திங்கள், 9 ஏப்ரல், 2018

போலீசின் வன்முறை ... 35 லட்சம் நஷ்ட ஈடு கேட்கும் பிரகாஷின் தாய் .. மனித உரிமை ஆணையத்திடம் மனுத்தாக்கல்

tamilehindu :என்னிடம் போலீஸார் அத்துமீறி நடந்துகொண்டதால் நான் மனதளவிலும், உடலளவிலும் பாதிக்கப்பட்டேன். அதற்கு நஷ்ட ஈடாக 35 லட்சம் ரூபாய் தர உத்தரவிட வேண்டும் என்று மாநில மனித உரிமை ஆணையத்திடம் பிரகாஷின் தாயார் சங்கீதா மனுத்தாக்கல் செய்துள்ளார்.
சென்னை தி.நகரில் சாலையோரம் இருந்த இரும்புக் கம்பத்தில் இளைஞர் பிரகாஷை கட்டி வைத்து அவரது தாய் மற்றும் சகோதரி முன்பாக போலீஸார் அடித்து உதைத்தனர். இந்த சம்பவம் வாட்ஸ் அப், பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் பரவி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த விவகாரம் தொடர்பாக தேசிய மனித உரிமை ஆணையத்தில் புகார் அளிக்கப்பட்டது. மாநில மனித உரிமை ஆணையம் சம்மன் அனுப்பியது.

இந்நிலையில் பிரகாஷின் அம்மா சங்கீதா மாநில மனித உரிமை ஆணையத்திடம் நடந்தது என்ன? என்பது குறித்து தன் தரப்பு விளக்கத்தை மனுவாகத் தாக்கல் செய்துள்ளார்.
அதில் சங்கீதா தெரிவித்திருப்பதாவது:
"கடந்த 2.4.2018 அன்று மாலை 6.30 மணியளவில் வீட்டுக்குத் தேவையான சில பொருட்களை வாங்க மகன் பிரகாஷ், மகளுடன் அவனது மோட்டார் சைக்கிளில் சென்றோம். பொருட்களை வாங்கிவிட்டு வீட்டுக்கு வரும்போது உதவி ஆய்வாளர்கள் ஜெயராமன், சுரேஷ் மற்றும் பெயர் தெரியாத நபர் ஆகியோர் வாகனத்தை தடுத்து நிறுத்தினர். 3 பேர் வந்தது குறித்தும், ஹெல்மெட் போடாதது குறித்தும் கேள்வி எழுப்பினர்.
வசதி இல்லாததால் ஆட்டோவில் வர முடியவில்லை என்றும், பொருட்கள் இருப்பதால் ஹெல்மெட் போடவில்லை என்றும் என் மகன் பிரகாஷ் விளக்கம் அளித்தார். அப்போது போலீஸார் 500 ரூபாய் பணம் கேட்டனர். ரசீது கொடுத்தால் பணம் தருவதாக என் மகன் கூறியது போலீஸாருக்கு கோபத்தை ஏற்படுத்த, அவர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். என் மகன் ரசீது வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தார். அதனால் என் மகனுக்கும் போலீஸாருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. 'ஆட்டோவில் போக வக்கில்லையா' என்று கேட்ட போலீஸார் தகாத, தரக்குறைவான வார்த்தைகளால் எங்களை அவமானப்படுத்தினர். மகன் பிரகாஷின் சட்டையைப் பிடித்து இழுத்து அடித்ததோடு, தடுக்கப் பார்த்த என்னையும் தள்ளிவிட்டனர்.
இதனால் ஆவேசம் அடைந்த என் மகன் போலீஸாரின் சட்டையைப் பிடிக்க, அவனை கொடூரமாகத் தாக்கினார்கள். நான் தடுக்க முயன்ற போது மீசை இல்லாத போலீஸ் ஒருவர் வாக்கி டாக்கியால் என் நெஞ்சில் தாக்கினார். கீழே தள்ளிவிட்டதில் நிலைகுலைந்து விழுந்த என்னை தலைமுடியைப் பிடித்து இழுத்து தாக்க வந்தார்கள். அப்போது என் மகள் குறுக்கே புகுந்து தடுத்தார்.
பின்னர் என் மகனை அடித்து ஸ்டேஷனுக்கு இழுத்துச் சென்றனர். அங்கு வைத்தும் என் மகனைத் தாக்கியதோடு, அவன் மீது வழக்குப் பதிவு செய்தனர்.
இந்தச் சம்பவத்தால் நான் மனதளவிலும் உடலளவிலும் பாதிக்கப்பட்டிருக்கிறேன். ரத்த வாந்தி, வயிறு மற்றும் இதயத்தில் கடுமையான வலியால் அவதிப்பட்டு வருகிறேன்.
என் மகன் பிரகாஷ் மீது போடப்பட்டுள்ள எப்.ஐ.ஆரை ரத்து செய்வதோடு, அவருக்கு நஷ்ட ஈடாக ரூ.25 லட்சம் தர வேண்டும். எங்களைத் தாக்கி, தரக்குறைவாகப் பேசிய மாம்பலம் இன்ஸ்பெக்டர் பிரபு, உதவி ஆய்வாளர்கள் ஜெயராமன், சுரேஷ், பெயர் தெரியாத போக்குவரத்து பெண் போலீஸ், உதவி ஆய்வாளர் ஆகியோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். எனக்கு 10 லட்சம் ரூபாய் நஷ்ட ஈடு தர உத்தரவிட வேண்டும்'' என்று மனுவில் சங்கீதா தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக