புதன், 25 ஏப்ரல், 2018

ஆசிரியர் போராட்டம் ... 3 நாளாக சம வேலைக்கு சம ஊதியம் வழங்க கோரி சென்னை ...

ஆசிரியர்கள் போராட்டம்: தலைவர்கள் கருத்து!
மின்னம்பலம் :சம வேலைக்கு சம ஊதியம் வழங்க வேண்டுமெனக் கோரி தமிழகத்திலுள்ள இடைநிலை ஆசிரியர்கள் மூன்றாவது நாளாகப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதற்கு திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின், மார்க்சிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் சோ.பாலகிருஷ்ணன், பாமக நிறுவனர் ராமதாஸ் உள்ளிட்ட தமிழக தலைவர்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர்.
தமிழகத்திலுள்ள இடைநிலை ஆசிரியர்கள் சம வேலைக்கு சம ஊதியம் வழங்க வேண்டுமெனக் கோரி, சென்னை எழும்பூர் ராஜரத்தினம் மைதானத்தில் போராட்டம் நடத்தி வருகின்றனர். தமிழகம் முழுக்கவுள்ள சுமார் இருபதாயிரத்திற்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் இந்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதன் ஒரு பகுதியாக, சென்னையில் வள்ளுவர் கோட்டத்திலுள்ள மகளிர் மேல்நிலைப் பள்ளியில் 2000க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் தொடர்ந்து மூன்றாவது நாளாகப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

”தமிழக அரசுப் பள்ளிகளில் கடந்த 2009ஆம் ஆண்டு ஜூன் 30ஆம் தேதிக்குப் பின்னர் நியமிக்கப்பட்ட இடைநிலை ஆசிரியர்களுக்கு அதற்கு முந்தைய மாதத்தில் (31.5.2009) பணி நியமனம் செய்யப்பட்ட சக இடைநிலை ஆசிரியர்களுக்கும் ரூ.14,000/- ஊதிய முரண்பாடு உள்ளதைக் களைய வேண்டும், சம வேலைக்கு சமஊதியம் வழங்கிட வேண்டும்” உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, ஏப்ரல் 23ஆம் தேதியன்று இடைநிலை ஆசிரியர்கள் சென்னை டிபிஐ அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.
அவர்களைக் களைந்து செல்ல காவல்துறை வற்புறுத்திய போதும், போராட்டக்காரர்கள் கலைந்து செல்ல மறுத்தனர். இதனால், அவர்களை எழும்பூரில் உள்ள ராஜரத்தினம் மைதானத்திற்குக் கொண்டு சென்றனர். அங்கு, ஆசிரியர்கள் தங்களது உண்ணாவிரதப் போராட்டத்தை தொடர்ந்து வருகின்றனர். உண்ணாவிரதத்தில் ஈடுபட்டவர்களில் எழுபதுக்கும் மேற்பட்டோர் உடல்நலம் பாதிக்கப்பட்டனர். இவர்களில் சுமார் 15 பேர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர் என்று தகவல் வெளியாகியுள்ளது.
இந்தப் போராட்டதிற்கு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் ஆதரவு தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில், திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் ராஜரத்தினம் மைதானம் சென்று, போராட்டத்தில் ஈடுபட்டுவரும் ஆசிரியர்களைச் சந்தித்தார். அவர்களது கோரிக்கைகளைக் கேட்டறிந்தார்.
“தமிழ்நாடே போராட்டக்களமாய் மாறியுள்ளது. எங்கு பார்த்தாலும் மக்கள் தங்களது கோரிக்கைகளுக்காகப் போராடி வருகின்றனர். ஆனால், மாநில அரசோ எந்தவொரு மக்கள் பிரச்சினைக்கும் செவிசாய்ப்பதாகத் தெரியவில்லை. எதிர்க்கட்சி என்ற நிலையில் உங்களது கோரிக்கைகள் சம்மந்தப்பட்ட துறைக்கு திமுக எடுத்துச் செல்லும். நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்ற எனது சார்பில் அழுத்தம் கொடுக்கப்படும்” என்று அவர்களிடம் தெரிவித்தார் ஸ்டாலின்.
இப்பிரச்சினையின் தீவிரம் உணர்ந்து, நியாயமான கோரிக்கைகளுக்காகப் போராடும் இடைநிலை ஆசிரியர்களை, தமிழக அரசு உடனடியாக அழைத்துப் பேசி சுமூகத் தீர்வு காண வேண்டுமென்று அறிக்கை வெளியிட்டுள்ளார் மார்க்சிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன்.
இந்த விவகாரம் தொடர்பாக் அறிக்கை வெளியிட்டுள்ள பாமக நிறுவனர் ராமதாஸ், இடைநிலை ஆசிரியர்களின் ஊதிய விகிதத்தில் மிகப்பெரிய துரோகம் இழைக்கப்பட்டிருப்பதாகவும், ஆசிரியர்களைப் போராட்டம் நடத்தும் நிலைக்குத் தள்ளியிருப்பது அரசுக்கு அவமானம் என்றும் தெரிவித்துள்ளார்.
இந்த போராட்டத்தின் தீவிரத்தைக் கருத்தில் கொண்டு உடனடியாக அமைச்சர் அளவில் பேச்சுவார்தைக்கு ஏற்பாடு செய்து ஆக்கப்பூர்வமான நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் என்று, முன்னதாக ஆர்.கே.நகர் சட்டமன்ற உறுப்பினர் டிடிவி தினகரன் வலியுறுத்தியிருந்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக