செவ்வாய், 3 ஏப்ரல், 2018

டி ஜி பி மகள் குடித்துவிட்டு காவலரை மிரட்டும் விடியோ ...


மின்னம்பலம் :சென்னை பாலவாக்கம் கடற்கரையில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த காவலர் ஒருவரை, தான் டிஜிபி மகள் என்று கூறி பெண் ஒருவர் மிரட்டும் காட்சி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
மத்திய அரசு காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காததைக் கண்டித்து தமிழகம் முழுவதும் போராட்டங்கள் வெடித்து வருகின்றன. நேற்று முன்தினம் (மார்ச் 31) மெரினா கடற்கரையில் இதற்காகப் போராடியவர்களை போலீஸார் கைது செய்தனர். அதனால், மெரினா மற்றும் பெசன்ட் நகர் கடற்கரையில் மக்கள் போராட்டங்களில் ஈடுபடாதவாறு போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. இந்த நிலையில், காரில் இருந்த பெண் மற்றும் ஆண் போலீஸாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அப்போது காருக்குள் போலீஸார் எட்டிப் பார்த்தபோது உள்ளே மதுபாட்டில் இருந்துள்ளது.
போலீஸார் எப்படி தன் காருக்குள் எட்டிப் பார்க்கலாம் என்று கூறி அந்தப் பெண் வாக்குவாதத்தைத் தொடர்ந்தார். அதுமட்டுமில்லாமல், தான் டிஜிபியின் மகள் என்றும், தான் நினைத்தால் உடனடியாக காவலரைப் பணியில் இருந்து நீக்க முடியும் என்றும் மிரட்டியுள்ளார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது.
இதை அருகிலிருந்த போலீஸார் ஒருவர் தனது செல்போனில் படம்பிடித்துக் கொண்டிருந்தார். இதைப் பார்த்த அந்தப் பெண், ‘எதற்காக வீடியோ எடுக்கிறீர்கள்? ரெக்கார்டு பண்ணாதீங்க...’ என்று சொல்லியபடியே, ‘ஐ கால் மை டாடி’ என்று ஆவேசமாகப் பேசுகிறார். பின்னர், போலீஸாரைப் பார்த்து, ‘உங்கள் பெயர் என்ன?’ என்று கேட்கிறார். அதற்கு அவர், ‘கார்த்திகேயன்’ என்று பதிலளிக்கிறார். ‘நீங்கள் இங்கு வேலை பார்க்க வேண்டாமா?’ என்று கேட்டுள்ளார். இவ்வாறு அந்த வீடியோவில் பதிவாகியுள்ளது.
இதற்கிடையில், காவலரை மிரட்டிய பெண், ஏடிஜிபி ஒருவரின் மகள் என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்த சம்பவம் குறித்து நீலாங்கரை போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதற்கிடையில், காவலர் தன்னை கடற்கரைக்குள் செல்ல அனுமதிக்காமல் நடந்து கொண்டார். பணம் பறிக்கும் நோக்கில் காவலர் கார்த்திகேயன் மிரட்டியுள்ளார் எனக் காவல் ஆணையரிடம் அந்தப் பெண் புகார் அளித்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக