செவ்வாய், 24 ஏப்ரல், 2018

உத்தர பிரதேச சிறுமி பலாத்கார குற்றவாளிக்கு (பாஜக எம் எல் ஏ) ஆதரவாக மக்கள் ஊர்வலம்

சிறுமி பலாத்காரம்: குற்றவாளிக்கு ஆதரவாகப் பேரணி!மின்னம்பலம்: உத்தரப் பிரதேச மாநிலத்தில் சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கில் கைதான பாஜக எம்.எல்.ஏ குல்தீப் சிங்குக்கு ஆதரவாக நேற்று (ஏப்ரல் 23) பேரணி மேற்கொள்ளப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரப் பிரதேச மாநிலம் உன்னாவ் மாவட்டம் பங்கர்மாவ் தொகுதி பாஜக எம்.எல்.ஏ குல்தீப் சிங்கும், அவரது சகோதரர் அனில் சிங்கும் தன்னை பாலியல் பலாத்காரம் செய்தனர் என 2017ஆம் ஆண்டு ஜூன் மாதம் உன்னாவ் நகரைச் சேர்ந்த 17 வயது சிறுமி குற்றம்சாட்டினார். யோகி ஆதித்யநாத் வீட்டின் முன்பு சிறுமி தீக்குளிக்க முயன்றபோது இந்த விவகாரம் வெளிச்சத்துக்கு வந்தது. அதைத் தொடர்ந்து, பாஜக எம்.எல்.ஏ குல்தீப் சிங் செங்கார் கைது செய்யப்பட்டார். சிபிஐ விசாரணை நடைபெற்றுவரும் நிலையில், அவருக்கு ஆதரவாக பிகாபூர், சஃபிபூர், பங்கார்மவ் உள்ளிட்ட கிராமங்களைச் சேர்ந்த மக்கள் பஞ்சாயத்து தலைவர் அனுஜ் குமார் தீட்ஷித் தலைமையில் பேரணி நடத்தியுள்ளனர்.

பேரணியாகச் சென்ற மக்கள் எங்களுடைய எம்.எல்.ஏ குற்றவாளி கிடையாது என்றும், இது எம்.எல்.ஏவுக்கு எதிரான அரசியல் சதி எனவும் கோஷம் எழுப்பினர். பஞ்சாயத்துத் தலைவர் அனுஜ் குமார் தீட்ஷித், “மோசடியான குற்றச்சாட்டில் அவரை சிக்கவைத்துள்ளனர். அவர் பெயருக்கு அவதூறு ஏற்படுத்த வேண்டும் என்ற அரசியல் சதித்திட்டம்தான் இது. இதுதொடர்பாக சுதந்திரமான விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.
கத்துவா சிறுமி பாலியல் பலாத்காரத்துக்கு ஆளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட வழக்கில் குற்றம்சாட்டப்பட்டவர்களுக்கு ஆதரவாக இந்து ஏக்தா மஞ்ச் அமைப்பினர் பிப்ரவரி 16ஆம் தேதி ஜம்மு நகரில் தேசியக்கொடியுடன் பேரணி நடத்தினர். மேலும், தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். அதில் பாஜக அமைச்சர்கள் சௌத்ரி லால் சிங் மற்றும் சந்தர் பிரகாஷ் கங்கா கலந்து கொண்டனர்.
கத்துவாவைப் போல உன்னாவிலும் பலாத்கார குற்றவாளிக்கு ஆதரவாகப் பேரணி மேற்கொள்ளப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக