சனி, 14 ஏப்ரல், 2018

தென் மாநிலங்களை வஞ்சிக்கும் 15ஆவது நிதிக்குழு... கிளர்ச்சிகள் தொடரும் ,, கேரளா நிதியமைச்சர் தாமஸ் ஐசக்

மத்திய அமைச்சருக்கு மறுப்பு!மின்னம்பலம்: தென் மாநிலங்களை வஞ்சிக்கும் 15ஆவது நிதிக்குழுவின் பரிந்துரைகளுக்கு எதிரான கிளர்ச்சிகள் தொடரும் என்று கேரள நிதியமைச்சர் தாமஸ் ஐசக் கூறியுள்ளார்.
மத்திய நிதித் தொகுப்பிலிருந்து மாநிலங்களுக்குப் பகிர்ந்தளிக்கப்படும் நிதியில் தென் மாநிலங்களுக்கான வரி வருவாயில் பெரும் இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும், 15ஆவது நிதிக்குழு தென் மாநிலங்களை வஞ்சிப்பதாகவும் தென் மாநிலங்கள் ஒன்றிய அரசுக்கு எதிரான தொடர் எதிர்ப்புணர்வைக் கடந்த மூன்று மாதங்களுக்கு மேலாகக் காட்டிவருகிறது. 15ஆவது நிதிக் குழு தென் மாநிலங்களுக்கும் உரிய நிதிப் பகிர்வு வழங்குவதற்கான பரிந்துரைகளை வழங்க வேண்டும் என, ஏப்ரல் 10ஆம் தேதியன்று தென் மாநில நிதியமைச்சர்கள் கூட்டத்தை கேரளா நடத்தியது. இந்தக் கூட்டத்திற்குப் பிறகு 15ஆவது நிதிக் குழுவின் பரிந்துரைகள் குறித்த விவாதங்கள் மீண்டும் அதிகரித்துள்ளன.
15ஆவது நிதிக் குழு எந்த மாநிலத்தையும் வஞ்சிக்கவில்லை என்று நிதியமைச்சர் அருண் ஜேட்லியும், மக்கள் தொகையைக் கட்டுப்படுத்தியுள்ள தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களுக்குக் கூடுதல் நிதி வழங்கத் திட்டம் வகுக்குமாறு நிதிக்குழுவுக்கு அறிவுறுத்தியுள்ளோம் என்று பிரதமர் மோடியும் விளக்கமளித்தனர்.
இந்நிலையில் இந்த விவகாரம் குறித்து கேரள நிதியமைச்சர் தாமஸ் ஐசக், பிசினஸ் லைன் ஊடகத்துக்கு அளித்துள்ள பேட்டி ஒன்றில், "15ஆவது நிதிக்குழு 2011 மக்கள் தொகை அடிப்படையில் வரி வருவாயைப் பகிர்ந்தளித்தால் எங்களுக்கு 2 முதல் 3 விழுக்காடு மட்டுமே வருவாய் கிடைக்கும். இதனால் தென் மாநிலங்கள் மிகப்பெரிய வருவாய் இழப்பைச் சந்திக்கும். எல்லா மாநிலங்களுக்கும் நியாயமான முறையில் நிதியைப் பகிர்ந்தளிக்க வேண்டும். ஆனால் தற்போதைய பரிந்துரைகள் மாநிலங்களுக்கும், கூட்டாட்சித் தத்துவத்திற்கும் எதிரானதாக உள்ளன.
தென் மாநிலங்கள் இணைந்து இதை ஒரு தேசிய விவாதமாக்க எண்ணுகிறோம். கேரளா, கர்நாடகா, ஆந்திரா மற்றும் புதுச்சேரி இணைந்து ஏப்ரல் 10ஆம் தேதி திருவனந்தபுரத்தில் ஒரு விவாதத்தை நடத்தியுள்ளோம். தொடர்ந்து விசாகப்பட்டினத்திலும், டெல்லியிலும் அடுத்த கூட்டங்களை நடத்தவுள்ளோம். இந்தக் கூட்டத்தில் ஒன்றிய அரசும், நிதிக்குழுவும் பங்கேற்றாலும் வரவேற்போம்" என்று கூறியுள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக