சனி, 31 மார்ச், 2018

நீதிபதி செல்லமேஸ்வர் கடிதம் : நீதித்துறையை மிரட்டும் மோடி அரசு !

உச்சநீதிமன்ற மூத்த நீதிபதி செல்லமேஸ்வரர் எழுதிய இக்கடிதம், இந்தியாவை ஆளும் மோடி அரசின் யோக்கியதையை அம்பலப்படுத்துகிறது.
வினவு :“இந்த நாட்டின் வரலாற்றிலும் உச்ச நீதிமன்றத்தின் வரலாற்றிலும் இது ஒரு அசாதாரணமான நிகழ்வு. இப்படி ஒரு பத்திரிகையாளர் சந்திப்பை நடத்துவதில் எங்களுக்கு சிறிதும் மகிழ்ச்சியில்லை என்றபோதிலும் இதைத்தவிர இனி எங்களுக்கு வேறு வழியில்லை.”
“சமீப காலமாகவே உச்ச நீதிமன்றத்தின் நிர்வாகம் சரியாக இல்லை. கடந்த சில மாதங்களாக விரும்பத்தகாத நிகழ்வுகள் நடந்து கொண்டிருக்கின்றன. இந்த நாட்டின் மூத்த நீதிபதிகள் என்ற முறையில் தலைமை நீதிபதியை சந்தித்து சில விசயங்கள் சரியாக இல்லை என்று நாங்கள் நால்வரும் சுட்டிக்காட்டினோம். ஆனால் பயனில்லை.” – இது உச்சநீதிமன்ற நீதிபதி செல்லமேஸ்வர் சென்ற ஜனவரியில் கூறியவை.
இந்திய உச்சநீதிமன்ற வரலாற்றிலேயே முதன்முறையாக தலைமை நீதிபதியை எதிர்த்து நான்கு நீதிபதிகள் நடத்திய பத்திரிகையாளர் சந்திப்புதான் இந்திய நீதித்துறை வரலாற்றில் மிகப்பெரிய நெருக்கடி என்று நீதித்துறை வல்லுனர்கள் கூறினர்.
அதை சுருக்கமாக சுப்ரீம் கோர்ட்டு நெருக்கடி முற்றுகிறது ! பாசிச அபாயம் நெருங்குகிறது ! என்ற கட்டுரையில் படிக்கலாம்.
இப்படி நான்கு நீதிபதிகள் பொங்குவதற்கு என்ன காரணம்? தலைமை நீதிபதியின் மீதான குற்றச்சாட்டு என்ன? அவர் செய்த ஊழல் எப்படி உச்சநீதிமன்றத்தால் மறைக்கப்பட்டது? அதற்கு நீதித்துறை நாட்டாமை : எதிர்த்து நில் ! என்ற கட்டுரையை படியுங்கள்.
சோரப்தீன் கொலை வழக்கிலிருந்து அமித் ஷாவை விடுவிப்பதற்கு லஞ்சம் வாங்க மறுத்து நீதிபதி லோயோ மர்மமான முறையில் இறந்து போனது பற்றி மும்பை உயர்நீதிமன்றத்தில் வழக்கு விசாரணையில் இருக்கும்போதே, அதில் உச்ச நீதிமன்றம் தலையிடுகிறது. மும்பை வழக்கறிஞர்களின் எதிர்ப்பை மீறி இது நடக்கிறது.
பாபர் மசூதி வழக்கு மோடியின் அரசியல் நோக்கத்துக்கு பயன்படும் விதத்தில் தீபக் மிஸ்ராவால் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படுகிறது. போலி மருத்துவக் கல்லூரிகளுக்கு அனுமதி வழங்கியது தொடர்பான வழக்கில் லஞ்சக் குற்றச்சாட்டுக்கு இலக்கான தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, அந்த வழக்கை மூத்த நீதிபதிகள் அமர்விலிருந்து மாற்றி, தனக்கு தோதான நீதிபதிகளை விசாரிக்க சொல்கிறார். இது தொடர்பாக வழக்கு தொடுத்து பிரசாந்த் பூஷணுக்கு 25 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கிறது உச்ச நீதிமன்றம்.
இப்படி மோடி அரசும், நீதித்துறையும் சேர்ந்து இந்தியாவில் பாசிச ஆட்சியை கொண்டு வரலாம் என்பதற்கு அடுத்த கட்ட சான்று ஒன்று வந்திருக்கிறது. இதை தெளிவாக விளக்கி உச்சநீதிமன்ற நீதிபதி செல்லமேஸ்வர் எழுதிய கடிதம் ஊடகங்களில் வெளியாகியிருக்கிறது. அவர் எழுதிய கடிதம் என்னமோ தலைமை நீதிபதிக்குத்தான், ஆனால் அந்த அபாயத்தை சந்திக்கப் போவது நாட்டு மக்கள்தான்.
நீதித்துறையில் மோடி அரசு தலையிடுவதை தடுத்து நடவடிக்கை எடுக்குமாறு நீதிபதி செல்லமேஸ்வர் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ராவுக்கு எழுதிய மார்ச் 21 தேதியிட்ட அந்தக் கடிதம் மற்ற 22 நீதிபதிகளுக்கும் நகல்களாக அனுப்பி வைக்கப்பட்டிருக்கிறது.
அதில் செல்லமேஸ்வர் கூறியிருப்பதன் சுருக்கம் (மூலக்கட்டுரை நன்றி தினமணி):
கர்நாடக மாவட்ட அமர்வு நீதிபதியாக இருக்கும் கிருஷ்ணா பட்டுக்கு பதவி உயர்வு அளிக்கலாம் என்று நீதிபதிகளின் தேர்வுக்குழுவான கொலீஜியம் 2 முறை பரிந்துரைத்தும் அது நடக்கவில்லை. காரணம் அவருக்கு எதிராக விசாரணை நடத்துமாறு மத்திய சட்ட மற்றும் நீதித்துறையின் தூண்டுதல் பேரில் கர்நாடக உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி தினேஷ் மகேஸ்வரி உத்தரவிட்டுள்ளார்.
இப்படி உச்சநீதிமன்றத்தின் அதிகாரத்தை அரசு நிர்வாகம் மீறியதைப் போன்ற ஒரு சம்பவம் கடந்த காலங்களில் நினைவுக்குத் தெரிந்த அளவில் இல்லை. கிருஷ்ணா பட் மீதான குற்றச்சாட்டுகள் தவறு, அவருக்கு பதவி உயர்வு அளிக்கவேண்டும் என்று நாங்கள் கூறியது நிலுவையில் இருக்கும் போது அவர் மீதான குற்றச்சாட்டுக்களை விசாரிக்குமாறு அரசு நிர்வாகம் அணுகுவது முறையற்றது.
விரைவிலேயே அரசு நிர்வாகம், உயர்நீதிமன்றங்களை நேரடியாக தொடர்பு கொண்டு நிலுவையில் உள்ள வழக்குகள் குறித்தும், அவற்றில் என்னென்ன உத்தரவுகள் பிறப்பிக்கப்படுமென்று கேட்கும் நாள் வரும். இது ஜனநாயகத்திற்கு சாவுமணி அடிப்பதாகும். நீதித்துறை, அரசு இரண்டும் பரஸ்பரம் கண்காணிக்கும் அமைப்புகளே அன்றி ஒன்றையொன்று விரும்பும் அமைப்புக்கள் அல்ல.
சில காலமாகவே நீதிபதிகளை நியமிப்பதற்கு கொலீஜியம் பரிந்துரைத்த பிறகும் அரசு அவற்றை ஏற்காமல் இருந்து வருகிறது. இதனால் திறமை வாய்ந்த நீதிபதிகள் வாய்ப்புகளை இழக்கின்றனர். இந்தச் சூழலில் நீதித்துறையில் அரசு தரப்பு தலையிடும் விவகாரம் தொடர்பாக உச்சநீதிமன்றத்தின் அனைத்து நீதிபதிகளையும் கூட்டி விவாதிக்க வேண்டும். அரசியல்சாசனப்படி உச்சநீதிமன்றம் இயங்குவதை உறுதி செய்ய இது அவசியம்.
ப்படியாக தனது கருத்தை செல்லமேஸ்வர் துணிந்து முன்வைக்கிறார். ஆனால் தீபக் மிஸ்ரா – மோடி அரசின் கூட்டணியில் உச்சநீதிமன்றம் அரசியல் சாசனப்படி இயங்காது என்பதோடு, இத்தகைய அதிருப்தி குரல்களை எப்படி அமுக்கலாம் என்பதிலேயே குறியாக இருப்பார்கள்.
நெருங்குகிறது பாசிச அபாயம். மக்களிடம் இதை எடுத்துச் சொல்லி வீழ்த்தாவிட்டால் ஒரு கொடுங்கோன்மை ஆட்சிக்கு நாம் தயாராக வேண்டும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக