புதன், 25 ஏப்ரல், 2018

உ.பி .. சொந்த காசில் ஆக்சிஜன் வாங்கி உயிர்காத்த டாக்டருக்கு 7 மாதங்களுக்கு பின்பு ஜாமீன் வழங்கிய RSS முதலமைச்சர் யோகி ஆதித்ய நாத்

tamilthehindu :உத்தரப்பிரதேச மாநிலம், கோரக்பூர் அரசு மருத்துவமனையில், ஆக்சிஜன் பற்றாக்குறையால் 70 குழந்தைகள் பலியான விவகாரத்தில், கைது செய்யப்பட்ட டாக்டர் கபீல் கானுக்கு அலஹாபாத் உயர் நீதிமன்றம் இன்று ஜாமீன் வழங்கியது.
தனது சொந்த பணத்தில் ஆக்சிஜன் சிலிண்டர் வாங்கிக்கொடுத்து ஏராளமான குழந்தைகளை டாக்டர் கபீல் கான் காப்பாற்றினார். அப்பகுதி மக்களின் பாராட்டுக்குரியவரானார் கபீல் கான். ஆனால், திடீரென உ.பி அரசு கைது செய்தது குறிப்பிடத்தக்கது.
உத்தரப்பிரதேச மாநிலம், கோரக்பூரில் உள்ள பிஆர்டி மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் குழந்தைகள் பிரிவில் 70-க்கும் மேற்பட்ட குழந்தைகள் ஆக்சிஜன் பற்றாக்குறையால் மூச்சுத்திணறி இறந்தன.
இந்த மருத்துவமனைக்கு ஆக்சிஜன் சப்ளை செய்த நிறுவனத்துக்கு நிலுவை தொகையை மருத்துவமனை நிர்வாகம் செலுத்தாத காரணத்தால், ஆக்சிஜன் சிலிண்டர் சப்ளையை அந்த நிறுவனம் நிறுத்தியது.

இந்நிலையில் குழந்தைகளின் உயிரைக் காப்பாற்ற குழந்தைகள் பிரிவில் பணியாற்றிய டாக்டர் கபீல்கான் தனது சொந்த செலவில் ஆக்சிஜன் சிலிண்டர்களை வாங்கி ஏராளமான குழந்தைகளின் உயிரைக்  காப்பாற்றினார். இந்த செயலுக்காக அனைவராலும் பாராட்டப்பட்டார். டாக்டர் கபீல் அங்குள்ள மருத்துவக்கல்லூரி மருத்துவமனையிலும் குழந்தைகள் நலப்பிரிவு உதவிப் பேராசிரியராகப் பணியாற்றி வந்தார்.
இந்நிலையில், குழந்தைகள் இறந்த விவகாரம் நாடுமுழுவதும் பெரும் பரபரப்பையும் கொந்தளிப்பையும் ஏற்படுத்தியது. நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடரிலும் எதிரொலித்தது.
இதையடுத்து, குழந்தைகள் இறந்தபோது, பணியில் இருந்த டாக்டர் கபீல் கான் உள்ளிட்ட 9 பேரை முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையிலான அரசு கைது செய்ய உத்தரவிட்டது.
இதில் கபில்கான் மீது ஐபிசி 120-பி, 308, 409 ஆகிய பிரிவின் வழக்குப்பதிவு செய்த போலீஸார் அவரை கைது செய்தனர். அதன்பின் குற்றப்பத்திரிகையும் தாக்கல் செய்தனர்.
ஏறக்குறைய 7 மாதங்கள் சிறையில் இருந்தார். கபீல்கானை ஜாமீனில் விடுவிக்க 6 முறை இவரின் குடும்பத்தார் மனுச் செய்தும் லக்னோ உயர் நீதிமன்றம் ஜாமீன் வழங்கவில்லை.
இந்நிலையில்,கடந்த வாரம் டெல்லியில் பேட்டி அளித்த கபீல்கானின் மனைவி டாக்டர் சபிஸ்டா கான் பேசுகையில், சிறை அதிகாரிகள் எனது கணவர் கபீல்கானுக்கு முறையான மருத்துவ சிகிச்சைகள் அளிப்பதில்லை. எனது கணவரின் உடல்நிலையைக் கருத்தில் கொண்டு உடனடியாக ஜாமீன் வழங்க வேண்டும். எனது கணவர் இதயநோயாளி. ரத்த அழுத்தம் அதிகமாக இருக்கிறது. அவரின் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டால் மாநில அரசுதான் பொறுப்பு என்று தெரிவித்தார்.
இதையடுத்து அலகாபாத் உயர்நீதிமன்றத்தில் கபீல்கானுக்கு ஜாமீன் கோரி மனுத்தாக்கல் செய்யப்பட்டு இருந்தது. அந்த மனு இன்று நீதிபதி யஷ்வந்த் வர்மா முன் விசாரணைக்கு வந்தது. அந்த மனுவை விசாரணை செய்த நீதிபதி, டாக்டர் கபீல் கானுக்கு ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார். இந்த வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுவிட்டதால், இனிமேல், டாக்டர் சிறையில் இருக்க வேண்டிய அவசியம் இல்லை எனத் தெரிவித்தார்.
இந்தத் தகவலை கபீல் கானின் வழக்கறிஞர் சதாபுல் இஸ்லாம் ஜாப்ரியும் உறுதி செய்தார்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக