வெள்ளி, 20 ஏப்ரல், 2018

ஏரிகளை தூர்வாரும் ஒய்வு பெற்ற ஆசிரியர் தியாகராஜன் ’ சொந்த பணத்தில் ...

ஏரி தூர்வாரும் பணிஎம்.திலீபன் விகடன் : அரியலூர் மாவட்டத்தைச் சேர்ந்த ஓய்வுபெற்ற தலைமை ஆசிரியர் தியாகராஜன், அமெரிக்காவில் இருக்கும் தன் மகள் உதவியுடன் கடந்த 2 ஆண்டுகளாக ஏரிகளைத் தூர்வாரும் பணியை மேற்கொண்டு வருகிறார்.  நீராதாரத்தைப் பாதுகாக்க தனிமனிதனாக அவர் முயற்சி எடுத்து வருவதைப் பொதுமக்கள் வெகுவாகப் பாராட்டியுள்ளனர். அரியலூர் மாவட்டம், விளாங்குடியைச் சேர்ந்தவர் ஓய்வுபெற்ற தலைமையாசிரியர் தியாகராஜன். இவரின் மகள் திருணத்துக்குப் பிறகு, தன் கணவருடன் அமெரிக்காவில் பணியாற்றி, தற்போது அமெரிக்கவாழ் இந்தியராக உள்ளார். இந்நிலையில் வறட்சியான பகுதியாக உள்ள தனது கிராமத்தில் நீராதாரத்தை மேம்படுத்த வேண்டும் என்று எண்ணியவர்கள் தன் தந்தையிடம் ஆலோசித்து அதற்கான நிதியாக ரூ.3 லட்சத்தை அனுப்பியுள்ளார். இதைக் கொண்டு விளாங்குடியில் உள்ள சிறிய அளவில் பாசன வசதியுடன் கால்நடைகளுக்கான குடிநீர் ஆதாரமாக உள்ள 4 ஏக்கர் பரப்பளவுள்ள பிள்ளையார்குளம் மற்றும் 2 ஏக்கர் பரப்பளவுள்ள வீரப்பிள்ளை குட்டையை ஆழப்படுத்தும் பணி இன்று தொடங்கியது.


                                 
ஏரியில் உள்ள கருவேல மரங்களை அகற்றி ஏரியை ஆழப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதேபோல கடந்தாண்டு எய்ம்ஸ் இண்டியா பவுண்டேஷன் ஃப்ரம் அமெரிக்கா என்ற அமைப்பு கொடுத்த 1,80,000 ரூபாயுடன் தன் மகளின் பங்காக ரூ.3,70,000 சேர்த்து ரூ.5,50,000 செலவில் 10 ஏக்கர் பரப்பளவுள்ள விளாங்குடி பெரிய ஏரி தூர்வாரப்பட்டது. அந்த ஏரியில் தற்போதும் தண்ணீர் தேங்கியுள்ளது. இதனால் கால்நடைகளுக்கு குடிநீர் ஆதாரமாகவும் நிலத்தடி நீர் மட்டம் உயரவும் வழி ஏற்பட்டுள்ளது. தூர்வாரும் பணியின் தொடக்க நிகழ்ச்சியில் அரியலூர் வட்டாட்சியர் உள்ளிட்ட அரசு அதிகாரிகள் பொதுமக்கள் பலரும் கலந்துகொண்டனர். இதுகுறித்து தியாகராஜன் பேசுகையில், "இனி அடுத்த யுத்தமே தண்ணீரால்தான் நடக்கப்போகிறது என்று வல்லுநர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். அதைப் போக்க என்னால் முடிந்ததைச் செய்யத் தொடங்கியுள்ளேன். ஓய்வு பெற்ற பிறகு, வீட்டில் உட்கார்ந்திருக்காமல், என் மகளின் உதவியுடன் கிராமங்களில் உள்ள ஏரிகளை ஆழப்படுத்தும் பணியில் ஈடுபட்டது மகிழ்ச்சியாக உள்ளது. இதேபோல ஒவ்வொருவரும் தன்னால் முடிந்தவரையில் நீராதாரத்தைப் பாதுகாக்கவும் மேம்படுத்தவும் முயற்சி செய்ய வேண்டும். அரசு செய்யவில்லை என்று குறைசொல்வதை விட்டுவிட்டு, நாம் என்ன செய்தோம் என்று சிந்திக்க வேண்டும். அதற்கு எல்லோரும் முயற்சி செய்தால் போதும்" என்று முடித்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக