திங்கள், 9 ஏப்ரல், 2018

வடபழனி. மனைவியை கொன்ற குருக்கள் பாலகணேஷ் கைது.. ஞானப்பிரியாவின் ரத்த துளிகள் காட்டி கொடுத்தது


கொலை
தினகரன் : சென்னை: வடபழனியில் மனைவியை கொன்று நாடகமாடிய குருக்கள் பாலகணேஷ் கைது செய்யப்பட்டுள்ளார். நண்பரின் உதவியுடன் மனைவி ஞானப்பிரியாவை கொலை செய்துவிட்டு குருக்கள் பாலகணேஷ் நாடகமாடியது அம்பலமாகியுள்ளது.
கொலைவிகடன் : எஸ்.மகேஷ்t;; வடபழனியில் நடந்த இளம்பெண் கொலையில் அவரது ரத்தத் துளிகளே வழக்கின் முக்கியத் துருப்புச் சீட்டாக அமைந்ததாகப் போலீஸார் தெரிவித்தனர். சென்னை வடபழனி, தெற்கு சிவன் கோவில் தெருவைச் சேர்ந்த ஞானப்பிரியா, கடந்த 5-ம் தேதி கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில் வீட்டுக்குள் கொலை செய்யப்பட்டு கிடந்தார். அவரின் கணவர் பாலகணேஷும் கைகள் கட்டப்பட்ட நிலையில் கழிவறையில் மயங்கிய நிலையில் கிடந்தார். இந்த வழக்கை துப்பு துலக்குவதில் வடபழனி போலீஸாருக்குக் கடும் சவால்கள் காத்திருந்தன. பாலகணேஷிடம் நடந்த விசாரணை அடிப்படையில் நகைக்காக நடந்த கொலை என்று போலீஸார் முதலில் கருதினர். ஆனால், அதுதொடர்பான எந்தத் தடயங்களும் போலீஸாருக்குக் கிடைக்கவில்லை. இந்தவழக்கு பல கோணங்களில் விசாரிக்கப்பட்ட நிலையில், போலீஸாருக்குச் சில முக்கியத் தடயங்கள் கிடைத்தன. அதாவது, கொலை நடந்த வீட்டிலிருந்து சேகரிக்கப்பட்ட ரத்த மாதிரிகள், பாலகணேஷின் போன் கால் ஹிஸ்ட்ரி, அவரின் நண்பர் மனோஜ், நள்ளிரவில் வீட்டுக்கு வந்து செல்லும் சிசிடிவி காட்சிகள் ஆகியவை அடிப்படையில் விசாரணை நடந்தது. மனோஜ் வருகை குறித்து பாலகணேஷிடம் போலீஸார் விசாரித்தபோது மழுப்பலான பதிலைச் சொல்லி ஆரம்பத்தில் அவர் தப்பினார். தற்போது, போலீஸாரின் கிடுக்குப்பிடி கேள்விகளுக்குப் பதில்சொல்ல முடியாமல் வசமாகச் சிக்கிவிட்டார் பாலகணேஷ்.

 இந்த வழக்கை விசாரித்த விசாரணை அதிகாரி ஒருவர் கூறுகையில், ``ஞானப்பிரியாவின் தலையில் ஓங்கி அடித்ததால் ரத்தவெள்ளத்தில் அவர் இறந்து கிடந்தார். அவரது கை, கால்கள் கட்டப்பட்டிருந்தன. வீட்டிலிருந்து அவரது நகைகளும் கொள்ளையடிக்கப்பட்டிருந்தன. அதுபோல கழிவறையில் சில காயங்களுடன் பாலகணேஷ் மயங்கிய நிலையில் கிடந்தார். இதை வைத்துப்பார்த்தபோது நகைக்காகக் கொலை நடந்திருக்கலாம் என்று கருதினோம். ஆனால், பாலகணேஷின் நடவடிக்கை, எங்களுக்குச் சில சந்தேகத்தை ஏற்படுத்தியது. ராயபேட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற பாலகணேஷிடம் விசாரணை நடத்தச் சென்றபோது அவர் எங்களுக்கு முழு ஒத்துழைப்பு கொடுக்கவில்லை.
மேலும், அவர் தெரிவித்த தகவல்கள் முன்னுக்குப் பின் முரணாகவே இருந்தன. இதுவே பாலகணேஷ் மீதான சந்தேகம் உறுதியானது. இதனால் அதுதொடர்பான விசாரணையை நடத்தத் திட்டமிட்டோம். ஞானபிரியாவின் இறுதி அஞ்சலி நிகழ்ச்சி முடிந்து பாலகணேஷிடம் விசாரித்தபோது, மனோஜ் தொடர்பான சில கேள்விகளை அவரிடம் கேட்டோம். அப்போது, பாலகணேஷ் எங்களது கேள்விக்கு பதில் சொல்லாமல் எங்களிடமே கடுமையாகப் பேசினார். இதனால் அவரிடம் மன்னிப்பு கேட்டுவிட்டு நாங்கள் திரும்பிவந்துவிட்டோம். இதையடுத்து, அவரை மீண்டும் நேற்று விசாரணைக்கு அழைத்தோம். அவரிடம் சம்பவத்தன்று என்ன நடந்தது என்று கேட்டோம். அப்போது, அவர், இரும்புக் கம்பியால் தன்னைத் தாக்கியதாகவும், அதில் மயங்கிவிட்டதாகவும் மறுபடியும் கூறினார். அப்படியென்றால் நள்ளிரவில் எதற்காக உங்களுடைய நண்பர் மனோஜ் வீட்டுக்கு வந்தார் என்று கேட்டதற்கு, அவர் அடிக்கடி வருவார் என்று தெரிவித்தார்.

அவரது பதிலை கேட்ட நாங்கள், அவரிடம் ஏற்கெனவே தயாராக வைத்திருந்த போன் கால் ஹிஸ்ட்ரியைக் காட்டினோம். அதில் நள்ளிரவில் மனோஜை, பாலகணேஷ் போனில் தொடர்புகொண்டிருந்தது தெரியவந்தது. மேலும் மனோஜ், வீட்டுக்கு வந்து செல்லும் சி.சி.டி.வி. கேமரா காட்சிகளையும் அவரிடம் காண்பித்தோம். இதனால் பாலகணேஷின் முகம் வியர்க்கத் தொடங்கியது. பயத்தில் அவர், உண்மையைச் சொல்ல  தொடங்கினார். அதன்பிறகே அவர், ஞானபிரியாவைக் கொலை செய்ததை ஒப்புக்கொண்டார். இதற்கிடையில் மனோஜிடமும் தனியாக ஒரு போலீஸ் டீம் விசாரித்தது. அவரிடம் கிடுக்குப்பிடியான கேள்விகளைக் கேட்டோம். அவரும் சம்பவத்தன்று நடந்ததை முழுமையாகத் தெரிவித்தார். அந்தத் தகவலும் பாலகணேஷ் தெரிவித்த தகவலும் ஒரே மாதிரியாக இருந்தது.

 இதற்கிடையில் சம்பவ இடத்திலிருந்து எடுக்கப்பட்ட ஞானபிரியாவின் ரத்த மாதிரிகளும், பாலகணேஷின் உடலின் மீது இருந்த ரத்த மாதிரிகளும் ஒன்று என்று ரிப்போர்ட் வந்தது. இதனால், ஞானபிரியாவின் ரத்த தூளிகள் எப்படி பாலகணேஷின் உடல் மீது இருந்தது என்ற கோணத்தில் விசாரித்தோம். இந்தக் கேள்விக்குப் பிறகு கொலை செய்ததற்காக காரணத்தை அவர் தெரிவித்தார். குழந்தை இல்லாத காரணத்தால் கணவன், மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. ஆத்திரத்தில் ஞானபிரியாவைச் சுத்தியால் அடித்துக் கொன்ற பாலகணேஷ், தப்பித்துக்கொள்ளதான் நகைக்காகக் கொள்ளை நடந்ததுபோல நாடகமாடியதாகத் தெரிவித்தார். அதற்கு தன்னுடைய நண்பர் மனோஜின் உதவியை அவர் நாடியுள்ளார். இதற்காகத்தான் நள்ளிரவில் மனோஜை அழைத்த பாலகணேஷ், அவரிடம் நகைகள் மற்றும் பட்டுபுடவைகளை கொடுத்தனுப்பினார். பிறகு, தன்னுடைய கைகளை கட்டி கழிவறையில் போட்டுவிட்டுச் செல்லும்படி தெரிவித்துள்ளார். அதன்படி நண்பனுக்காக அனைத்தையும் மனோஜ் செய்துள்ளார்" என்றார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக