புதன், 11 ஏப்ரல், 2018

கர்நாடகாவில் 94 லட்சம் தமிழ் வாக்காளர் ... தமிழ் வேட்பாளர்களை நிறுத்தும் கட்சிகள் .. 185 தொகுதிகளில் தமிழ் வாக்குகள்

டிஜிட்டல் திண்ணை:  தமிழர்கள் வேட்பாளர்கள்  கர்நாடகா திருப்பம்!
மின்னம்பலம்: “காவிரிப் பிரச்னைக்காகத் தமிழகமே கொந்தளித்துக் கொண்டிருக்கிறது. கர்நாடக முதல்வர் சித்தராமையா காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க விட மாட்டேன் என அடம் பிடிக்க ஆரம்பித்திருக்கிறார். இந்தச் சூழ்நிலையில்தான் கர்நாடக சட்டமன்றத் தேர்தலுக்கு முதல் கட்ட வேட்பாளரை அறிவித்துக் களத்தில் இறங்கிவிட்டது பிஜேபி. எப்படியும் கர்நாடகாவை காங்கிரஸிடமிருந்து கைப்பற்றியே ஆக வேண்டும் என்பதில் தீவிரம் காட்ட ஆரம்பித்திருக்கிறது அக்கட்சி.
பிஜேபியை சமாளிக்கவும், காவிரிப் பிரச்னையை எச்சரிக்கையாகக் கையாளவும் காங்கிரஸ் கையில் எடுத்திருக்கும் ஆயுதம் கர்நாடகாவில் உள்ள தமிழர்கள்தான்.
கர்நாடகாவில் வாக்குரிமை பெற்ற தமிழர்கள் 94 லட்சம் பேர் இருக்கிறார்கள். வெற்றி தோல்வியை நிர்ணயம் செய்வதில் தமிழர்கள் பங்கு அதிகமாக இருக்கிறது. கர்நாடகாவில் உள்ள 223 தொகுதிகளில் 185 தொகுதிகளில் தமிழர்கள் கணிசமான அளவுக்கு வசிக்கிறார்கள்.
இந்நிலையில், தமிழர்கள் வாக்குகள் அதிகம் உள்ள தொகுதிகளில் தமிழர்களையே வேட்பாளராக நிறுத்தத் திட்டமிட்டிருக்கிறது காங்கிரஸ். கடந்த திங்கள்கிழமை டெல்லியில், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் பங்கேற்ற கூட்டம் நடந்திருக்கிறது. இந்த கூட்டத்துக்கு கர்நாடக காங்கிரஸில் முக்கியப் பொறுப்பு வகிக்கும் தமிழர்கள் அழைக்கப்பட்டுள்ளனர். தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியிலிருந்தும் அந்தக் கூட்டத்தில் சிலர் பங்கேற்றிருக்கிறார்கள்.
அந்தக் கூட்டத்தில் பேசிய காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ஒருவர், ‘கர்நாடகாவில் நாம ஆட்சியை மறுபடியும் தக்க வைத்தே ஆகணும். அதற்கு என்ன செய்யலாம் என்பதை யோசிக்கணும். அதே நேரத்தில் காவிரி பிரச்னையில் நாம நடுநிலையோடுதான் செயல்பட வேண்டும். தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியில் இருப்பவங்க தண்ணீர் கேட்டுப் போராடுவார்கள். அதேநேரம் கர்நாடகாவில் இருக்கும் நம் ஆட்கள் தண்ணீர் தர முடியாது என்பார்கள். இந்த நேரத்தில் கர்நாடகாவில் வசிக்கும் தமிழர்களுக்கு நம் மீது கோபம் வரும். அதை சமாளிக்க வேண்டிய நேரம்தான் இது.
கர்நாடகாவில் இருக்கும் நம் கட்சியை சேர்ந்த நீங்கதான் இப்போ பேசணும். ‘கர்நாடகாவிலேயே குடிக்க தண்ணீர் இல்லை.. இருந்தால் கொடுக்க நாங்க தயாராக இருக்கோம். தண்ணீரை கொடுக்காமல் கர்நாடகா வஞ்சிக்கவில்லை. பாஜகதான் இந்த விவகாரத்தில் இரட்டை வேஷம் போடுகிறது’ என்பதை நீங்க அழுத்தம் திருத்தமாக சொல்லணும். அப்போதான் அது கர்நாடகாவில் இருக்கும் மக்களையும் சமாதானப்படுத்தும், தமிழ்நாட்டுப் போராட்டங்களின் வீரியத்தையும் குறைக்கும். இதைக் கன்னடர்கள் சொல்வதைவிட, கர்நாடகாவில் வசிக்கும் தமிழர்கள் சொன்னால்தான் சரியாக இருக்கும். அதாவது நீங்க சொன்னாதான் சரியாக இருக்கும்..’ என்று சொன்னாராம்.
‘இதனால் தமிழ்நாட்டில் எங்களுக்கு எதிர்ப்பு வராதா?’ என்று ஒரு பிரமுகர் கேட்டிருக்கிறார். ‘நீங்க வசிப்பது எல்லாமே கர்நாடகாவுல. தமிழ்நாட்டுக்கு இப்போதைக்கு வரப்போவதும் இல்லை. உங்க அரசியல் எல்லாமே கர்நாடகாவில்தான் இருக்கும். அப்புறம் எதுக்காக தமிழ்நாட்டைப் பார்த்து பயப்படுறீங்க? இப்போதைக்கு உங்க டார்கெட் கர்நாடகாதான். அதை சரியா செய்யுங்க..’ என்று சொன்னாராம் அந்த மூத்த தலைவர். கர்நாடகா திரும்பிய காங்கிரஸ் பிரமுகர்கள், தமிழகத்தைத் தாழ்த்தியும், கர்நாடகாவுக்கு ஆதரவாகவும் உரத்தக் குரலில் பேச ஆரம்பித்துவிட்டார்கள். இதை பாஜக கொஞ்சமும் எதிர்பார்க்கவில்லை. அவர்களும் தமிழர்கள் அதிகம் வசிக்கும் பகுதிகளில், தமிழரையே நிறுத்தலாமா என ஆலோசனை நடத்த ஆரம்பித்துள்ளனர்” என்று முடிந்தது அந்த ஸ்டேட்டஸ்.
அதற்கு லைக் போட்டு ஷேர் செய்தது வாட்ஸ் அப். தொடர்ந்து மெசேஜ் ஒன்றை டைப்பிங் செய்ய ஆரம்பித்தது வாட்ஸ் அப்.
“திரையுலகினர் கடந்த ஞாயிறு அன்று மவுனப் போராட்டம் நடத்திவிட்டு கிளம்பிவிட்டார்கள். அதன் பிறகு கடந்த 3 நாட்களாகவே அமீர், பாரதிராஜா என இயக்குனர்கள் திடீரென வீதிக்கு வந்து போராட ஆரம்பித்துள்ளனர். அவர்கள் போராட்டமும் மக்கள் கவனத்தை ஈர்த்திருக்கிறது. இது தொடர்பாக முதல்வருக்கு ரிப்போர்ட் அனுப்பியிருக்கும் உளவுத் துறை, ‘இயக்குனர்களை ஒன்று சேர்த்து போராட்ட களத்துக்கு இழுத்து வருபவர் பாரதிராஜாதான். தினமும் அவர்தான் இயக்குனர்கள், நடிகர்கள் என எல்லோருக்கும் தொடர்ந்து போன் செய்து பேசுகிறார். போராட்டத்துக்கும் அழைக்கிறார். காவிரி மீட்புக் குழு என்ற ஒரு வாட்ஸ் அப் குரூப்பையும் அவர்தான் உருவாக்கி திரையுலகினரை அதில் இணைத்திருக்கிறார். அந்த குரூப்பில் தினமும் மெசேஜ் போட்டு, போராட்டத்துக்கான இடம் நேரம் எல்லாவற்றையும் குறிப்பது பாரதிராஜாதான்...’ என்று அந்த ரிப்போர்ட்டில் தெரிவித்திருக்கிறதாம்.
இதைப் பார்த்துவிட்டு, ‘பாரதிராஜாவை அழைத்துப் பேசுவோம்’ எனச் சொல்லியிருக்கிறாராம் எடப்பாடி” என்று முடிந்த மெசேஜ்க்கு செண்ட் கொடுத்துவிட்டு ஆஃப்லைனில் போனது வாட்ஸ் அப்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக