புதன், 25 ஏப்ரல், 2018

சென்னையில் தலைமைக் காவலர் மனைவியிடம் 8 சவரன் தாலி செயின் பறிப்பு

செயின் பறிப்பு - சித்தரிப்புப் படம் THE HINDU TAMIL :; பெரியார் நகரில் தலைமைக் காவலர் மனைவியிடம் மோட்டார் சைக்கிளில் வந்த நபர்கள் 8 சவரன் தாலி செயினைப் பறித்துச் சென்றனர்.
சென்னையில் செயின் பறிப்பு சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. தனியாகச் செல்லும் பெண்களைக் குறிவைத்து மோட்டார் சைக்கிளில் வரும் நபர்கள் செயினைப் பறித்துச் செல்கின்றனர். இவ்வாறு செயின் பறிப்பில் ஈடுபடும் நபர்களால் செயினையும் பறிகொடுத்து கீழே விழுந்து காயம் அடையும் பெண்களே அதிகம்.
செயின் பறிப்பு நபரை தீரத்துடன் விரட்டிச் சென்று சிறுவன் சூர்யா பிடித்ததை அனைவரும் பாராட்டிய நிலையில் மறுநாளே மூன்று இடங்களில் 16 சவரன் வரை செயின் பறிப்பு நடந்தது. புதிதாக செல்போன், செயின் பறிப்புகளில் ஈடுபடும் இளைஞர்களால் போலீஸார் குற்றவாளிகளைப் பிடிப்பதில் சிக்கல் ஏற்படுகிறது.இந்நிலையில் இன்று தலைமைக் காவலர் ஒருவரின் மனைவியிடமே செயின் பறிப்பு நபர்கள் தங்கள் வேலையைக் காட்டியுள்ளனர்.

சென்னை மாதவரம் காவல் நிலையத்தில் தலைமைக் காவலராக பணிபுரிபவர் வேலுமணி. இவரது மனைவி உமா தேவி. இவர்கள் கொளத்தூர் அருகே உள்ள பெரியார் நகரில் வசித்து வருகின்றனர்.
இன்று உமாதேவி வெளியே சென்றுவிட்டு தனது வீட்டருகில் நடந்து சென்று கொண்டிருந்தபோது மோட்டார் சைக்கிளில் வந்த இரண்டு நபர்கள் அவர் கழுத்தில் அணிந்திருந்த 8 சவரன் தங்கத் தாலியைப் பறித்துச் சென்றனர்.
இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் திருடன், திருடன் என்று கூச்சலிட்டார். ஆனால் அவர்கள் மோட்டார் சைக்கிளில் பறந்துவிட்டனர். தாலிச் சங்கிலி பறிபோனது குறித்து தனது கணவருடன் அருகிலுள்ள ராஜமங்கலம் காவல் நிலையத்தில் உமா தேவி புகார் அளித்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக