புதன், 4 ஏப்ரல், 2018

காங்கிரஸ் பீட்டர் அல்போன்ஸ் தரப்புடன் மோதிய காங்கிரஸ் திரவியம் தரப்பு ... கிராஸ் பயரில் சிக்கிய திமுக

காங்கிரஸார் மண்டையை உடைத்த திமுகவினர்!மின்னம்பலம்: வடசென்னையில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி திமுக சார்பில் நேற்று நடைபெற்ற போராட்டத்தில் காங்கிரஸார் மீது தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி திமுக ஏப்ரல் 5ஆம் தேதி முழு அடைப்பு போராட்டம் நடைபெறவுள்ளது. இதில், காங்கிரஸ் உள்ளிட்ட தோழமை கட்சிகளும் பங்கெடுக்கவுள்ளன. அதற்கு முன்னதாக, திமுக சார்பில் தொடர் போராட்டம் அறிவிக்கப்பட்டு, கடந்த இரண்டு நாள்களாகத் தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம் போன்றவை நடந்து வருகின்றன. அதன் ஒருபகுதியாக வடசென்னையில் உள்ள ஓட்டேரி பகுதியில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இதில், காங்கிரஸ் மூத்த தலைவர் பீட்டர் அல்போன்ஸ் கலந்துகொள்ள வந்துள்ளார். அப்போது அங்கு வந்த வடசென்னை மாவட்ட காங்கிரஸ் தலைவர் திரவியத்தின் ஆதரவாளர்கள், மாவட்டத் தலைவரிடம் தெரிவிக்காமல் எப்படி தங்கள் பகுதியில் நடைபெறும் ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொள்ளலாம் என்று பீட்டர் அல்போன்ஸிடம் கேட்டுள்ளனர். ஒருகட்டத்தில் இரு தரப்பினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.
நிலையை உணர்ந்த திமுக கிழக்கு மாவட்டச் செயலாளர் சேகர் பாபு பீட்டர் அல்போன்ஸை, காங்கிரஸ்காரர்களிடம் இருந்து காப்பாற்றினார். இதற்கிடையே, மோதலில் சேகர் பாபுவின் மைத்துனர் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது. இதனால் கோபமான திமுகவினர் அங்கிருந்த காங்கிரஸார் மீது தாக்குதல் நடத்தினர். இதில், காங்கிரஸாரின் மண்டை உடைந்துள்ளது.
இதையடுத்து போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்த திரவியம், காங்கிரஸ் மாநிலத் தலைவர் திருநாவுக்கரசருக்குத் தகவல் தெரிவித்துள்ளார். அவர் இதுகுறித்து, முகுல் வாஸ்னி, ராகுலுக்கு தெரியப்படுத்தும்படி கூறியுள்ளார். ஸ்டாலினை நேரில் போய் பார்க்கும்படியும் திரவியத்திடம் தெரிவித்துள்ளார்.
இதற்குள், நடத்த விவரத்தை முழுவதுமாக ஸ்டாலினிடம் பீட்டர் அல்போன்ஸ் தெரியப்படுத்தியுள்ளார். திரவியத்தின் ஆதரவாளர்கள் ஸ்டாலினை சந்திக்க அனுமதி கேட்டபோது, இந்த விவகாரத்தை முன்னரே அறிந்திருந்த ஸ்டாலின் சந்திக்க மறுத்துவிட்டாராம். காவிரி மேலாண்மை வாரியத்துக்காக நடத்தப்படும் போராட்டத்தில், நிகழ்ந்த இந்த மண்டை உடைப்பு சம்பவத்தால், இரு கட்சி இடையே மனஸ்தாபம் ஏற்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக