ஞாயிறு, 29 ஏப்ரல், 2018

அறிவு கொழுந்து திரிபுரா பாஜக முதல்வர் : மெக்கானிக்கலை விட சிவில் எஞ்சினியரிங் மாணவர்களே சிவில் சர்விஸ் தேர்வில் திறமையானவர்கள்

சிவில் ஓகே; மெக்கானிக்கலுக்கு நோ!மின்னம்பலம் :மெக்கானிக்கல் இன்ஜினியரிங் மாணவர்களைவிட, சிவில் இன்ஜினியரிங் மாணவர்கள் சிவில் சர்வீஸ் தேர்வினை நல்ல முறையில் எதிர்கொள்வார்கள் என்று கூறி, மீண்டுமொரு முறை சர்ச்சைக்கு ஆளாகியுள்ளார் திரிபுரா முதலமைச்சர் பிப்லாப் குமார் தேப்.
கடந்த மாதம் 9ஆம் தேதியன்று திரிபுரா மாநில முதலமைச்சராகப் பொறுப்பேற்றார் பாஜகவை சேர்ந்த பிப்லாப் குமார் தேப். கடந்த இரண்டு வாரங்களாகச் சர்ச்சைக்குரிய கருத்துகளை இவர் தொடர்ந்து தெரிவித்துவருகிறார். சில நாட்களுக்கு முன்பு, மகாபாரத காலத்திலேயே இணையம் மற்றும் செயற்கைக்கோள் வசதிகள் இருந்தன என்று கூறியிருந்தார். அறிவியலை மதத்துடன் கலக்க வேண்டாம் எனச் சில கட்சிகள், இதற்கு எதிர்ப்பு தெரிவித்தன. இரண்டு நாட்களுக்கு முன்பு, டயானா ஹைடனுக்கு உலக அழகிப் பட்டம் கொடுத்ததை ஏற்க முடியாது என்று பரபரப்பு ஏற்படுத்தினார் பிப்லாப். அதன்பின், அவ்வாறு சொன்னதற்காக மன்னிப்பு கேட்டுக்கொண்டார்.

நேற்று (ஏப்ரல் 28) அகர்தலாவில் நடந்த நிகழ்ச்சியொன்றில் கலந்துகொண்டார் பிப்லாப். அப்போது, சிவில் சர்வீஸ் தேர்வுகள் பற்றி சில கருத்துகளைப் பகிர்ந்துகொண்டார்.
”இந்த சமுதாயத்தின் கட்டுமானத்தில் அனுபவம் இருப்பதால், சிவில் இன்ஜினியர்கள் சிவில் சர்வீஸ் தேர்வுகளில் பங்கேற்கலாம். நிர்வாகத்திலும் சமூக கட்டுமானத்திலும் அவர்களுக்கு அனுபவமும் அறிவும் இருக்கும். ஒரு சிவில் இன்ஜினியர் ஐஏஎஸ் அலுவலர் ஆனால், கட்டுமானத் திட்டங்களில் தனது எண்ணங்களைப் புகுத்துவார். ஆனால், மெக்கானிகல் இன்ஜினியரால் அதனைச் செய்ய முடியாது. அதனால், மெக்கானிகல் இன்ஜினியரிங் படித்தவர்கள் சிவில் சர்வீஸ் தேர்வெழுதத் தகுதியானவர்கள் கிடையாது” என்று தெரிவித்தார். இதன் மூலமாக, மூன்றாவது முறையாக ஒரு சர்ச்சையில் மாட்டிக்கொண்டுள்ளார் பிப்லாப்.
பொறியாளர்கள் மட்டுமல்லாமல், மருத்துவர்களையும் தனது பேச்சில் இவர் சேர்த்துக்கொண்டார். “டாக்டர்கள் சிவில் சர்வீஸ் தேர்வில் வெற்றி பெறும்போது, தங்களது திறமைகளைக் கூடுதலாகப் பயன்படுத்துவார்கள். ஒருவர் டாக்டராக இருந்தால்,தனது அறிவினைப் பயன்படுத்தி இந்த சமூகத்திலுள்ள நோய்களைக் குணமாக்குவார்” என்று கூறினார் பிப்லாப்.
இவரது பேச்சு, சமூக வலைதளங்களில் மோசமான எதிர்வினைகளைப் பெற்றுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக