ஞாயிறு, 29 ஏப்ரல், 2018

நிலைகுலைந்த நீதி... விரைவில் உச்சநீதிமன்ற நீதிபதியாக வாழ்த்துக்கள் இந்திரா பானர்ஜி அவர்களே!

சவுக்கு : மிகுந்த எதிர்ப்பார்ப்போடு அனைவராலும் எதிர்ப்பார்க்கப்பட்ட தமிழக சட்டப்பேரவையின் 11 எம்எல்ஏக்கள் தகுதிநீக்க வழக்கின் தீர்ப்பு, பெரும்பாலானோரை ஏமாற்றம் அடையச் செய்துள்ளது.    பன்னீர்செல்வம் உள்ளிட்டோர் மகிழ்கிறார்கள்.   தங்குதடையின்றி கொள்ளையடிப்போர் மகிழ்ந்தனர்.   நாட்டில் சட்டத்தின் ஆட்சி நடைபெற வேண்டும், ஜனநாயகம் நெறிமுறைகள் பிறழாது செயல்படுத்தப்பட வேண்டும் என்று நினைத்தவர்கள் வேதனையடைந்தனர்.   மனம் வெதும்பினர்.  புலம்பினர். அரற்றினர்.
கர்நாடக உயர்நீதிமன்ற நீதிபதி, குமாரசாமி, பிழையான கணக்கோடு, ஜெயலலிதாவை சொத்துக் குவிப்பு வழக்கிலிருந்து விடுவித்தபோது நீதித்துறைக்கு எதிராக எழுந்த விமர்சனங்களை, இப்போதும் பார்க்க முடிகிறது.
இத்தீர்ப்பு குறித்து ஆராய்வதற்கு முன்னதாக, சில குழப்பங்களை தெளிவுபடுத்தி விடுவோம்.   திமுக கொறடா சக்கரபாணி, பன்னீர்செல்வம் உள்ளிட்ட 11 எம்எல்ஏக்கள், அதிமுக கொறடாவின் உத்தரவை மீறி, அரசுக்கு எதிராக வாக்களித்தனர். அதனால் அவர்களை தகுதிநீக்கம் செய்ய சபாநாயகருக்கு நீதிமன்றம் உத்தரவிட வேண்டும் என்று ஒரு வழக்கை தாக்கல் செய்தனர். 
இந்த வழக்கு, தலைமை நீதிபதி இந்திரா பேனர்ஜி முன்பான அமர்வில் விசாரணைக்கு வருகிறது. விசாரணை தொடங்கி நடைபெற்றுக் கொண்டிருந்த சமயத்தில், ஆந்திராவை சேர்ந்த சம்பத்குமார் என்ற எம்எல்ஏ, சபாநாயகருக்கு நீதிமன்றம் உத்தரவு பிறப்பிக்க முடியுமா (Writ of Mandamus) என்று ஒரு வழக்கை உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்கிறார்.   அந்த வழக்கில் விரிவான விசாரணை நடத்தி, சபாநாயகர் மற்றும் நீதிமன்றத்தின் அதிகாரங்களை முடிவு செய்ய வேண்டி இருப்பதால், ஐந்து நீதிபதிகள் அடங்கிய அரசியல் சாசன அமர்வுக்கு, அந்த வழக்கு 20 நவம்பர் 2016 அன்று அனுப்பப்படுகிறது.  அந்த அரசியல் சாசன அமர்வு இது வரை ஒரு முறை கூட கூடவில்லை.
திமுக தொடுத்த வழக்கு தங்களுக்கு எதிராக சென்று விடுமோ என்ற அச்சத்தில், அதிமுக எம்எல்ஏக்கள் செம்மலையும், பாண்டியராஜனும் உச்சநீதிமன்றத்தை அணுகுகின்றனர்.   அந்த வழக்கு விசாரணையின் போது, திமுக தரப்பின் கருத்து கேட்கப்படுகிறது.     அரசியல் சாசன அமர்வில், சபாநாயகருக்கு நீதிப் பேராணை (Writ) பிறப்பிக்க, நீதிமன்றத்துக்கு அதிகாரம் இருக்கிறதா என்ற விவகாரம், அரசியல் சாசன அமர்வில் விசாரணையில் உள்ளது என்பதை குறிப்பிட்டபோது, திமுக தரப்பில், சக்கரபாணி தொடர்ந்த வழக்கில், பல கோரிக்கைகைகள் வைக்கப்பட்டுள்ளன.  அதில் இதுவும் ஒன்று.  ஆனால் இந்தக் கோரிக்கையை மட்டும், நாங்கள் வாபஸ் பெற்றுக் கொள்கிறோம் என்று வாதிடப்படுகிறது.  அதை ஏற்றுக் கொண்ட உச்சநீதிமன்றம், அந்த கோரிக்கையை மட்டும் நீக்கி விட்டு, சட்டத்துக்கு உட்பட்டு, என்ன நிவாரணம் வேண்டுமோ அதை வழங்கலாம் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிடுகிறது.
சென்னை உயர்நீதிமன்றத்தில் மூத்த வழக்கறிஞர் கபில் சிபல், திமுகவுக்காக வாதாடினார்.   அவர் தன் வாதத்தை தொடங்குகையில், இந்த வழக்கில் தீர்மானிக்கப்பட வேண்டியவை இரண்டு விஷயங்கள் என்று கூறுகிறார்.
(i) Whether the eleven respondent MLAs have voted against the confidence motion moved by the AIADMK Leader of the Legislative Party, Mr.Palaniswami, and are accordingly, liable to be disqualified under Paragraph 2(1)(b) of the Tenth Schedule ?
(ii)Whether this Court, in exercise of its power under Article 226/227 of the Constitution of India, can declare the 11 respondent MLAs to be disqualified since the Speaker was acting with bias and had abdicated his jurisdiction ?
முதலாவது, 11 எம்எல்ஏக்கள், கொறடாவின் உத்தரவை மீறி, அரசுக்கு எதிராக வாக்களித்து, தகுதிநீக்க தடைச் சட்டத்தின்படி தகுதி நீக்கம் செய்யப்பட தகுதியானவர்களா ?
இரண்டாவது, சென்னை உயர்நீதிமன்றம், சபாநாயகர் தன் கடமையிலிருந்த தவறியதோடு, பாரபட்சமாக நடந்து கொள்வதால், அரசியல் சட்டப் பிரிவுகள் 226 மற்றும் 227ஐ உயர்நீதிமன்றத்துக்கு உள்ள அதிகாரங்களை பயன்படுத்தி,  எம்எல்ஏக்களை தகுதி நீக்கம் செய்ய வேண்டுமா ?
இந்த இரண்டு விஷயங்கள்தான் நீதிமன்றத்தால் தீர்மானிக்கப்பட வேண்டியவை என்று கபில் சிபல் வாதிட்டார்.  இரு தரப்பு வாதங்களையும் தன் தீர்ப்பில் பட்டியலிடும் நீதிபதி இந்திரா பானர்ஜி, இந்த வழக்கில் முடிவு செய்ய வேண்டியவை என்று அவர் சில விஷயங்களை வரையறை செய்கிறார்.
(i) if the respondent MLAs have voted or abstained from voting in the house;
(ii) whether they voted in favour or against the motion proposed by the Chief Minister;
(iii) whether there was any direction issued by the political party to the respondent MLAs to vote in any particular manner and if so, whether they voted contrary to such direction; and
(iv) whether the respondent MLAs voted without obtaining prior permission of the political party; and
(v) whether voting or abstention  from voting had been condoned by the political party or not.
தலைமை நீதிபதி இவ்வழக்கில் நீதிமன்றம் முடிவு செய்ய வேண்டியவை என்று பட்டியலிட்ட விஷயங்கள்.
1) 11 எம்எல்ஏக்கள் அரசை எதிர்த்து வாக்களித்தனரா, நடுநிலை வகித்தனரா ?
2) நம்பிக்கை கோரும் முதல்வரின் தீர்மானத்துக்கு ஆதரவாக வாக்களித்தனரா, எதிராக வாக்களித்தனரா
3) எம்எல்ஏக்கள் இப்படித்தான் வாக்களிக்க வேண்டும் என்று அதிமுக சார்பில் உத்தரவு பிறப்பிக்கப்பட்டதா ?
4) 11 எம்எல்ஏக்களும் எப்படி வாக்களிக்க வேண்டும் என்பதை, அதிமுக தலைமையிடம் அனுமதி பெற்றனரா ?
5) எதிர்த்து வாக்களித்ததோ, நடுநிலை வகித்ததோ, சம்பந்தப்பட்ட அரசியல் கட்சியால் மன்னிக்கப்பட்டதா இல்லையா  ?
இவைதான் தலைமை நீதிபதி நீதிமன்றம் தீர்மானம் செய்ய வேண்டும் என்று வரையறுத்த விஷயங்கள்.
எத்தனை மழுப்பலான, வழுக்கலான, சொதப்பலான விஷயங்களை தீர்மானம் செய்ய வேண்டும் என்று தலைமை நீதிபதி முடிவெடுத்துள்ளார் என்பது புரிகிறதா ?  மேற்கூறிய 5 பாயின்டுகளுக்கும் ஏதாவது வேறுபாடு உள்ளதா ?
இரட்டை இலை யாருக்கு என்று தேர்தல் ஆணையம் முன்பு நடந்த வழக்கில், பன்னீர்செல்வம் மற்றும் செம்மலை ஆகியோர் ஒரு பிரமாண பத்திரத்தை தாக்கல் செய்கிறார்கள்.  அதில், இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.
A whip was issued under the AIADMK Party’s seal. As per the whip issued, the MLAs of the party were directed to vote in favour of appointment of Mr. Palaniswamy as Chief Minister of Tamil Nadu
எடப்பாடி பழனிச்சாமி முதல்வராக இருக்க வேண்டுமென்று ஆதரித்து வாக்களிக்குமாறு, அதிமுக கட்சியின் முத்திரையோடு ஒரு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது என்று அந்த பிரமாண வாக்குமூலத்தில் கூறப்பட்டுள்ளது.
இதில் ஏதாவது சந்தேகம் உள்ளதா ?   இப்படி ஒரு ஆவணம் நீதிமன்றத்தின் முன் தாக்கல் செய்யப்பட்ட பிறகு, “அடுத்ததாக, எம்எல்ஏக்கள் எப்படி வாக்களிக்க வேண்டும் என்று அதிமுக உத்தரவிட்டதா இல்லையா என்பதில் குழப்பம் உள்ளது” என்று தலைமை நீதிபதி கூறுவதை அறியாமை என்று கூறுவதா ?  அல்லது பொறுப்ப தட்டிக் கழிக்கும் செயல் என்று கூறுவதா ?  இல்லை, வேண்டுமென்றே செய்தார் என்று கூறுவதா ?
அடுத்ததாக, எம்எல்ஏக்கள் எப்படி வாக்களிக்க வேண்டும் என்று அதிமுக உத்தரவிட்டதா இல்லையா என்பதில் குழப்பம் உள்ளது.   அதை தீர்மானிக்க வேண்டும் என்று கூறுகிறார் தலைமை நீதிபதி இந்திரா பேனர்ஜி.
தீர்ப்பின் பத்தி 110ல்,  இவ்வழக்கில் வழங்கப்படக் கூடிய ஒரே தீர்வு, எம்எல்ஏக்களை தகுதிநீக்கம் செய்யுமாறு, சபாநாயகருக்கு உத்தரவிட வேண்டியது மட்டுமே.  ஆனால், உச்சநீதிமன்றத்தில் அது தொடர்பான வழக்கு நிலுவையில் உள்ளதால், அவ்வாறு செய்ய இயலாது.
இங்கேதான் தந்திரமாக விஷயத்தை திசை திருப்புகிறார் தலைமை நீதிபதி.   உச்சநீதிமன்றத்தின் முன், திமுக அளித்த வாக்குறுதி, “நீதிமன்றம் சபாநாயகருக்கு உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்ற கோரிக்கையை வாபஸ் பெறுகிறோம்” என்பதே.  அதன் மீது உத்தரவு பிறப்பித்த உச்சநீதிமன்றம்,  “இந்த கோரிக்கை அல்லாமல் சட்டத்துக்கு உட்பட்டு, வேறு எந்த நிவாரணமும் வழங்கலாம்” என்றே உத்தரவிட்டுள்ளது.
சரி என்ன நிவாரணம் நீதிமன்றம் வழங்க இயலும் ?
14 பிப்ரவரி 2007 அன்று, ஐந்து நீதிபதிகள் அடங்கிய அரசியல் சாசன அமர்வு, ராஜேந்திர சிங் ராணா vs  ஸ்வாமி பிரசாத் மவுரியா என்ற வழக்கில் விரிவான தீர்ப்பு ஒன்றை வழங்கியுள்ளது.
தமிழகத்தில் தற்போது சட்டப்பேரவையில் நடக்கும் அதே நிலைமையின் அடிப்படையில் வழங்கப்பட்ட தீர்ப்புதான் அது.
உத்தரப் பிரதேசத்தில், பகுஜன் சமாஜ் கட்சியைச் சேர்ந்த 13 எம்எல்ஏக்கள், கட்சி தாவி, ஆளும் சமாஜ்வாடி கட்சிக்கு ஆதரவாக வாக்களிக்கிறார்கள்.    இவர்கள் மீது கட்சித் தாவல் சட்டத்தின்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மனு அளிக்கப்படுகிறது.  இது நடந்த பிறகு, மேலும் 24 எம்எல்ஏக்கள், கட்சி தாவுகின்றனர்.  இவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதற்கு பதிலாக, சபாநாயகர், இந்த 24 பேரையும் தனி அணியாக கருதி அங்கீகாரம் அளிக்கிறார்.  இவர்கள் அமைச்சரவையிலும் இடம் பிடிக்கிறார்கள்.  
இந்த நேர்வில், சபாநாயகர், முதலில் கட்சித் தாவிய 13 பேர் மீது நடவடிக்கை எடுக்காமல், அடுத்து கட்சி தாவிய 24 பேரோடு, 13 பேரையும் சேர்த்து, 37 பேரையும் தனிக் கட்சியாக அங்கீகரித்து நடவடிக்கை எடுத்ததன் மூலம் பாரபட்சமாக செயல்பட்டுள்ளார்.  ஆகையால்  13 எம்எல்ஏக்களையும் தகுதிநீக்கம் செய்ய வேண்டும் என்பதுதான் உச்சநீதின்றத்தில் வழக்கு. 
இந்த வழக்கில் தலைமை நீதிபதி கே.ஜி பாலகிருஷ்ணன், நீதிபதிகள், எச்.கே.சேமா, ஹோட்டோய் கேட்டோஹோ, ஏ.சி.லட்சுமணன், பாலசுப்ரமணியம் மற்றும் டிகே.ஜெயின் ஆகியோர் அடங்கிய அமர்வு தீர்ப்பளிக்கிறது. 
அந்தத் தீர்ப்பின் முக்கியப் பகுதிகள்
“சபாநாயகர், தனது உத்தரவில், தகுதிநீக்கம் குறித்து எந்த முடிவும் எடுக்காமல் தவறி விட்டார்.   தகுதி நீக்க தடை சட்டத்தின் 6வது பத்தியில் உள்ள அவருக்கான அதிகாரத்தை பயன்படுத்த தவறி விட்டார். மேலும், கூடுதலாக கட்சித் தாவிய எம்எல்ஏக்களை தனி அணியாக  எந்த ஒரு தரவும் இல்லாமல் வெறும் வாய் வார்த்தைகளை மட்டுமே வைத்து ஏற்றுக் கொண்டுள்ளார்.  ஒரு கட்சியில் பிளவு ஏற்பட்டுள்ளதா இல்லையா என்பதற்கு எந்த விதமான விளக்கமும் அவர் அளிக்கவில்லை.   
சபாநாயகர் இழைத்த தவறு இந்த விவகாரத்தின் வேரையே அசைத்துப் பார்க்கும் வகையிலான அடிப்படைத் தவறு.   சபாநாயகர் எடுத்த சாதாரண முடிவில் கூட நீதிமன்றம் தலையிட்டே ஆக வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது.  ஆகையால், சபாநாயகரின் முடிவை ரத்து செய்த, அலகாபாத் நீதிமன்றத்தின் தீர்ப்போடு முழுமையாக நாங்கள் உடன்படுகிறோம்.  
ஆனால் 13 எம்எல்ஏக்களை ஏன் தகுதிநீக்கம் செய்யவில்லை என்பது குறித்து, எந்த முடிவும் எடுக்காத உயர்நீதிமன்றம் தவறிழைத்து விட்டது என்றே நாங்கள் கருதுகிறோம்.  
அப்படி இருக்கையில், 13 பேரை தகுதிநீக்கம் செய்யத் தவறிய சபாநாயரிடமே, அது குறித்து முடிவெடுங்கள் என்று மீண்டும் அனுப்புவது சரியா என்ற கேள்வியும் எழுகிறது.   தனி அணியாக அங்கீகரிக்கப்பட்ட 37 பேரில், இந்த 13 பேரை கழித்து விட்டால், அவர்கள் மூன்றில் ஒரு பகுதியாக ஆக மாட்டார்கள். அப்படி இருக்கையில் அவர்களை எப்படி தனி அணியாக அங்கீகரிக்க  முடியும் ?
ஒரு அரசியல் சாசன அமைப்பு, முதல் முறை முடிவெடுக்கத் தவறினால், இந்த நீதிமன்றம் வழக்கமாக அதில் தலையிடுவது கிடையாது.  ஆனால், பகுஜன் சமாஜ் கட்சி சார்பில், வாதிடப்பட்டது என்னவென்றால், 37 பேரில் ஒரு சிலரைத் தவிர, அத்தனை பேரும் அமைச்சர்களாகி விட்டார்கள், இது ஜனநாயக நெறிமுறைகளுக்கு எதிரானது ஆகையால், இந்த நீதிமன்றம் தகுதி நீக்கம் குறித்து உடனடியாக உத்தரவு பிறப்பிக்க வேண்டும்  என்று வாதிடப்பட்டது.   மேலும், சட்டப்பேரவையின் காலம் முடிவுக்கு வர இருப்பதால், உடனடி முடிவு அவசியம் என்றும் வாதிடப்பட்டது. இந்த வாதம் நியாயமானது என்று நாங்கள் கருதுகிறோம்.
 13 எம்எல்ஏக்கள், 27 ஆகஸ்ட் 2003 அன்று ஆளுனரை சந்தித்து, முதல்வரை மாற்றி எதிர்க்கட்சித் தலைவரை ஆட்சி அமைக்க வருமாறு மனு அளிக்கின்றனர்.  இந்த 13 பேரை கட்சித் தாவல் தடை சட்டத்தின்படி தகுதி நீக்கம் செய்ய வேண்டுமென்று அளிக்கப்பட்ட மனு மீது, இன்று வரை (13 பிப்ரவரி 2017) வரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை.   இதற்கு யார் காரணம் என்பதற்குள் செல்ல விரும்பவில்லை. அதே நேரத்தில், பிப்ரவரி 2002ல் உருவான சட்டப்பேரவை, விரைவில் முடிவுக்கு வருகிறது.   ஆகையால், இதை மீண்டும் சபாநாயகருக்கு அனுப்புவது இந்த வழக்கையே நீர்த்துப் போகச் செய்யும்.   
கட்சி தாவிய, 13 பேரும் தகுதி நீக்கத்துக்கு தகுதியானவர்கள் என்றால், அவர்கள் சட்டப்பேரவையில் ஒரு நாள் நீடிப்பது கூட அரசியல் சாசனத்துக்கு விரோதமானதாகும்.     இந்த நீதிமன்றத்துக்கு, அரசியல் சாசனத்தையும், ஜனநாயக நெறிமுறைகளையும் காப்பாற்றுவது கடமையாகும்.   அது அரசியல் சாசன அமர்வு இந்த நீதிமன்றத்தின் மீது விதித்துள்ள கடமை.   28 ஆகஸ்ட் 2003 அன்று 13 எம்எல்ஏக்களின் செயல்பாடுகளின் அடிப்படையில் இந்த நீதிமன்றம் இந்த விவகாரத்தில் ஒரு முடிவெடுக்க வேண்டிய கடமை உள்ளது.  
இதுதான் ராஜேந்திர சிங் ரானா வழக்கில், உச்சநீதிமன்றத்தின் அரசியல் சாசன அமர்வு வழங்கிய தீர்ப்பு.
இந்த உச்சநீதிமன்ற தீர்ப்பு குறித்து, 11 எம்எல்ஏ வழக்கில் தீர்ப்பளித்த தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி கூறியது என்ன தெரியுமா ?
The Court cannot take over the functions of the Speaker of deciding a disqualification application by giving full opportunity of hearing to the MLAs sought to be disqualified. The judgment in Rajendra Singh Rana, supra, was rendered by the Supreme Court in the special facts and circumstances of the aforesaid case, as an exception to the general rule and in any case, there was apparently a decision not to initiate disqualification proceedings.  The judgment has no application in the facts and circumstances of this case.
சபாநாயகரின் அதிகாரங்களை நீதிமன்றம் எடுத்துக் கொள்ள முடியாது.  ராஜேந்திர சிங் ராணாவின் வழக்கில் உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு, சிறப்பு நேர்வுகளில் சிறப்பு சூழ்நிலைகளில் வழங்கப்பட்டது.    மேலும், தகுதி நீக்கம் செய்ய வேண்டாம் என்று ஒரு முடிவு சபாநாயகரால் எடுக்கப்பட்டுள்ளது.  அந்த தீர்ப்பு இந்த வழக்குக்கு எந்த வகையிலும் பொருந்தாது.
சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு இப்படி ஒரு புரிதல் எப்படி வந்தது என்பதுதான் விளங்கவில்லை.   13 எம்எல்ஏக்கள் உத்திரப் பிரதேசத்தில் கட்சி தாவுகின்றனர்.  அவர்கள் மீது, சபாநாயகர் நடவடிக்கை எடுக்காமல் காலம் தாழ்த்துகிறார்.  அவர் தன் கடமையை செய்யத் தவறி விட்டார்.  அதனால் அதை நாங்கள் செய்கிறோம் என்றுதானே உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது ?   இந்த 11 எம்எல்ஏக்கள் விவகாரத்திலும் சபாநாயகர் தனபால், அதைத்தானே செய்துள்ளார் ?  ராஜேந்திர சிங் ராணா வழக்கு எப்படி 11 எம்எல்ஏக்கள் வழக்குக்கு பொருந்தாமல் போகும் ?
அடுத்து, இது தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் இருப்பதால், உயர்நீதிமன்றம் இதில் முடிவெடுக்க முடியாது என்கிறார்.  உச்சநீதிமன்றம் மிக மிக தெளிவாக, சபாநாயகருக்கு நீதிப் பேராணை வழங்குவதைத் தவிர, வேறு எந்த கோரிக்கைகளின் மீதும் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிடலாம் என்று கூறியுள்ளதை தலைமை நீதிபதி வசதியாக  மறந்து விட்டார்.

அடுத்ததாக தலைமை நீதிபதி குறிப்பிடுவது முக்கியமானது.
On behalf of the Speaker, one of the reasons advanced for not taking action on the disqualification application against the respondent MLAs was the dispute with regard to symbol.  This Court cannot exercise appellate powers to adjudicate the correctness of the decision.
சபாநாயகர் சார்பில், 11 எம்எல்ஏக்கள் மீது முடிவெடுக்காமல் இருப்பதற்கு சொல்லப்படும் காரணம், அது இரட்டை இலை சின்னம் சம்பந்தப்பட்டது என்பதனால்.  சபாநாயகரின் இந்த முடிவு சரியா இல்லையா என்பதை நீதிமன்றம் முடிவு செய்ய இயலாது.
இங்கேதான் நாம் கவனமாக பார்க்க வேண்டும்.  ஒரு இடத்தில் தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, சபாநாயகர் 11 எம்எல்ஏக்கள் விவகாரத்தில் எந்த முடிவும் எடுக்கவில்லை.  எடுக்காத நிலையில் நீங்கள் எப்படி நீதிமன்றத்தை அணுகலாம் என்று கேட்கிறார்.  ஆனால் இங்கே, சபாநாயகரின் முடிவு சரியா இல்லையா என்பதை நீதிமன்றம் முடிவு செய்ய இயலாது என்று கூறுகிறார்.   அவர் எழுதிய தீர்ப்பிலேயே இப்படி மாறி மாறி கருத்துக்களை கூறுகிறார்.
மேலும், இந்த வழக்கு நடைபெற்று முடியும் வரையில், இறுதி வரையில், சபாநாயகர் சார்பில் எந்த மனுவும் தாக்கல் செய்யப்படவில்லை.  நீதிமன்றம் அனுப்பிய நோட்டீஸை வாங்க மறுத்து விட்டார்.  அப்படி இருக்கையில் சபாநாயகரின் தரப்பு வாதம் என்று நீதிபதி எதன் அடிப்படையில் குறிப்பிடுகிறார் ?
இதன் பிறகு தலைமை நீதிபதி குறிப்பிடுவதுதான் சந்தேகத்தை எழுப்புகிறது.
  1. Even though it is nobody’s case that the applicants who sought disqualification of the respondent MLAs did not have locus standi, it has to be remembered that there is one notable difference between the application for disqualification of the respondent MLAs and the 18 MLAs who have been disqualified, in that the application for disqualification of the 18 MLAs was filed by the Chief Party Whip and supported by the Chief Minister elected by the AIADMK party. The application for disqualification of the respondent MLAs  has been filed by a few individual MLAs and is not supported either by the Party Whip or the majority of the members of the AIADMK party  in the Legislative Assembly. The involvement of the Party Whip or the Chief Minister elected by the party would be  an important factor for determining whether the impugned action of an MLA has the approval or disapproval of the party.
டிடிவி தரப்பு எம்எல்ஏக்களும் இந்த வழக்கை தொடர்ந்திருந்தாலும்,  அவர்கள் தனிப்பட்ட எம்எல்ஏக்கள்.   அதிமுக கொறடாவோ, முதலமைச்சரோ, இந்த வழக்கை தொடரவில்லை.  அவர்கள் இந்த வழக்கை தொடர்ந்திருந்தால், இந்த வழக்கை தொடர்வதற்கு கட்சியின் அனுமதி உள்ளதா என்பது தெரிந்திருக்கும் என்கிறார்.
எத்தனை பிழையான புரிதல் ?   எப்படியாவது 11 எம்எல்ஏக்களையும், அரசையும் காப்பாற்ற வேண்டும் என்றுதானே எடப்பாடி பழனிச்சாமி துடிக்கிறார் ?   அவர் எப்படி 11 பேரை தகுதிநீக்கம் செய்ய வேண்டும் என்று வழக்கு தொடர்வார் ?  அதுதானே இந்த வழக்கின் அடிப்படை ?   எப்படி இது போன்றதொரு முட்டாள்த்தனமான கேள்வி தலைமை நீதிபதி எழுப்புகிறார் ?  மேலும், யார் வழக்கு தொடர்ந்தால் என்ன ?  ஆவணங்களின் அடிப்படையில் தீர்ப்பு வழங்குவதுதானே நீதிமன்றத்தின் வேலை ?
இறுதியாக,
In view of the fact that the question of issuance of mandamus on the Speaker is pending consideration of the Supreme Court, it is difficult to conceive how this Court can disqualify the concerned MLAs and render the proceedings in the Supreme Court infructuous.    Passing of such orders would only not amount to judicial overreach, it would also amount to gross breach of judicial discipline, if not contempt.
இதே போன்ற வழக்கு உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் இருப்பதால், இந்த நீதிமன்றம் எப்படி இதில் தலையிட்டு உத்தரவு பிறப்பிக்க முடியும் ?  அப்படி உத்தரவு பிறப்பித்தால், உச்சநீதி மன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்கு நீர்த்துப்    போகாதா ?   என்று கேட்கிறார் தலைமை நீதிபதி.
உச்சநீதிமன்றத்துக்கு எதிரான ஒரு தீர்ப்பையே தலைமை நீதிபதி வழங்கினாலும், அதை ரத்து செய்யும் அதிகாரம் உச்சநீதிமன்றத்திடம் இருக்கையில், வழக்கு நீர்த்துப் போய் விடும் என்ற கவலை, தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜிக்கு எதற்கு என்பதுதான் புரியவில்லை.
தலைமை நீதிபதியின் தீர்ப்பின் சாரம் என்ன தெரியுமா ?  அரசியல் அமைப்புச் சட்டத்தின் பத்தாவது பிரிவில் உள்ள கட்சித் தாவல் தடைச் சட்டத்தின்படி, நடவடிக்கை எடுங்கள் என்று கட்சி தாவிய எம்எல்ஏக்கள் மீது அளிக்கப்பட்ட புகாரில், சபாநாயகர், ஒரு சட்டமன்றத்தின் ஆயுட்காலமான 5 ஆண்டுகள் வரை நடவடிக்கை எடுக்காமல் இருந்தாலும், அப்பட்டமான குதிரை பேரத்தின் மூலம், பெரும்பான்மை இல்லாத ஒரு ஆட்சி தொடர்ந்தாலும்,  நான் வேடிக்கைதான் பார்ப்பேன்.  தலையிட மாட்டேன் என்பதே.
அப்படியானால் எதற்கு இந்த நீதிமன்றம் என்பதுதான் அனைவர் முன்பும் உள்ள கேள்வி.   அரசியல் சாசனத்தை பாதுகாப்பேன் என்று உறுதிமொழி எடுத்துக் கொண்டு, மக்கள் வரிப்பணத்தில் சம்பளம் பெற்றுக் கொண்டு, கண் முன்னே நடக்கும் ஒரு நீதிப் பிறழ்வை, அரசியல் சாசனத்தை குழிதோண்டி புதைக்கும் நடவடிக்கையை வேடிக்கை பார்ப்பேன் என்று சொல்வதற்கு எதற்கு நீதிமன்றம் ?  எதற்கு நீதிபதிகள் ?
18 பிப்ரவரி 2017 அன்று, நம்பிக்கை வாக்கெடுப்பில் 11 எம்எல்ஏக்கள் அரசுக்கு எதிராக வாக்களிக்கின்றனர்.
20 மார்ச் 2017 அன்று அவர்களை தகுதிநீக்கம் செய்யக் கோரி, கொறடா சபாநாயகருக்கு கடிதம் எழுதுகிறார்.
22 ஆகஸ்ட் 2017 18 எம்எல்ஏக்கள் ஆளுனரை சந்தித்து முதல்வர் மீது நம்பிக்கை இல்லை எனறு கடிதம் அளிக்கின்றனர்.
24 ஆகஸ்ட் 2017 18 எம்எல்ஏக்களை தகுதிநீக்கம் செய்ய சபாநாயகரிடம் கடிதம் அளிக்கப்படுகிறது.
18 செப்டம்பர் 2017 18 எம்எல்ஏக்களும் தகுதி நீக்கம் செய்யப்படுகிறார்கள்.
18 எம்எல்ஏக்கள் ஆளுனரிடம் மனுதான் அளித்தார்கள்.  அவர்களை சபாநாயகர் 25 நாட்களில் தகுதிநீக்கம் செய்கிறார்.  ஆனால் 11 எம்எல்ஏக்கள், கொறடா உத்தரவை மீறி நம்பிக்கை வாக்கெடுப்பில் அரசுக்கு எதிராக வாக்களிக்கிறார்கள்.  அவர்கள் மீது 14 மாதங்களாக சபாநாயகர் நடவடிக்கை எடுக்க மறுக்கிறார்.
இது சபாநாயகரின் பாரபட்சமான நடவடிக்கையா இல்லையா ?  இப்படி அப்பட்டமாக, ஒரு தலைப்பட்சமாக, உள்நோக்கத்தோடு நடந்து கொள்ளும் சபாநாயகரின் நடவடிக்கைகளில் கூட தலையிட மாட்டேன் என்று சொல்வதற்கு எதற்காக ஒரு உயர்நீதிமன்றம் என்பதுதான் மீண்டும் மீண்டும் எழும் கேள்வி.
வழக்கு, 11 எம்எல்ஏக்களை தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என்பதற்காக.   சபாநாயகர் அதிகாரத்தில் தலையிட முடியாது என்று இன்று கூறும் நீதிமன்றம், எதற்காக நாள் முழுக்க இந்த வழக்கின் வாதங்களை இரண்டு மாதங்கள் கேட்டது என்ற கேள்விக்கு, தலைமை நீதிபதியின் பதில் என்ன ?
இரண்டு மாதங்கள் வாதங்களை கேட்டு, தீர்ப்பை ஒத்தி வைத்து, ஒன்றரை மாதம் கழித்து எங்களுக்கு அதிகாரம் இல்லை என்று தீர்ப்பு வழங்குவது தமிழக மக்களை முட்டாள்களாக கருதுவதா இல்லையா ?
சனியன்று, 11 எம்எல்ஏக்களின் தீர்ப்பு குறித்து கருத்து தெரிவித்த தலைமை நீதிபதி, “நாங்கள் மனசாட்சிப்படி தீர்ப்பளித்துள்ளோம்.  நாங்கள் யாருக்கும் பதில் சொல்ல வேண்டியதில்லை.  கடவுளுக்கு மட்டுமே பதில் சொல்ல கடமைப் பட்டுள்ளோம்”  என்று கூறுகிறார்.
கடவுளுக்கு மட்டும் பதில் சொல்ல விரும்பும் தலைமை நீதிபதி, அவருக்கு மிகவும் பிடித்தமான, ராமநாதசுவாமி கோவிலிலேயே அமர்ந்து கடவுளோடு பேசிக் கொண்டிருக்கட்டும்.   உயர்நீதிமன்ற உச்சநீதிமன்ற நீதிபதிகள், அரசியல் அமைப்பு சாசனத்தின் அடிப்படையிலும், சட்டத்தின் அடிப்படையிலும், உச்சநீதிமன்ற தீர்ப்புகளின் அடிப்படையிலும்தான் செயல்பட வேண்டுமே ஒழிய, கடவுளின்படியோ, மனசாட்சியின்படியோ அல்ல.    அப்படியென்றால் அவர் கடவுளிடம் சம்பளம் பெற வேண்டும்.  மக்கள் வரிப்பணத்தில் அல்ல.
அரசியல் சாசனத்தை நிலை நிறுத்தவும், சட்டத்தின் ஆட்சியை நிலைநிறுத்தவுமே அவருக்கு மக்கள் வரிப்பணத்தில் ஊதியம் வழங்கப்படுகிறது.    கடவுளோடு பேசுவதற்கு அல்ல.

எப்படியாவது உச்சநீதிமன்ற நீதிபதியாகி விட வேண்டுமென்று, கடுமையான முயற்சிகளை எடுத்து வருகிறார் தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி.   அவரை நிச்சயமாக உச்சநீதிமன்ற நீதிபதியாக்குவார், இந்திய தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா.
தீபக் மிஸ்ரா மீது ஊழல் குற்றச்சாட்டு எழுந்த, பிரசாத் ட்ரஸ்ட் மெடிக்கல் காலேஜ் ஊழலில், அலகாபாத் உயர்நீதிமன்ற நீதிபதி நாராயன் சுக்லா மீது லஞ்சப் புகார் எழுந்தது.    அவர் உச்சநீதிமன்ற நீதிபதி ஒருவர் சார்பாக லஞ்சம் பெற்றார் என்பதுதான் புகார்.  அந்த மெடிக்கல் காலேஜ் வழக்கை, உச்சநீதிமன்றத்தில் விசாரித்தவர், தீபக் மிஸ்ரா.   நாராயண் சுக்லா யாருக்காக லஞ்சம் பெற்றிருப்பார் ?
இந்திய தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா அமைத்த மூன்று நீதிபதிகள் குழுவின் தலைவராக இருந்தவர், இந்திரா பானர்ஜி.   லஞ்சப் புகாருக்கு உள்ளான, நாராயண் சுக்லா மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அந்த மூன்று நீதிபதிகள் குழு பரிந்துரைத்தது.  தலைமை நீதிபதி தீபக் மிஸ்ராவின் பங்கு குறித்து அந்தக் குழு வாயே திறக்கவில்லை.   இணைப்பு
விரைவில் உச்சநீதிமன்ற நீதிபதியாக வாழ்த்துக்கள் நீதிபதி இந்திரா பானர்ஜி அவர்களே.
தக்கார் தகவிலர் என்பது அவரவர்
எச்சத்தாற் காணப்ப படும்.
ஒருவர் நேர்மையானவரா அல்லது நெறி தவறி, நீதி தவறி நடந்தவரா என்பது அவருக்குப் பின் எஞ்சி நிற்கப்போகும் புகழ்ச் சொல்லைக் கொண்டோ அல்லது பழிச் சொல்லைக் கொண்டோதான் நிர்ணயிக்கப்படும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக