திங்கள், 2 ஏப்ரல், 2018

தன்னுரிமை கேட்டால் காவிரி உரிமை வரும் ! தோழர் மருதையன்

காவிரி: தன்னுரிமை கேட்டால் தண்ணீர் உரிமை வரும்! மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசின் மீது தமிழக அரசு நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடுக்கப்போகிறதாம். நீதிமன்றமா அவமதிக்கப்பட்டிருக்கிறது? நீதிமன்றம்தான் தமிழகத்தை அவமதித்திருக்கிறது. இந்திய அரசு அவமதித்திருக்கிறது. குமுறிக் கொந்தளிக்கும் வண்ணம் தமிழகம் அவமதிக்கப்பட்டிருக்கிறது. காவிரிச் சிக்கலில் ஒருமுறை இருமுறையல்ல, நூறுமுறை அவமதிக்கப்பட்டிருக்கிறோம். இறுதித் தீர்ப்பு என்ற பெயரில் உச்ச நீதிமன்றம் வழங்கிய வஞ்சகத் தீர்ப்பைக்கூட அமல்படுத்த மறுக்கிறது மோடி அரசு.
கர்நாடகத் தேர்தல்தான் இதற்குக் காரணம் என்று இன்னும் இதற்கு விளக்கமளித்துக் கொண்டிருக்கிறார்கள் சில மூடர்கள். கர்நாடகத்தில் பாஜக வும் காங்கிரசும் வெற்றி பெற முடிவதால், காவிரிச் சிக்கலில் அக்கட்சிகள் கர்நாடகத்துக்கு ஆதரவான நிலை எடுப்பதாகவும், தமிழகத்தில் அவர்கள் வெற்றி பெற முடியாத நிலை இருப்பதனால்தான் நமக்கு நீதி கிடைக்கவில்லை என்றும் இந்த அநீதிக்கு பொழிப்புரை வேறு வழங்குகிறார்கள் சில அறிவாளிகள்.


பாஜக-வை காறி உமிழும் தமிழகத்தின் கழுத்தறுக்கும் மோடி
எனக்கு ஓட்டுப் போட்டால் பணம் தருவேன் என்று சொல்பவன் ஊழல் பேர்வழியென்றால், எனக்கு ஓட்டுப் போடாவிட்டால் தண்ணீரைத் தடுப்பேன் என்று கூறுபவன் கொலைகாரக் கிரிமினல். அத்தகைய கிரிமினல்களின் தேசியம்தான் பார்ப்பன இந்து தேசியம். பார்ப்பன இந்து மதம் சூத்திரனையும் பஞ்சமனையும் எப்படி நடத்துகிறதோ அப்படித்தான் தமிழகத்தை நடத்துகிறது டில்லி. இது வெறும் தண்ணீர் பிரச்சினை மட்டுமில்லை. தமிழினத்தின் மீது பார்ப்பன பாசிசம் கொண்டிருக்கும் ஜென்மப்பகை. அதன் விளைவுதான் தமிழகத்தின் மீதான இந்த அவமதிப்பு.
ஆணையம் அமைக்கப்படாததால் அவமதிக்கப்பட்டிருப்பது நீதிமன்றமல்ல. தீர்ப்பாயத்தின் இடைக்கால உத்தரவு, தீர்ப்பாயத்தின் இறுதித் தீர்ப்பு, தண்ணீர் திறந்து விடுமாறு பல முறை உச்ச நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுகள் போன்ற எதற்கும் எந்தக் காலத்திலும் கர்நாடக அரசு செவி சாய்த்ததில்லை. இருந்த போதிலும் அவை எதையும் தனக்கு இழைக்கப்பட்ட அவமதிப்பாக உச்ச நீதிமன்றம் கருதியதில்லை. நடவடிக்கை எடுத்ததுமில்லை. அப்படியொரு மானமோ மதிப்போ நீதிமன்றங்களுக்கு என்றைக்கும் இருந்ததில்லை.
“1992 டிசம்பர் 6 அன்று பாபர் மசூதியின் வாயிலில் பஜனை செய்யப்போகிறோம்” என்று கையில் கடப்பாரையை வைத்துக் கொண்டு, உச்ச நீதிமன்றத்துக்கு வாக்குறுதி கொடுத்தது பாரதிய ஜனதாக்கட்சி. “எந்த அசம்பாவிதமும் நடக்காது” என அன்றைய உ.பி மாநில பாஜக அரசின் முதல்வர் கல்யாண் சிங் உச்ச நீதிமன்றத்துக்கு உத்திரவாதம் அளித்தார். இதையெல்லாம் “நம்பி” உச்ச நீதிமன்றம் கடப்பாரை பஜனைக்கு அனுமதி அளித்தது. மசூதி இடிக்கப்பட்டது. நாடு முழுவதும் பல்லாயிரம் முஸ்லிம் மக்கள் படுகொலை செய்யப்பட்டார்கள். அந்த நீதிமன்ற அவமதிப்புக்கு கல்யாண் சிங் ஒரே ஒரு நாள் தண்டனை பெற்றார்.

பாபர் மசூதி இடிப்பிற்கு துணை நின்ற கல்யாண் சிங் செய்யாத நீதிமன்ற அவமதிப்பா?
பாபர் மசூதி இடிப்பு என்ற அந்தப் படுபாதகச் செயலின் பயனாக வாஜ்பாயி, மோடி, யோகி ஆதித்யநாத் உள்ளிட்ட அனைவரும் அதிகாரத்தில் அமர்ந்தனர். பாபர் மசூதி இடிப்பு குற்றத்தை சிறுபான்மை மக்கள் மீதான தாக்குதல் என்றோ, மதச்சார்பின்மை மீதான தாக்குதல் என்றோ சொல்வதற்குப் பதிலாக, “நீதிமன்ற அவமதிப்பு” என்று சித்தரிப்பது எத்தகைய அயோக்கியத்தனமோ அத்தகையதுதான், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மறுக்கும் மோடி அரசின் நடவடிக்கையை “நீதிமன்ற அவமதிப்பு” என்று சித்தரிப்பதும்.
கோடிக்கணக்கான விவசாயிகளுக்கும், தமிழ்ச்சமூகத்துக்கும், நெடிய பாரம்பரியம் மிக்க வேளாண்மையை அடிப்படையாகக் கொண்டு வளர்ந்த நாகரிகத்துக்கும் எதிராக இந்திய அரசு இழைத்திருக்கும் அவமதிப்பு குறித்துதான் நாம் கவலை கொள்ளவேண்டுமேயன்றி, ஊழலிலும் அதிகார முறைகேட்டிலும் பார்ப்பனத் திமிரிலும் ஊறி, நாறிக் கொண்டிருக்கும், நீதிமன்றம் என்ற அதிகார நிறுவனத்தின், இல்லாத மதிப்புக்காக அல்ல.
காவிரி ஒப்பந்தம் செல்லாதாம்! எனில், இந்தியா எனும் ஒப்பந்தம்?
இந்தியா என்பது முந்தாநாள் வெள்ளைக்காரனால் உருவாக்கப்பட்ட நாடு. 1947 இல் உருவாக்கப்பட்ட ஒரு ஒப்பந்தம். காவிரியும் காவிரிக்கரையில் தழைத்த வேளாண்மையும் மொழியும் கலையும் பண்பாடும் இந்தியாவை விடப் பன்னெடுங்காலம் மூத்த வரலாற்று உண்மைகள். பாரதமாதா ஒரு புனைவு. காவிரி அநீதி என்பது உண்மையின் மீது புனைவு ஆதிக்கம் செலுத்துவதால் நேர்ந்துள்ள அநீதி.
இந்திய அரசு வெளியிட்டுள்ள மாநிலங்கள் பற்றிய வெள்ளை அறிக்கையின்படி, 1947 ஆகஸ்டு 15 க்கு முன், இந்தியா என்றழைக்கப்படும் நிலப்பரப்பின் 52% பிரிட்டிஷ் ஆட்சின் கீழும், 28% 550 சமஸ்தானங்களின் கீழும், மீதி இடங்கள் சுயேச்சையான அரசுகள் அல்லது சமஸ்தானங்களின் கீழும் இருந்தன. காவிரி மட்டுமல்ல, கிருஷ்ணா, கோதாவரி உள்ளிட்ட எல்லா ஆறுகளும், இப்படி நூற்றுக்கணக்கான ஆட்சியதிகாரங்களின் கீழ் இருந்த நிலப்பரப்புகளின் வழியேதான் பாய்ந்திருக்கின்றன.
மைசூர் – மதறாஸ் இடையேயான காவிரி ஒப்பந்தம் போலவே, மற்ற ஆறுகளுக்கும் ஒப்பந்தங்கள் பல இருந்தன. அவை அனைத்தும் மதிக்கப்படும் என்ற அடிப்படையில்தான் இந்தியா என்ற ஒப்பந்தம் உருவானது. அன்று வேளாண்மையே முதன்மைத் தொழில். அது குறிப்பிட்ட வட்டாரம் சார்ந்தது, இனத்தைச் சார்ந்தது என்ற காரணத்தினால்தான், வேளாண்மையையும் நீர்ப்பாசனத்தையும் மாநிலப் பட்டியலில் வைத்திருந்தது பிரிட்டிஷ் ஆட்சி.
நாம் காவிரியின் மைந்தர்கள் பாரதமாதாவின் புத்திரர்கள் அல்ல!
மொழி, இனம் என்ற உண்மைகளை பாரதமாதா என்ற புனைவு வெறுத்தது. மொழிவழி மாநிலம், மொழி உரிமைகள் என்ற கருத்துகள் மீதே பார்ப்பன இந்து தேசியம் நஞ்சைக் கக்கியது. இந்தியை தேசிய மொழியாக்க முயன்றது. இவை அரசியல் நிர்ணய சபை விவாதத்திலிருந்து நாம் அறியக்கூடிய உண்மைகள். இந்து தேசியவாதிகள் கூட்டாட்சிக் கோட்பாட்டின் மீது கொண்டிருந்த வெறுப்பின் விளைவுதான் பாகிஸ்தான். இருப்பினும் ஆறுகளையும் நீர்ப்பாசனத்தையும் அரசியல் சட்டத்தின் மாநிலப்பட்டியலில் வைக்க நேர்ந்தது அவர்கள் மீது சுமத்தப்பட்ட தவிர்க்கவியலாதவொரு நிர்ப்பந்தம்.
பல மாநிலங்களைக் கடந்து பாயும் காவிரி போன்ற ஆறுகளின் மீது மாநிலங்கள் பெற்றுள்ள உரிமை என்பது இந்திய அரசியல் சட்டத்தால் வழங்கப்பட்டதல்ல. ஆறுகளின் மீதான மக்கட் சமூகத்தின் உரிமை என்பது அரசியல் சட்டத்துக்கும், மாநிலப் பிரிவினைக்கும் முந்தையது. அது அரசியல் சட்டம் போட்ட பிச்சையல்ல. மக்கட் சமூகங்கள் அனுபவித்து வந்த இறையாண்மை மிக்க உரிமை. அந்த உரிமைகளும், அவற்றின் அடிப்படையில் உருவாக்கப்பட்ட எண்ணற்ற நதிநீர் ஒப்பந்தங்களும் அங்கீகரிக்கப்படும் என்று வாக்களிக்கப்பட்டதன் அடிப்படையில்தான் இந்தியா என்ற “பெரிய ஒப்பந்தம்” உருவானது.
அந்த ஒப்பந்தத்தை நடைமுறையில் செல்லாக் காகிதமாக்கிவிட்டது தற்போதைய உச்ச நீதிமன்றத் தீர்ப்பு. 1924 மைசூர் – மதறாஸ் ஒப்பந்தம் தொடராது என்று 1947 க்கு முன் ஒருவேளை கூறப்பட்டிருந்தால், இந்தியாவை விட காவிரி முக்கியம் என்ற முடிவுக்கு தமிழக மக்கள் வந்திருப்பார்கள்.

சீறிப் பாயும் காவிரி !
கூட்டாட்சிக் கோட்பாட்டின்படி, ஒரு மாநிலம் என்பது அரை இறையாண்மையைக் கொண்ட (quasi sovereign) தேசம். தேசிய இனத்தின் அடிப்படையில் அமைகின்ற தனி நாட்டின் இன்னொரு வடிவம்தான் மாநிலம். ஒன்றிய அரசின் அரசியல் சட்டத்தின் கீழ் மைய அதிகாரம் என்று வரையறுக்கப்பட்டவை தவிர்த்த அனைத்தும் மாநிலங்களின் அதிகாரத்துக்கு உட்பட்டவைதான். அதனால்தான் மாநிலங்களுக்கு இடையிலான நதிநீர் சிக்கல்களைத் தீர்ப்பதற்கும் சர்வதேச விதிகளான ஹெல்சிங்கி விதிகள் போன்றவற்றை இந்திய நதிநீர் தீர்ப்பாயங்களும் நீதிமன்றங்களும் பயன்படுத்துகின்றன.
இருப்பினும் கர்நாடக அரசு மட்டுமின்றி, இந்திய அரசும், உச்ச நீதிமன்றமும் இந்த சர்வதேச விதிகள், நெறிகள் ஆகிய எதுவும் தங்களைக் கட்டுப்படுத்தாது என்றும், தமிழகத்தை தீண்டாச்சேரியாக நடத்தும் புதிய வகை மனுநீதிதான் தங்கள் சட்டம் என்றும் கூறுகின்றன. அக்கிரகாரங்கள் சேரிகளைப் பிரித்து தனிநாடாக்கியிருப்பது போலவே, இந்திய அரசு தமிழகத்தையும் தனி நாடாக்கியிருக்கிறது.
நெறி கெட்ட ஒருமைப்பாட்டை சுமப்பதற்கு தமிழகம் நளாயினி அல்ல!
மீண்டும் சொல்கிறோம். இந்தியா என்பது ஒரு ஒப்பந்தம். பல்வேறு இனங்களைச் சேர்ந்தவர்களாயினும், உழைக்கும் வர்க்கத்தினரை பொது எதிரிக்கு எதிராக ஒன்றுபடுத்தவேண்டும் என்ற ஒரு நோக்கத்தைத் தவிர வேறு எந்தப் புனித நோக்கத்துக்காகவும் நாம் ஒருமைப்பாட்டை விரும்பவில்லை. புருசனை வைப்பாட்டி வீட்டுக்குச் சுமந்து சென்ற நளாயினியைப்போல நாம் தேசிய ஒருமைப்பாட்டை சுமக்கத்தேவையில்லை.
கல்லானாலும் கணவன் என்ற புனிதக்கோட்பாடு எப்படி மோசடியானதோ அத்தகையதுதான் சமத்துவமும் சமநீதியும் இல்லாத தேசிய ஒருமைப்பாடு. இந்திய அரசு வகுத்த சட்டத்தை, இந்திய நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை அமல்படுத்துவதற்கு அவர்களே மறுக்கும்போது, இந்திய அரசின் அதிகாரத்துக்கும், சட்டங்களுக்கும் தமிழகம் கட்டுப்பட வேண்டுமெனக் கூறும் உரிமையோ அருகதையோ இந்திய அரசுக்கும், உச்ச நீதிமன்றத்துக்கும் கிடையாது. தன்னுரிமை என்பது ஒரு தேசிய இனத்தின் உரிமையை உத்திரவாதப்படுத்தும் அடிப்படை உரிமை. தன்னுரிமைக்கு குரல் கொடுப்பதன் மூலம், இந்திய அரசின் ஒருமைப்பாட்டு மாய்மாலத்துக்கும் பாரதமாதா பஜனைக்கும் நாம் முடிவு கட்டவேண்டும்.
“முறித்துக்கொண்டால் தண்ணீர் வந்துவிடுமா?“ என்று குறுக்குக் கேள்வி கேட்பார்கள். வருமா, வராதா என்பது எதிர்காலத்தில்தான் தெரியும். அதே நேரத்தில், வராது என்பதைத்தான் சேர்ந்திருந்த காலம் உணர்த்தியிருக்கிறது. படிப்படியாக காவிரி உரிமையை இழந்திருக்கிறோம் என்பதுதான் ஐம்பதாண்டு வரலாறு காட்டும் உண்மை. 1924 இல் 575.68 டி.எம்.சி, 1984 வரை சராசரி 361, 1991 இடைக்காலத் தீர்ப்பில் 205, 2007 தீர்ப்பாயத்தின் இறுதித் தீர்ப்பில் 192, 2018 உச்ச நீதிமன்ற இறுதித் தீர்ப்பில் 177.25 டி.எம்.சி. இது தான் தமிழகத்துக்கு தேசிய ஒருமைப்பாடு அளித்திருக்கும் பரிசு.
எல்லா ஆறுகளுக்கும் மேலாண்மை வாரியம்! தமிழகம் மட்டும் தீண்டாச்சேரி!
கடைசியாக 177.25 டி.எம்.சி. தண்ணீரையாவது உத்திரவாதப் படுத்துவதற்கு மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்று தமிழகம் கோருகிறது. இதனை மறுத்து கர்நாடக அரசின் தலைமைச் செயலர் மத்திய நீர்வளத்துறைக்கு கடிதம் எழுதுகிறார்:
“உச்ச நீதிமன்றம் திட்டம் வகுக்குமாறுதான் கூறியிருக்கிறது, மேலாண்மை வாரியம் அமைக்கச் சொல்லவில்லை. மேலாண்மை வாரியம் அமைக்குமாறு காவிரி தீர்ப்பாயம் கூறியதும்கூட பரிந்துரைதான், அது உத்தரவல்ல. காவிரி முடிவு அமலாக்க குழு வேண்டுமானால் அமைக்கலாம், அது பேரிடர் காலத்தில் நீர் பகிர்வை நிர்ணயிக்கலாம். ஆண்டுக்கு 177.25 டி.எம்.சி என்பதற்கு மேல், கர்நாடகம் தனது எல்லைக்குட்பட்ட உபரி நீரை எப்படி கையாள்கிறது என்பது குறித்துக் கேட்கும் உரிமை தமிழகத்துக்கு இல்லை. மேலாண்மை வாரியம் என்பதே கூட்டாட்சித் தத்துவத்துக்கு எதிரானது” என்று கூறுகிறது கர்நாடக அரசின் அந்தக் கடிதம். கர்நாடக அரசின் கடிதத்தில் கண்டுள்ள கருத்தை சென்ற ஆண்டே உச்ச நீதிமன்றத்தில் சொல்லி விட்டது மோடி அரசு. மேலாண்மை வாரியம் அமைக்குமாறு உத்தரவிடுவதற்கு உச்ச நீதிமன்றத்துக்கு அதிகாரம் இல்லை என்றார் மத்திய அரசின் தலைமை வழக்கறிஞர் முகுல் ரோத்கி.
மேலாண்மை வாரியத்தை கர்நாடக அரசு எதிர்ப்பதற்கு காரணங்கள் இருக்கின்றன. பொதுவான அமைப்பு அணை நீரை மேலாண்மை செய்தால் காவிரி கர்நாடகத்துக்கு சொந்தமான ஆறாக இல்லாமல் நான்கு மாநிலங்களுக்கும் சொந்தமானது என்று ஆகிவிடும். பற்றாக்குறை என்ற பொய்யும் அம்பலமாகிவிடும் என்பதே கர்நாடக அரசின் எதிர்ப்புக்குக் காரணம். மைய அரசும் உச்ச நீதிமன்றமும் நடுநிலை பிறழ்வதற்கு என்ன காரணம்? ஏன் தமிழகத்துக்கு மட்டும் தனி நீதி?
கிருஷ்ணா, கோதாவரி, துங்கபத்ரா, மகாநதி, நர்மதை, யமுனை, ரவி, பியாஸ் முதலான பல ஆறுகள் ஒரு பொதுவான அமைப்பால் மேலாண்மை செய்யப்படும்போது, அந்த நீதி காவிரிக்கு மட்டும் ஏன் பொருந்த மறுக்கிறது?
பற்றாக்குறையோ, உபரியோ அவற்றை உரிய விகிதத்தில் பகிர்ந்து கொள்வது என்பதுதான் சர்வதேச நியதி. மகாராட்டிரத்தில் உற்பத்தியாகும் கிருஷ்ணா நதியின் உபரி நீரை மகாராட்டிரம், கர்நாடகம், ஆந்திரம் ஆகிய மூன்று மாநிலங்களும் எப்படி பகிர்ந்து கொள்வது என்று தீர்ப்பளித்திருக்கிறது கிருஷ்ணா தீர்ப்பாயம். மராட்டியத்தில் உற்பத்தியாகும் கிருஷ்ணா நதியின் உபரி நீருக்காக வாதாடும் கர்நாடகம், காவிரியின் உபரி நீரைப் பற்றிப் பேசும் உரிமை தமிழகத்துக்கு கிடையாது என்கிறது. உச்ச நீதிமன்றமும் இந்திய அரசும் கள்ள மவுனம் சாதிக்கின்றன.
சிந்து, ஜீலம், சீனாப் ஆறுகள் உற்பத்தியாகும் இடம் இந்தியாவில் இருப்பதால், இந்தியாவின் எல்லைக்குட்பட்ட உபரி நீரைப் பற்றி பாகிஸ்தான் பேச முடியாது என்று இந்தியா கூற முடியாது. பாகிஸ்தானுக்கு இழைக்க முடியாத அநீதியை, தமிழகத்துக்கு இழைக்கிறது இந்திய அரசு.

ஆற்றைப் பிரிப்பது பிரிவினையில்லையாம்! நாட்டைப் பிரிப்பதுதான் பிரிவினையாம்!
ஆற்றைப் பிரிப்பதென்பது பருவக் காற்றைப் பிரிப்பதாகும், மழையைப் பிரிப்பதாகும். நிலத்தைத்தான் எல்லையிட்டுப் பிரிக்க முடியுமேயன்றி காற்றையோ, மழையையோ அவ்வாறு பிரிப்பது இயற்கை நியதிக்கே எதிரானது.
ஒருவேளை, கர்நாடகம் இந்தியாவிலிருந்து பிரிந்து தனி நாடாகப் போக விரும்பினால் அதனை கன்னட இனத்தின் தன்னுரிமை என்று அங்கீகரிக்கலாம். ஆனால் காவிரி, கிருஷ்ணா, கோதாவரி, மகதாயி ஆறுகளைத் தன் விருப்பம் போல அணை கட்டித் தடுக்கும் உரிமையோ, “எங்கள் ஊரில் பெய்த மழைநீர் எனக்குத்தான் சொந்தம்” என்று சொந்தம் கொண்டாடும் உரிமையோ கர்நாடகத்துக்குக் கிடையாது. ஆற்றின் தலைப்பகுதியில் இருக்கும் எந்தவொரு நாட்டுக்கும் அத்தகைய உரிமையை சர்வதேச விதிகள் அனுமதிக்கவில்லை.
ஒரு தனிநாட்டின் அரசு இழைக்க முடியாத அநீதியை டில்லியின் துணையுடன் கர்நாடகம் இழைக்கிறது. தமிழகம் தன்னுரிமை கோருவதற்கு முன்னரே, பிரிவினையை இந்தியா அமல்படுத்தத் தொடங்கிவிட்டது.
கர்நாடகம் பற்றாக்குறை மாநிலம் என்பது பொய்!
காவிரி நீர்ப்பிரச்சனை என்பது தண்ணீர் பற்றாக்குறை தோற்றுவித்த குழாயடிச் சண்டையல்ல. கர்நாடகம் நீர்வளம் குறைந்த மாநிலமும் அல்ல. தனது அநீதியான தீர்ப்பை நியாயப்படுத்தம் பொருட்டும், தமிழகத்தின் தண்ணீர் பங்கைக் குறைக்கும் பொருட்டும், நீர்வளம் கொழிக்கும் அந்த மாநிலத்தை தண்ணீருக்குத் தவிக்கும் மாநிலம் போல சித்தரிக்கிறது உச்ச நீதிமன்றம்.

தமிழின விரோதிகள் சுப்பிரமணிய சுவாமியும் மோடியும்!
கிருஷ்ணா, துங்கபத்ரா, கோதாவரி, மகதாயி, காவிரி உள்ளிட்ட பல ஆறுகளிலிருந்து கர்நாடகத்துக்கு கிடைக்கின்ற சராசரி நீரின் அளவு மட்டும் ஆண்டுக்கு 1690 டி.எம்.சி. கர்நாடகத்தில் துங்க பத்திரை ஆற்றில் கட்டப்பட்டுள்ள ஹொஸ்பேடே நீர்த்தேக்கத்தின் கொள்ளளவு 132 டி.எம்.சி. கிருஷ்ணாவின் குறுக்கே கட்டப்பட்டுள்ள அலமாட்டி நீர்த்தேக்கத்தின் கொள்ளளவு 120 டி.எம்.சி. இவை இரண்டு எடுத்துக் காட்டுகள் மட்டுமே. இன்னும் காவிரியில் கபினி, ஹேரங்கி, கிருஷ்ணராஜசாகர் உள்ளிட்ட பல அணைக்கட்உகள். தமிழகத்திலோ ஆகப்பெரிய நீர்த்தேக்கமான மேட்டூரின் கொள்ளளவே 93 டி.எம்.சி தான். அடுத்த பெரிய நீர்த்தேக்கமான பவானிசாகரின் கொள்ளளவு 33 டி.எம்.சி. மற்றவையெல்லாம் சிறிய அணைகள். நிலத்துக்கு மேல் இருக்கும் இந்த உண்மைகளையெல்லாம் புறக்கணித்து விட்டு, தமிழகத்தின் நிலத்துக்கு அடியில் பெரும் நீர்வளம் இருப்பதாக கண்டுபிடித்திருக்கிறது உச்ச நீதிமன்றம்.
கீழ்ப்பகுதி உரிமையை மேல் பகுதி தடுத்தால், அதன் பெயர் அணைக்கட்டு அல்ல, திருட்டு!
தென்மேற்குப் பருவக்காற்று மேற்குத் தொடர்ச்சி மலையால் தடுக்கப்படுவதால்தான் கேரளத்திலும் கர்நாடகத்திலும் மழை அபரிமிதமாகப் பொழிகிறது. மலையின் கிழக்குப்புறம் இருக்கும் தமிழகம் மழை மறைவுப்பகுதியாகிவிட்ட போதிலும், சமவெளியான தமிழகத்தை நோக்கி அந்த மழைநீர் ஆறுகளாக ஓடிவருகிறது. மேற்கு நோக்கி ஓடும் கர்நாடகத்தின் ஆறுகள் சுமார் 2000 டிஎம்சி தண்ணீரை அரபிக்கடலுக்கு கொண்டு சேர்க்கின்றன. கிழக்கு நோக்கி ஓடி வரும் ஆறுகளான காவிரி, கிருஷ்ணா, கோதாவரி போன்றவைதான் தமிழகத்திலும் ஆந்திரத்திலும்சமவெளிப்பகுதியின் விவசாயத்துக்கு ஆதாரமாகின்றன.
தண்ணீர் மலையிலிருந்து சமவெளிக்கு இறங்குவது இயற்கை விதி. அதனை இறங்க விடாமல் தலைப்பகுதியிலேயே ஆற்றைத் தடுத்து நிறுத்துகிறது கர்நாடக அரசு. இது தமிழகத்துக்கு இழைக்கப்படும் அநீதி மட்டுமல்ல, இயற்கைக்கும் பல்லுயிர்ச்சூழலுக்கும் எதிரான வன்கொடுமை.
ஆற்றின் தலைப்பகுதிகளைக் காட்டிலும் கீழேயுள்ள சமவெளிப் பகுதிகளில் விவசாயம் செழிப்பதென்பது உலகெங்கும் காணப்படும் நியதி. ஆற்றின் கரையோரம் உள்ள நாடுகள் வேளாண்மையில் முன்னேறியிருப்பதும், பின்தங்கிய நாடுகள் புதிதாக வேளாண்மையைத் தொடங்கும்போது தண்ணீர்ப் பங்கீட்டில் முரண்பாடு தோன்றுவதும் இயல்பே.
ஆற்றின் கீழ்ப்பகுதியில் உள்ளவர்களுக்கான பயன்பாட்டு உரிமையை (Lower riparian right) அணைகள் கட்டுவதன் மூலம் மேல் பகுதியில் உள்ளவர்கள் பறித்து விட முடியும் என்ற காரணத்தினால்தான், எல்லா நதிநீர் ஒப்பந்தங்களிலும் தலைப்பகுதியில் உள்ளவர்கள் மீது கூடுதல் கட்டுப்பாடுகள் விதிக்கப்படுகின்றன. இதுதான் சர்வதேச நியதி. சிந்து நதி ஒப்பந்தத்தில் பாகிஸ்தானைக் காட்டிலும் இந்தியா மீதான கட்டுப்பாடுகள்தான் அதிகம். 1924 ஒப்பந்தத்தில் மைசூர் மீது விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகளும் அத்தகையவையே. இது தமிழகத்துக்கு சேரவேண்டிய நீரை, மேல் பகுதியில் இருக்கும் கர்நாடகம் திருடிக்கொள்ளாமல் இருப்பதற்கு விதிக்கப்படும் கட்டுப்பாடு.
“நியாயமான பகிர்வு” என்ற நீதிமன்றத் தீர்ப்பில் மறைந்திருக்கும் அநியாயம்!
ஆற்றின் மேல் பகுதியில் உள்ள நாடுகள், கீழே உள்ள நாடுகளுக்குரிய தண்ணீரை அபகரிக்க நினைக்கும்போது, அவர்கள் ஹெல்சிங்கி விதிகள் வலியுறுத்தும் Lower riparian right என்பதைப் புறந்தள்ளி, நியாயமான பகிர்வு (equitable sharing) என்ற கோட்பாட்டை வலியுறுத்துகிறார்கள். “நியாயமான” என்ற சொல்லை வலியவனும் ஆதிக்கத்தில் இருப்பவனும் தனது நலனுக்கு ஏற்ப வளைத்து விளக்கம் சொல்லிக்கொள்ள இயலும் என்பதே இதற்குக் காரணம்.
ஆற்றின் தலைப்பகுதியில் இருக்கும் பின்தங்கிய நாடுகள் காலப்போக்கில் வளர்ச்சியடைந்து, அவர்களின் தண்ணீர்த் தேவை அதிகரிக்கும் சூழல் ஏற்படும்போது என்ன செய்வது என்ற கேள்விக்கும் தீர்வு காணப்பட்டிருக்கிறது. கீழ்ப்பகுதியில் இருப்பவர்களின் நலனுக்கு பாரிய பாதிப்பு ஏற்படாத வண்ணம் ஒரு சமரசத் தீர்வை எட்டுவது என்பதே அந்தத் தீர்வு. இத்தகையதொரு தீர்வினை எட்டும்பொருட்டுத்தான் குறிப்பிடத்தக்க தீங்கு விளைவிக்காத (causing no significant harm) நீர்ப்பகிர்வு முறை என்ற கோட்பாடு பயன்படுத்தப்படுகிறது.
ஹெல்சிங்கி விதிகளைப் பின்பற்றவில்லையெனினும், மேற்கண்ட கோட்பாட்டை அடிப்படையாகக் கொண்டு உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியிருக்கும் பட்சத்தில், டெல்டாவில் குறுவைப்பட்ட சாகுபடியை உத்திரவாதம் செய்யும் விதத்திலும், சம்பாவுக்கு அதிகத் தீங்கு ஏற்படாத வண்ணமும் நீர்ப்பகிர்வு இருந்திருக்கும். மாறாக, கர்நாடகத்துக்கு சாதகமாக தீர்ப்பு வழங்கும் நோக்கத்துக்காகத்தான் equitable sharing என்ற கோட்பாட்டை உச்சநீதிமன்றம் பயன்படுத்தியிருக்கிறது.
தீர்ப்பாயத்தின் இறுதித் தீர்ப்பு, குடிநீர்த்தேவையைக் கணக்கில் கொள்ளவில்லை என்று கூறி தமிழகத்தின் ஒதுக்கீட்டில் 14.75 டி.எம்.சி யைக் குறைத்திருக்கும் உச்ச நீதிமன்றம், ஒப்பந்த விதிகளை மீறி, காவிரியின் குறுக்கே கர்நாடகம் அடுக்கடுக்காக அணைகள் கட்டிக்கொண்டதையும், ஒப்பந்தத்துக்கு விரோதமாக பாசனப்பரப்பை பன்மடங்கு விரிவு படுத்திக்கொண்டதையும், அதன் விளைவாக டெல்டாவின் பாசனப்பரப்பு சுருங்கி வருவதையும், தண்ணீரின்றி நடக்கும் விவசாயிகள் தற்கொலையையும் ஒரு பொருட்டாகவே கருதவில்லை.
பாகிஸ்தானுக்கு சலாம்! தமிழக அரசு குலாம்!
பருவ மழையும், அதன் காரணமாகப் பெருக்கெடுத்து வரும் ஆற்று நீரும்தான் வேளாண்மையின் விதைப்புப் பருவங்களைத் தீர்மானிக்கின்றன. எனவேதான், ஆற்றின் தலைப்பகுதியில் உள்ள நாடுகள் தண்ணீரைத் தடுத்து வைத்துக் கொண்டு, பருவம் தவறித் தன் விருப்பம்போலத் திறந்து விடுவதை சர்வதேச விதிகள் அனுமதிப்பதில்லை. ஜீலம் நதியின் துணை நதியான கிஷன்கங்காவில் நீர்மின்நிலையம் அமைக்கிறது இந்தியா. அந்த நீர்மின் நிலையம் ஆற்றின் இயல்பான நீரோட்டத்தைப் பெரிதும் பாதிக்கும் என்று ஆட்சேபிக்கிறது பாகிஸ்தான் அரசு. நடுவர் மூலம் தீர்த்துக்கொள்ளலாமென்று பாகிஸ்தானிடம் சமரசம் பேசுகிறது மோடி அரசு.
ஆனால் காவிரித் தீர்ப்பு வந்த நாளிலிருந்து இன்று வரை இப்படி ஒரு பதில் கூட மோடியிடமிருந்து தமிழகத்துக்குக் கிடைக்கவில்லை.
ராஜஸ்தானின் பாலைவனம் சோலைவனமாகிறது! தஞ்சை பாலைவனமாக்கப்படுகிறது!
பாகிஸ்தான் இருக்கட்டும். ராஜஸ்தானுக்கு வருவோம். ராஜஸ்தானும் அரியானாவும் ரவி, பியாஸ், சட்லெஜ் படுகையைச் சேர்ந்த மாநிலங்கள் அல்ல. ஆனால் இந்திரா காந்தி கால்வாய் என்றழைக்கப்படும் ராஜஸ்தான் கால்வாய் வழியே வழியே 8.6 மில்லியன் ஏக்கர் அடி (MAF) தண்ணீரும், பக்ரா கால்வாய் வழியே 1.5 MAF தண்ணீரும் கங்கைக் கால்வாய் வழியே 1.1 MAF தண்ணீரும் ராஜஸ்தானுக்குப் பாய்கின்றன. இவையன்றி யமுனையும் ராஜஸ்தனில் பாய்கிறது.

உச்சநீதிமன்றம்
அரியானா யமுனைப் படுகையில் இருக்கும் மாநிலம். அரியானாவுக்கு 5.6 MAF தண்ணீர் யமுனையிலிருந்து கிடைக்கிறது. கூடுதலாக சட்லெஜ் ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள பக்ரா அணையிலிருந்து, அந்த ஆற்றின் படுகையிலேயே இல்லாத அரியானாவுக்கு 4.33 MAF தண்ணீர் போகிறது. இவையன்றி கக்கர் ஆற்றிலிருந்து 1.1 MAF தண்ணீர் கிடைக்கிறது. இதற்கும் மேல் சட்லெஜ் – யமுனை இணைப்புக் கால்வாய் மூலம் ஆண்டுக்கு 1.88 MAF தண்ணீர் வேண்டும் என்று அரியானா கோருகிறது. பஞ்சாப் மறுத்து வருகிறது. ரவி – பியாஸ் நதிநீர் வழக்கு எனப்படும் இவ்வழக்கில் அரியானாவுக்கு ஆதரவாக உச்சநீதிமன்றம் இறுதித் தீர்ப்பளித்துள்ளது.
மேற்கண்ட இந்த இரு மாநிலங்களை மட்டும் எடுத்துக்கொள்ளுங்கள். 1954 இல் 3360 கி.மீ வலைப்பின்னலாக உருவாக்கப்பட்ட பக்ரா கால்வாய் மூலம் மட்டும் அரியானாவில் ஏறத்தாழ 35 லட்சம் ஏக்கர் பாசனத்துக்கு கொண்டு வரப்பட்டிருக்கிறது. 1983 இல் உருவாக்கப்பட்ட இந்திரா காந்தி கால்வாய் மூலம் மட்டும் ராஜஸ்தானில் சுமார் 29 லட்சம் ஏக்கர் பாலை நிலம் சோலையாக்கப்பட்டிருக்கிறது.
இங்கே தஞ்சை பாலைவனமாகிக் கொண்டிருக்கிறது. டெல்டா மாவட்டப் பகுதிகள் முழுவதும் சுமார் 25,000 கி.மீ நீளத்துக்கு மேல் குறுக்கு நெடுக்காக வெட்டப்பட்டிருக்கும் கால்வாய்கள் இந்திய அரசால் உருவாக்ப்பட்டவை அல்ல. சோழர் காலம் தொடங்கி வெள்ளையர் ஆட்சிக்காலம் வரை நமது உழவர்களால் உருவாக்கப்பட்டவை.
“தென்னிந்தியாவில் 10,000 முதல் 11,000 ஆண்டுகளுக்கு முன்னரே நெல் பயிரிடப்பட்டிருக்கிறது. வேளாண் சமூகத்தின் தகவல் தொடர்புக்கான மொழியின் தொடக்கக் கூறுகள் அப்போதே உருவாகியிருக்க வேண்டும்” என்று திராவிட மொழிகளின் தொன்மையைப் பற்றிக் கூறுகிறார் பரோடாவில் உள்ள மொழியியல் ஆய்வுக்கழகத்தின் இயக்குநர் கணேஷ் என் தேவி.
இந்து – இந்தி தேசியத்தின் சமூக அடித்தளமாக விளங்கும் அரியானாவிலும் ராஜஸ்தானிலும் பாலைவனத்தை சோலைவனமாக மாற்ற முயற்சிக்கும் இந்திய அரசு, பல்லாயிரம் ஆண்டு பாரம்பரியம் கொண்ட தென்னிந்தியாவின் நெற்களஞ்சியத்துக்குத் தீ வைத்துக் கருக்கிப் பாலைவனமாக்குவதற்குக் காரணம் தமிழகத்துக்கு எதிராக டில்லி கொண்டிருக்கும் வன்மம் அன்றி வேறென்ன?
காவிரித் தீர்ப்பும் பாபர் மசூதி இடிப்பும் !
ரவி, சட்லெஜ் படுகையிலேயே இல்லாத ராஜஸ்தானுக்கும் அரியானாவுக்கும் ஆதரவாகப் பரிந்து தீர்ப்பு வழங்கும் உச்ச நீதிமன்றம், காவிரியில் பல ஆயிரம் ஆண்டுகாலப் பயன்பாட்டு உரிமை கொண்ட தமிழகத்தின் பங்கை வெட்டிச் சுருக்குகிறது. பற்றாக்குறை காலப் பகிர்வு குறித்து வேண்டுமென்றே மவுனம் சாதிக்கிறது.
“பக்ராவில் அமைக்கப்பட்டுள்ளதைப் போன்ற மேலாண்மை வாரியம் அமைக்கப்படாவிடில், இந்த உத்தரவினால் எந்தப்பயனும் இல்லை” என்று காவிரி தீர்ப்பாயம் வலியுறுத்திச் சொல்லியிருப்பதை இருட்டடிப்பு செய்துவிட்டு, “ஒரு அமலாக்கத் திட்டம் உருவாக்குங்கள்” என்று பொதுவாகச் சொல்லி தீர்ப்பை அமலாக்காமல் இருப்பதற்கு திட்டம் வகுத்துக் கொடுக்கிறது.
காவிரி நீர் இல்லாமல் நிலத்தடி நீரை ஒட்ட உறிஞ்சி, அதன் விளைவாக கழிமுகப் பகுதியெங்கும் கடல்நீர் உள்ளே வந்து, குடிநீரே இல்லாமல் விவசாயிகள் தவித்துக் கொண்டிருக்கும் சூழலில், தமிழகத்தில் நிலத்தடி நீர்வளம் அபரிமிதமாக இருப்பதால், தமிழகத்தின் பங்கில் 14.75 டி.எம்.சி யைக் குறைப்பதாக தீர்ப்பு வழங்குகிறது. காவிரி ஒன்றை மட்டுமே பெரிதும் நம்பியிருக்கும் மழை மறைவுப் பகுதியான தமிழகத்திடமிருந்து தண்ணீரைப் பிடுங்கி, மழை வளம் மிகுந்ததும், கிருஷ்ணா, துங்கபத்திரா, கோதாவரி, மகதாயி, காவிரி என எண்ணற்ற நதிகள் பாயும் மாநிலமுமான கர்நாடகத்துக்கு வழங்கலாமெனச் சொல்லும் நீதிமன்றத்திடம் என்ன வகையான நீதியை எதிர்பார்க்க முடியும்?
காவிரித் தீர்ப்பும் பாபர் மசூதி இடிப்பும் ஒப்பிடத்தக்கவை. சட்டவிரோதமாக பாபர் மசூதி இடிக்கப்பட்டதை, தனது தீர்ப்பின் வாயிலாக சட்டபூர்வமாக்கியது அலகாபாத் உயர்நீதிமன்றம். தற்போது உச்ச நீதிமன்றத்தின் விசாரணையில் இருக்கிறது. காவிரியில் 1924 முதல் ஐம்பதாண்டுகள் ஒப்பந்தம் இருந்தது. ஒப்பந்தம் முடியுமுன்னரே அதனை மீறி அணை கட்டத்தொடங்கியது கர்நாடக அரசு. கடந்த ஐம்பதாண்டுகள் கர்நாடக சட்டமீறலின் ஆண்டுகள். இதுகாறும் கர்நாடக அரசு மேற்கொண்ட சட்டமீறல்கள்தான் இனி சட்டம் என்று இறுதித் தீர்ப்பு வழங்கியிருக்கிறது உச்ச நீதிமன்றம்.
தீர்ப்பு வழங்கப்பட்டுவிட்டதால், கர்நாடகம் இதையாவது இனி அமல்படுத்தித்தானே தீரவேண்டும் என்று சிலர் பாமரத்தனமாக எண்ணிக் கொண்டிருக்கிறார்கள். தீர்ப்பை அமல்படுத்தாமல் இருப்பதற்கான உரிமையை சேர்த்து வழங்கப்பட்டிருப்பதுதான் இந்த இறுதித் தீர்ப்பு என்பது இப்போதுதான் அவர்களுக்குப் புரியத் தொடங்கியிருக்கிறது.
இனப்பகையை விதைக்கும் பார்ப்பன தேசியம்! எலும்பைக் கவ்வியிருக்கும் கர்நாடகம்!
பிரித்தாளும் சூழ்ச்சியில் ஏகாதிபத்தியத்தை விட மூத்தது பார்ப்பனியம். படிநிலை சாதியமைப்பின் கோட்பாட்டைப் பயன்படுத்தி பிளவையும் மோதலையும் உருவாக்கும் கலையை அது இனங்களுக்கு இடையேயும் பயன்படுத்துகிறது. சாதிப்பிளவில் ஆதாயம் பெறுகின்ற சாதிகளைப் போலவே, இனப்பகையிலும் சில இனங்கள் தற்காலிக ஆதாயம் பெறத்தான் செய்யும். காவிரிச் சிக்கலில் பார்ப்பன தேசியம் விட்டெறிந்த எலும்பைக் கர்நாடகம் கவ்வியிருக்கிறது.
பன்னாட்டு முதலாளிகளும் பனியாக்கள் மார்வாரிகளும் பெங்களூருவைப் பங்கு போட்டு விழுங்கிக் கொண்டிருக்க, தமிழனை எதிரியாகக் காட்டி கன்னட இனவெறியை தூண்டப்படுகிறது. பாரதிய ஜனதாவைப் பொருத்தவரை, கர்நாடகத்தில் முஸ்லீமின் இடத்தில் வைக்கப்பட்டிருப்பவன் தமிழன்.
இனம், மொழி, மதம், சாதி அடிப்படையில் சக மனிதனுக்கு எதிரான வெறுப்பை விதைப்பதே பார்ப்பனியத்தின் இந்து தேசிய உணர்வு. நாம் சக இனத்தின் மீதான வெறுப்பிலிருந்து தமிழினத்தின் உரிமையைக் கோரவில்லை. பார்ப்பன தேசியத்தை வெறுக்கிறோம். அதன் மொழி, இன ஆதிக்கத்துக்கு எதிராக சமத்துவத்தைக் கோருகிறோம்.
பார்ப்பன தேசியவாதிகளும் தமிழகத்தை வெறுக்கிறார்கள். சமஸ்கிருதத்தால் விழுங்க முடியாத மொழி தமிழ் என்பதால் ஏற்பட்ட வரலாற்றுப் பகையுணர்ச்சியில் தொடங்கி, “இந்தியனாய் இருந்து கொண்டு இந்தி தெரியாமல் இருக்கிறாயா?” என்று எரிச்சலடையும் வட இந்திய உளவியல் வரை இந்த வெறுப்பு பல தளங்களில் இயங்குகிறது. அதுதான் தென்னிந்திய மாநிலங்களிலேயே தமிழகத்தை தீண்டத்தகாததாகக் கருத வைக்கிறது. தீண்டாச்சேரிக்குள் பார்ப்பான் நுழைவதைத் தீய சகுனமாகக் கருதும் தலித் மக்களைப் போலவே, பாரதிய ஜனதாவின் நுழைவைத் தமிழகம் வெறுக்கிறது.
தமிழ் மக்களின் மனத்தை வெல்ல முடியாது என்பது பாரதிய ஜனதாவுக்கும் தெரியும். காங்கிரசுக்கும் தெரியும். அதனால்தான் இந்தக் கோட்டைக்குள் நுழைவதற்கு பல டிரோஜன் குதிரைகளை அவர்கள் உருவாக்கினார்கள், இன்னமும் உருவாக்கிக் கொண்டிருக்கிறார்கள்.
காஷ்மீரை தேசிய நீரோட்டத்தில் கொண்டு வருவதற்காக இந்திரா காந்தி செய்த முறைகேடுகளின் விளைவாகத்தான் அங்கே 90 களில தனிநாடு கோரிக்கை தீவிரம் பெற்றது. அங்கே இந்திரா செய்தவற்றைத்தான் இன்று தமிழகத்தில் பாரதிய ஜனதா முயற்சித்துப் பார்க்கிறது.
மேலாண்மை வாரியம் அமைக்க மறுக்கும் டில்லிக்கு எதிராகத் தமிழகம் குமுறிக் கொண்டிருக்கிறது. தமிழகப் பிரதிநிதிகளை சந்திக்க மறுக்கிறார் மோடி. “பாரதிய ஜனதாவை வெற்றி பெற வையுங்கள். காவிரித் தண்ணீர் தமிழகத்துக்கு வரும்” என்கிறார் அக்கட்சியின் தேசிய செயலர் எச்.ராசா. இது வெறும் வாய்க்கொழுப்பு பேச்சல்ல. “வல்லுறவுக்கு ஒப்புக்கொள். வாழ்க்கை கொடுக்கிறேன்” என்பதுதான் தமிழ் மக்களுக்கு மோடி அளிக்கும் மன் கி பாத்.
இந்தியா என்பது ஒரு நாடே அல்ல என்றான் ஏகாதிபத்திய வெறியனான பிரிட்டிஷ் பிரதமர் வின்ஸ்டன் சர்ச்சில். பாரதிய ஜனதாவுக்கோ அகண்ட பாரதம்தான் கனவு. ஆனால் கோல்வால்கரின் கனவை நனவாக்க அவர்கள் மேற்கொண்டு வரும் முயற்சி, சர்ச்சிலின் கனவை நிச்சயம் நனவாக்கி விடும்.
-மருதையன்.
புதிய ஜனநாயகம் – ஏப்ரல், 2018

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக