புதன், 25 ஏப்ரல், 2018

சாமியார் ஆசாராம் பாபுவுக்கு ஆயுள்தண்டனை .மற்ற 2 பேருக்கு 20 ஆண்டுகள் தண்டனை.

ஜோத்பூர்: குஜராத் மற்றும் உத்தரப்பிரதேச சிறுமிகளை பலாத்காரம் செய்த வழக்கில் சாமியார் ஆசாராம் பாபுவுக்கு ஆயுள் தண்டனை விதித்து ஜோத்பூர் நீதிமன்றம்  தீர்ப்பளித்துள்ளது.அத்தீர்ப்பில் சாமியார் ஆசாராம் பாபு உட்பட 3 பேர் குற்றவாளிகள் என நீதிபதி தீர்ப்பளித்தார். ஆசாராம் பாபுவின் கூட்டாளிகள் 2 பேர் விடுதலை செய்யப்பட்டனர். . அதில் ஆசாராம் பாபுவுக்கு ஆயுள் தண்டனையும் மற்ற 2 பேருக்கு 20 ஆண்டுகள் தண்டனையும் விதிக்கப்பட்டது.
asaram_bapuதினமணி :அகமதாபாத்: தன்னைத் தானே சாமியார் என்று அழைத்துக் கொண்டு, மிகப் பிரபலமாகி, பல அரசியல் தலைவர்களை காலில் மண்டியிட வைத்த ஆசாராம் பாபுவுக்கு சாகும் வரை ஆயுள் தண்டனை விதித்து ஜோத்பூர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
சாமியார் என்று தன்னைத் தானே கூறிக் கொண்ட ஆசாராம் பாபு, மிகப்பெரிய உச்சத்தில் இருந்து, ஆயிரக்கணக்கான பக்தர்களுக்கு மத்தியில் வலம் வந்தவர், தற்போது சிறுமியை வன்கொடுமைக்கு உள்ளாக்கியக் குற்றச்சாட்டில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
சாமியார் என்ற பார்வையில் இருந்து மாறி, அவரது தனிப்பட்ட சில விஷயங்களை பார்க்கும் போது, அவரது பணத்தைக் கொண்டு இயங்கி வரும் பல நிறுவனங்களை கணக்கில் கொள்ளலாம். கடந்த 40 ஆண்டுகளில் அவர் உருவாக்கிய சொத்து ரூ.10 ஆயிரம் கோடி அளவுக்கு இருக்கிறது. 1970ம் ஆண்டு வாக்கில் சபர்மதி நதிக்கரையோரம் ஒரு சிறிய குடிலில் தொடங்கிய அசாராம் பாபுவின் ஆசிரமம், இந்தியா மட்டும் அல்லாமல் உலக நாடுகளில் தற்போது 400 ஆசிரமங்களோடு கிளைகொண்டுள்ளது.
77 வயதாகும் ஆசாராம் பாபு 2013ம் ஆண்டு கைது செய்யப்பட்ட போது, மொடேராவில் உள்ள ஆசாராம் ஆசிரமத்தில் இருந்து கைப்பற்றப்பட்ட ஆவணங்களின் அடிப்படையில் ஏராளமான நிலங்கள் உட்பட தற்போதைய சந்தை மதிப்பில் ரூ.10 ஆயிரம் கோடிக்கு சொத்துக்கள் இருப்பது தெள்ளத்தெளிவாக தெரிய வந்தது.
இப்போதும் அவரை தொடரும் ஏராளமான பக்தர்கள் அல்லது தொண்டர்கள் இருக்கிறார்கள். சிறுமி பாலியல் பலாத்காரப் புகார் எழுந்த கையோடு, அவர் மீது நிலத்தை அபகரித்தது உள்ளிட்ட பல குற்றச்சாட்டுகள் கூறப்பட்டன.
ஆசாராம் பாபுவின் இணையதளத்தில் அவரைப் பற்றிய ஒரு குறும்படம் இடம்பெற்றுள்ளது. அதன்படி, 1941ம் ஆண்டு பாகிஸ்தானின் சிந்து சமவெளிப் பகுதியில் பெரானி என்ற கிராமத்தில் அசுமால் சிறுமலானியாகப் பிறந்தவர்தான் தற்போதைய ஆசாராம் பாபு.
1947ம் ஆண்டு இந்தியா - பாகிஸ்தான் பிரிவினையின் போது தனது பெற்றோருடன் அகமதாபாத் வந்த அசுமால், தந்தையின் மரணத்தால் 10 வயதில் பள்ளிப் படிப்பை தொடர முடியாமல், கடினமான வேலைகளை செய்து வந்துள்ளார். அவருக்கு ஏற்பட்ட ஆன்மிகத் தேடலைத் தொடர்ந்து இமாலயம் சென்ற அசுமால், அங்கு லிலாஷாஹ் பாபு என்ற குருவை சந்தித்து அதன் மூலம் ஆன்மிக ஞானம் பெற்றதாகக் கூறப்படுகிறது.
அந்த குருதான், ஆசாராம் பாபு என்று பெயரிட்டு, ஆன்மிகப் பயணத்தை தொடர்ந்து, மக்களுக்கு வழிகாட்டுமாறு கூறியதாகவும் குறும்படம் கூறுகிறது.
1972ல் சபர்மதி நதிக்கரையோரம் தொடங்கப்பட்ட சிறு குடில்தான் இன்று 400 ஆசிரமங்களாக இந்தியா மற்றும் உலக நாடுகளில் கிளை பரப்பியுள்ளது.
தவறான குற்றச்சாட்டின் கீழ்தான் தங்களது குரு சிறையில் அடைக்கப்பட்டிருப்பதாக இன்னமும் பக்தர்கள் நம்பிக் கொண்டிருக்கிறார்கள். இன்றைய தினம் தீர்ப்பைக் கேட்டு கதறி அழுத பக்தர்களின் புகைப்படங்களும் ஊடகங்களில் வெளியாகியுள்ளன.
ஆசாராம் பாபுவுக்கு லஷ்மி தேவி என்ற மனைவியும், இரண்டு பிள்ளைகள் உள்ளனர். மகன் நாராயண் சாய் தற்போது சிறையில் உள்ளார். மகள் பார்தி தேவி.
ஏற்கனவே 2008ம் ஆண்டுஆசாராம் பாபுவின் ஆசிரமத்தில் தங்கியிருந்த சகோதரர்கள் மர்மமான முறையில் இறந்து கிடந்த போதே அவருக்கு எதிராக புகார்கள் எழுந்து சிக்கல் ஏற்பட்டது.
இதையடுத்து, ஆசாராம் பாபுவின் ஆசிரமத்தில் தங்கியிருந்த 7 பக்தர்கள் மர்ம மரணம் அடைந்ததாக சிஐடி வழக்குப் பதிவு செய்தது. அப்போதெல்லாம் அவருக்கு எதிராக பெரிய அளவில் நடவடிக்கைகள் எடுக்கப்படா விட்டாலும், 2013ம் ஆண்டு ராஜஸ்தானைச் சேர்ந்த சிறுமி பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளான போதுதான் அவரது வீழ்ச்சி ஆரம்பமானது.
அப்போதுதான், சூரத்தைச் சேர்ந்த இரண்டு சகோதரிகள், தாங்கள் ஆசாராம் ஆசிரமத்தில் எப்படியெல்லாம் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளானோம், இதில் ஆசாராமின் மகன் நாராயண் சாய் எந்த அளவுக்கு உடந்தையாக இருந்தார் என்பது குறித்து பரபரப்புப் புகாரை அளித்தனர்.
இந்த வழக்கு காந்திநகர் நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. 
இந்த நிலையில், சிறுமிக்கு பாலியல் துன்புறுத்தல் கொடுத்த வழக்கில் இன்று ஜோத்பூர் நீதிமன்றம் தீர்ப்பை வழங்கியுள்ளது. அவரை சாகும்வரை சிறையில் அடைக்கும் வகையில் ஆயுள் தண்டனை வழங்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே இந்த தீர்ப்பை எதிர்த்து அவரது தரப்பில் மேல்முறையீடு செய்யப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக