலி செலுத்தினர்.
இதன்பிறகு செய்தியாளர்களிடம் பேசிய ஸ்டாலின், "திமுக தலைவர் கருணாநிதியின் நம்பிக்கை பெற்றவராக விளங்கியவர் மாதவன். அவரது மறைவு திமுகவுக்கு மிகப்பெரிய இழப்பாக அமைந்துள்ளது" என்று தெரிவித்தார்.
இறுதி ஊர்வலத்தில் திமுக செயல்தலைவர் ஸ்டாலின், தமிழக காங்கிரஸ் கமிட்டித் தலைவர் திருநாவுக்கரசர், முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா, பெரியகருப்பன் எம்.எல்.ஏ உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

மாதவன் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், "திராவிட இயக்கத் தூண்களில் ஒருவரும்,பேரறிஞர் அண்ணாவின் பாசத்திற்குரியவருமான செ.மாதவன் மறைவு திராவிட இயக்கத்துக்குப் பேரிழப்பாகும். 1962 ஆம் ஆண்டு திருப்பத்தூர் சட்டமன்றத் தொகுதி உறுப்பினராக வெற்றி பெற்ற அண்ணன் மாதவன், அந்த ஐந்தாண்டு காலத்தில் சட்டமன்றத்தில் எடுத்த வைத்த வாதங்கள், தொடுத்துத் தந்த புள்ளி விவரங்கள் கல்லூரி மாணவனான என்னை காந்தமெனக் கவர்ந்தது.1964, 65, 66 ஆண்டுகளில் அவர் பேசும் பொதுக்கூட்டங்களுக்கு தவறாமல் செல்வேன்.
1975 ஆம் ஆண்டு குருவிகுளம் ஒன்றியப் பெருந்தலைவராக இருந்த நான், ஒன்றிய அலுவலகத்தில் அன்றைய முதல்வர் டாக்டர் கலைஞர் அவர்களின் படத்தை அண்ணன் மாதவன் அவர்களைக் கொண்டு திறக்க வைத்து, விழா நடத்தினேன். அன்று என் இல்லத்திற்கு வந்து உணவருந்திச் சென்றார்.
இன்றைய காலகட்டத்தில் திராவிட இயக்கத்திற்கு ஆலோசனைகள் தரவேண்டிய நேரத்தில் மாதவன் மறைந்தார் என்ற செய்தி என்னை நிலைகுலையச் செய்தது. அவரது மறைவால் கண்ணீரில் தவிக்கும் உற்றார் உறவினர்களுக்கும், திராவிட இயக்கத் தோழர்களுக்கும் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் என் கண்ணீர் அஞ்சலியைத் தெரிவித்துக்கொள்கிறேன்" என்று கூறியுள்ளார்.
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் திருநாவுக்கரசர் வெளியிட்டுள்ள இரங்கல் குறிப்பில், முன்னாள் அமைச்சர் திரு.மாதவன் அவர்கள் இயற்கை எய்திய செய்தி கேட்டு அதிர்ச்சியும் வேதனையும் அடைகிறேன். திரு.மாதவன் அவர்கள் மிகச் சிறந்த பேச்சாளர், தலை சிறந்த நிர்வாகி, மிகச் சிறந்த அரசியல் தலைவர், நாகரிகமும், பண்பும், அன்பும் நிறைந்த, பழகுவதற்கு மிக இனிமையான மிகச் சிறந்த மனிதர். அவரது மறைவு அரசியல் உலகிற்கும் திராவிட இயக்கத்திற்கும் பேரிழப்பாகும்.
திரு.மாதவன் அவர்களின் மறைவிற்கு ஆழ்ந்த இரங்கலையும், அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினர், உறவினர்கள், நண்பர்கள் மற்றும் தி.மு.கவினருக்கு ஆழ்ந்த அனுதாபத்தையும் என் சார்பிலும், தமிழ்நாடு காங்கிரஸ் சார்பிலும் மிகுந்த வருத்தத்தோடு தெரிவித்து கொள்கிறேன்" என்று குறிப்பிட்டுள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக