வெள்ளி, 20 ஏப்ரல், 2018

பணமதிப்பிழப்பு .. வங்கி மோசடிகள் .. எல்லா பேய்களும் வந்துவிட்டன .. ப.சிதம்பரம்

பேய் திரும்ப வந்துவிட்டது!மின்னம்பலம் :போதிய நோட்டுகள் அச்சிடப்பட்டுப் புழக்கத்தில் விடப்பட்டுள்ளதாகக் கூறும் ரிசர்வ் வங்கியின் கூற்று ஏற்புடையதாக இல்லை எனவும், அவ்வாறு இருந்தால் இப்போது ஏன் பணத் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது எனவும் ப.சிதம்பரம் கேள்வியெழுப்பியுள்ளார்.
இது குறித்து முன்னாள் மத்திய நிதியமைச்சரும் காங்கிரஸ் மூத்த தலைவருமான ப.சிதம்பரம் தனது ட்விட்டர் பக்கத்தில் மத்திய ரிசர்வ் வங்கிக்கு எதிராகவும் மத்திய அரசுக்கு எதிராகவும் அடுக்கடுக்கான கேள்விக் கணைகளைத் தொடுத்துள்ளார். “பணமதிப்பழிப்பு என்னும் பேய் மத்திய அரசையும் ரிசர்வ் வங்கியையும் முற்றுகையிட மீண்டும் திரும்ப வந்துவிட்டது. பணமதிப்பழிப்பு நடவடிக்கை மேற்கொண்டு 17 மாதங்கள் ஆகியும் ஏன் இன்னமும் ஏடிஎம் எந்திரங்கள் மறு சீரமைப்பு செய்யப்பட்டுக்கொண்டிருக்கின்றன? முதலில் ரூ.500 மற்றும் ரூ.1,000 நோட்டுகளை மதிப்பழிப்பு செய்த மத்திய அரசு பின்னர் ரூ.2,000 நோட்டுகளை வெளியிட்டது.

இப்போது ரூ.2,000 நோட்டுகளும் பதுக்கப்படுவதாகக் கூறுகிறது. இதுதான் நமக்கு முன்பே தெரியுமே!
மக்கள் அனைவரும் ஏடிஎம்களில் தங்களுக்குத் தேவையான பணத்தையெல்லாம் எடுத்துக்கொள்கின்றனர்; பின்னர் அவர்களிடமுள்ள பணத்தை வங்கிகளில் மீண்டும் செலுத்துவதில்லை. ஏனெனில், வங்கிகள் இப்போது எவ்வாறு செயல்பட்டுக்கொண்டிருக்கின்றன என்பதை அவர்கள் நன்கு தெரிந்துவைத்துள்ளனர். எனவே வங்கி மோசடிகளுக்கு எனது நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன். பணமதிப்பழிப்புக்குப் பிந்தைய காலத்தில் தேவையான பணப்புழக்க அளவை ரிசர்வ் வங்கி சரியாக மதிப்பிடவில்லை என்றே நான் கருதுகிறேன். பணமதிப்பழிப்புக்கு முன்பு புழக்கத்தில் இருந்த பணத்தின் அளவைவிடத் தற்போது 2.75 சதவிகிதம் உயர்ந்துள்ளதாக ரிசர்வ் வங்கி கூறுவது உண்மையா? எனில் ஜிடிபி அளவுக்கு பணப் புழக்கம் உயராமல் மத்திய அரசும் ரிசர்வ் வங்கியும் பார்த்துக்கொள்கின்றன என்று நான் எடுத்துக்கொள்கிறேன். டிஜிட்டல் பரிவர்த்தனை மாற்றத்தை நான் வரவேற்கிறேன். அதற்காகப் பணப் புழக்கத்தைக் குறைத்து மக்களை வம்படியாக டிஜிட்டல் பரிவர்த்தனைக்கு மாறக் கட்டாயப்படுத்துவதை நான் ஏற்க மாட்டேன்” என்று காரசாரமாகப் பதிவிட்டுள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக