திங்கள், 30 ஏப்ரல், 2018

குஜராத்தில் புத்த மதத்துக்கு மாறிய 300 தலித்துகள் - காரணம் என்ன?


BBC : குஜராத்தில் உனா அருகில் உள்ள மோட்டா சமாதியாலா கிராமத்தில், சுமார் 300 தலித் குடும்பத்தினர் இந்து மதத்தை விடுத்து புத்த மதத்தை தழுவினார்கள்.
 இந்த கிராமத்தில் 2016ஆம் ஆண்டு பசு காவலர்கள் என்று தங்களை அடையாளப்படுத்தி கொண்டவர்கள், வாஷ்ராம் சர்வாயியா மற்றும் அவரது சகோதரர்களை பசுக்களைக் கொன்றவர்கள் என்று குற்றஞ்சாட்டி அரை நிர்வாணப்படுத்தி சவுக்கால் அடித்து இழுத்துச் சென்றனர்.
 இந்த சம்பவம் குஜராத்தில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தி, தலித்துகள் மத்தியில் மாபெரும் எழுச்சிக்கு வழிவகுத்தது. இதன் காரணமாக ஏராளமான தலித்துகள் புத்தமதத்தை தழுவினார்கள்.
 உனா கிராமத்தைச் சேர்ந்தவர்களும், அங்கு தாக்கப்பட்டவர்கள் மற்றும் அவர்கள் குடும்பத்தினர் அனைவரும் புத்தமதத்தை தழுவப் போவதாக அறிவித்தார்கள். தாங்கள் தொடர்ந்து ஒதுக்கப்படுவதாகவும், குஜராத் அரசு தங்களுக்கு எவ்வித ஆதரவும் வழங்கத் தவறிவிட்டதாகவும் குற்றஞ்சாட்டினார்கள்.
  மதம் மாறும் நிகழ்ச்சிக்கு சர்வய்யா குடும்பத்தினர் ஏற்பாடு செய்திருந்தனர். குஜராத் முழுவதிலும் இருந்து வந்திருந்த தலித்துகளை அவர்கள் வரவேற்று விருந்தளித்தனர்.
இருப்பினும், குஜராத்தில் நடைபெற்ற இந்த கொடுஞ்செயலைத் தொடர்ந்து தேசிய அளவில் பிரபலமடைந்த தலித் தலைவர்கள் ஜிக்னேஷ் மேவானி போன்றோர் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்கவில்லை. 


புத்த மதத்தை தழுவியவர்களில் வாஷ்ராம், ரமேஷ், பேச்சர், அவர்கள் தந்தை பாலு சர்வய்யா மற்றும் அவர்களது உறவினர் அஷோக் சர்வய்யா ஆகியோர் அம்பேத்கரின் 22 சபதங்களை ஏற்றனர்.< /> இந்த சபதங்களில் "இந்து கடவுள்களையும் அம்மன்களையும் நம்பமாட்டேன் மற்றும் இந்து சடங்குகளை பின்பற்ற மாட்டேன்" என்பதும் அடங்கும்.
தலையை சுத்தமாக மழித்திருந்த பாலு சர்வய்யா இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க வந்திருந்த ஒவ்வொருவரையும் வரவேற்பதில் மிகுந்த மகிழ்ச்சியைக் கொண்டிருந்தார். வந்திருந்தவர்களை உபசரிப்பதிலும் அவர்களுக்கு உணவு மற்றும் குடிநீர் வழங்குவதிலும் அவர் பெரும் கவனம் செலுத்தி தொடர்ந்து கண்காணித்தார்.


 43 டிகிரி செல்சியஸ் வெயில் சுட்டெரித்தாலும் மொத்த சடங்குகளும் நிறைவடையும் வரை மக்கள் அந்த இடத்தை விட்டு அகலவில்லை. பிபிசி குஜராத்தி சேவையிடம் பேசிய பாலு, "இன்றிலிருந்து நாங்கள் புதிய வாழ்க்கையை தொடங்குவோம். குஜராத்தில் புத்தமதம் பரவுவதற்கு நாங்கள் அனைவரும் பாடுபடுவோம். டாக்டர் பி.ஆர். அம்பேத்கர் காட்டிய வழியில் நாங்கள் நடப்போம்" என்றார்.சரவய்யா சகோரதரர்களில் வாஷ்ராம் வெளிப்படையாக பேசினார். "உங்களுக்கு கண்ணியம் கிடைக்காத மதத்தை தொடர்ந்து கடைபிடிப்பதில் அர்த்தம் என்ன" என்று கேள்வி எழுப்புகிறார் அவர்.
 

வெள்ளை ஆடை அணிந்து கூட்டத்தினரை சமாளிக்க நியமிக்கப்பட்டிருந்த தன்னார்வலர்களுக்கு தொடர்ந்து கட்டளையிட்டுக்கொண்டிருந்த வாஷ்ராம் கூறுகையில், புத்த மதம் மாடுகளுக்கும், பிற விலங்குகளுக்கும் பதிலாக மனிதர்களிடத்திலும் அன்பு செலுத்துவதற்கு கற்றுக்கொடுக்கிறது என்றார்.
மதம் மாறும் நிகழ்ச்சி காவல்துறையினரை திணறவைத்தது. உனாவைத் தாண்டி மோட்டா சமாதியாலாவிற்கு செல்லத் தொடங்கியதுமே பலத்த போலீஸ் பாதுகாப்பினை காண முடிந்தது.
கிர் சோம்நாத் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் பிபிசி குஜராத்தி சேவையிடம் பேசுகையில், "இந்த நிகழ்ச்சியில் 350 காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு இருக்கிறார்கள். மூன்று துணை கண்காணிப்பாளர்கள், காவல்துறை ஆய்வாளர்களின் அணியினருடன் முக்கியமான இடங்களில் பணியமர்த்தப்பட்டுள்ளனர்" என்றார்.
பசு தோலுரிக்கப்பட்ட இடத்தில் புத்த விகாரம் ஒன்றை ஏற்படுத்த உனா தாக்கப்பட்டவர்கள் விரும்புகிறார்கள்.
 

பிபிசியிடம் பேசிய வாஷ்ராம் சர்வய்யா, உனா வன்கொடுமை நடைபெற்ற இடத்தில் அதாவது முன்பு அவர்கள் பசுக்களை தங்கள் வாழ்வாதாரத்திற்காக தோலுரித்து வந்த பயன்படுத்தப்படாத இடத்தைப் பெறுவதற்கு பாடுபடப் போவதாக அறிவித்தனர்.
 

"இந்த இடத்தில் தான் நாங்கள் தாக்கப்பட்டோம். இந்த இடத்தில் நாங்கள் புத்தக விகாரம் அமைக்க விரும்புகிறோம் இந்த இடத்தை சட்டபூர்வமாக பெறுவதற்கு குடும்பத்தினர் விரைவில் முயற்சிப்பார்கள். இறந்து போன மாடுகளின் தோலை உரிப்பதற்கு ஒவ்வொரு கிராமத்திலும் இடம் இருக்கும். பொதுவாக இந்த இடம் தலித்துகளுக்கு வழங்கப்படும் எனவே இந்த இடத்தை எங்கள் மதத்திற்காக பெற விரும்புகிறோம்."உனா அட்டூழியம்
2016 ஜூலை மாதம் உனாவில் நடைபெற்ற சவுக்கடி சம்பவத்தின் வீடியோ காட்சிகள் நாடெங்கும் உள்ள தலித்துகளிடையே சீற்றத்தை ஏற்படுத்தியது. நாடெங்கும் நடைபெற்ற பரவலான எதிர்ப்பு காரணமாக முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டது.

ராகுல் காந்தி, மாயாவதி மற்றும் குஜராத் முன்னாள் முதல் அமைச்சர் ஆனந்திபென் படேல் உள்ளிட்ட ஏராளமான தலைவர்கள் தாக்கப்பட்டவர்களின் குடும்பத்தினரை சந்தித்தனர். உனா சவுக்கடி சம்பவம் தொடர்பாக 45 பேர் கைது செய்யப்பட்டனர். இதில் 11 பேர் மட்டுமே சிறையில் இருக்கின்றனர். மற்றவர்கள் ஜாமீனில் வெளியே வந்துள்ளனர்.
சட்டமன்றத்திலும் சீற்றத்தை ஏற்படுத்தியது.
குஜராத்தின் அன்றைய முதல் அமைச்சர் ஆனந்திபென் படேல், தாக்கப்பட்டவர்களுக்கு வேலைவாய்ப்பும், விவசாயம் செய்ய நிலமும் வழங்குவதாக உறுதியளித்தார். ஆனால் தலித் தலைவர் ஜிக்னேஷ் மேவானி எழுப்பிய கேள்விக்கு, உனா அட்டூழியத்தில் தாக்கப்பட்டவர்களுக்கு ஆனந்திபென் வழங்கிய வாக்குறுதிகள் குறித்து எழுத்துபூர்வமாக எதுவும் இல்லை என்று அரசு தெரிவித்தது.

தங்கள் மதமாற்றத்தை ஏற்க தலித்துகள் பொதுநலன் வழக்கு தொடர முடிவு
தலித்துகள் புத்தமதத்தை தழுவினாலும் அவர்கள் அரசு ஆவணங்களில் "இந்து" என்றே அழைக்கப்படுகிறார்கள். உனாவைச் சேர்ந்த தலித் தலைவர் கேவல்சிங் ராத்தோர் கூறுகையில், 2013 ஆம் ஆண்டு முதல் புத்த மதத்தைத் தழுவிய பெரும்பாலான தலித்துகள் அரசு ஆவணங்களில் தங்கள் மதத் மாற்ற காத்திருக்கின்றனர். குஜராத்தில் உள்ள மத மாற்ற தடைச் சட்டம், அரசியலமைப்புச் சட்டத்திற்கு விரோதமானது என்கிறார் ராத்தோர். விரைவில் இதனை நீதிமன்றத்தில் எதிர் கொள்ள இருப்பதாகவும் அவர் கூறினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக