புதன், 25 ஏப்ரல், 2018

மன்சூர் அலிகான் நிபந்தனை விடுதலை

மன்சூர் அலிகானுக்கு நிபந்தனை ஜாமீன்!மின்னம்பலம் :பிரதமர் மோடியின் சென்னை வருகையை எதிர்த்தும், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரியும் போராட்டத்தில் ஈடுபட்டு கைதான நடிகர் மன்சூர் அலிகானுக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது.
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத காரணத்தால், ஏப்ரல் 12ஆம் தேதி சென்னையில் நடந்த ராணுவத் தளவாடப் பொருட்கள் கண்காட்சியில் கலந்துகொள்ள வருகை தந்த பிரதமர் நரேந்திர மோடிக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது. அவருக்கு எதிராக அரசியல் கட்சிகளும், திரைப் பிரபலங்களும், விவசாய அமைப்புகளும் சென்னை விமான நிலையம் அருகில் கருப்புக் கொடி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்தப் போராட்டத்தின்போது கைது செய்யப்பட்ட நாம் தமிழர் கட்சியின் ஒருங்கினைப்பாளர் சீமானுக்கு ஆதரவாக பல்லாவரத்தில் நடிகர் மன்சூர் அலிகான் போராட்டத்தில் ஈடுபட்டார். இதனைத் தொடர்ந்து மன்சூர் அலிகான் மற்றும் போராட்டத்தில் ஈடுபட்ட 18 பேர் புழல் சிறையில் அடைக்கப்பட்டனர். அவர்கள் மீது அரசு ஊழியர்களைப் பணி செய்யவிடாமல் தடுத்தது, பொதுச் சொத்துக்களுக்கு சேதம் விளைவித்தது உள்ளிட்ட 9 பிரிவுகளின் கீழ் வழக்கு தொடரப்பட்டது.
மன்சூர் அலிகான் தரப்பில் ஜாமீன் கேட்டு சீமானின் வழக்கறிஞர் சீனிவாச குமார் செங்கல்பட்டு மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார். மாவட்ட நீதிபதி செல்வக்குமார் முன்னிலையில் ஏப்ரல் 18 மற்றும் 19ஆம் தேதிகளில் விசாரணை நடைபெற்றது.
இதனையடுத்து இன்று (ஏப்ரல் 24) நடைபெற்ற விசாரணையில், இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட 18 பேரும் மறு உத்தரவு வரும்வரை திருத்தணி நீதிமன்றத்தில் தினமும் ஆஜாராகி கையெழுத்திட வேண்டும் என்ற நிபந்தனையோடு அவர்களுக்கு ஜாமீன் வழங்கப்பட்டது. மன்சூர் அலிகானின் உடல்நிலையைக் கருதி அவர் மட்டும் செங்கல்பட்டு காவல்நிலையத்தில் தினமும் கையெழுத்திட வேண்டும் என நீதிபதி உத்தரவு பிறப்பித்தார்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக