புதன், 11 ஏப்ரல், 2018

ரஜினிகாந்த் :கடுமையான சட்டங்கள் இயற்றப்படவேண்டும் . காவலர்கள் தாக்கபடுவது வன்முறையின் உச்சகட்டம்

மாலைமலர் :ஐபிஎல் எதிர்ப்பு போராட்டத்தின் போது பணியில் இருந்த
போலீசார் தாக்கப்பட்டதற்கு நடிகர் ரஜினிகாந்த் கண்டனம் தெரிவித்துள்ளார். சென்னை காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி தமிழகத்தில் அரசியல் கட்சிகள், விவசாயிகள் மற்றும் பல்வேறு அமைப்புகள் சார்பில் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இந்த விஷயத்தில் மத்திய அரசுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் ஐ.பி.எல். போட்டிகளை தமிழகத்தில் நடத்தக்கூடாது என்று தொடர்ந்து வலியுறுத்தப்பட்டது. ஆனால் திட்டமிட்டபடி ஐபிஎல் போட்டி நேற்று நடைபெற்றது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னை அண்ணா சாலையில் அரசியல் கட்சிகள் மற்றும் பல்வேறு அமைப்புகள் சார்பில் போராட்டம் நடைபெற்றது. இதனால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. போலீசார் தடுப்பு வேலி அமைத்து போராட்டக் காரர்களை மைதானம் நோக்கி செல்ல விடாமல் தடுத்தனர். தடையை மீறி சென்றபோது தள்ளுமுள்ளு ஏற்பட்டது. போராட்டத்தின் போது போலீசார் மீதும் நாம் தமிழர் கட்சியை சேர்ந்த சிலர் தாக்குதல் நடத்தினர்.


போராட்டம் நடத்திய இயக்குனர்கள் பாரதிராஜா, அமீர் மற்றும் வைரமுத்து, நாம் தமிழர் கட்சிதலைவர் சீமான், எம்.எல்.ஏ.க்கள் கருணாஸ், தமிமுன் அன்சாரி உள்ளிட்ட 500-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டனர். அவர்கள் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். கைது செய்யப்பட்டவர்களில் நாம் தமிழர் கட்சியை சேர்ந்த 21 பேர் மட்டும் சிறையில் அடைக்கப்பட்டனர். 


இந்நிலையில், போலீசார் தாக்கப்பட்டதற்கு நடிகர் ரஜினிகாந்த் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து டுவிட்டரில் அவர் பதிவு செய்துள்ளதாவது, ‘வன்முறையின் உச்சகட்டமே சீருடையில் பணிபுரியும் காவலர்கள் தாக்கப்படுவது தான்.இத்தகைய வன்முறை கலாச்சாரத்தை உடனே கிள்ளி எறியவில்லை என்றால் நாட்டுக்கே பேராபத்து.சீருடையில் இருக்கும் காவலர்கள் மீது கை வைப்பவர்களை தண்டிக்க இன்னும் கடுமையான சட்டங்களை நாம் இயற்றவேண்டும்.’, என அவர் கூறியுள்ளார்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக