திங்கள், 26 மார்ச், 2018

சென்னை வங்கியில் வடநாட்டு ஊழியர் கொள்ளை 'ஹாலிவுட்' பாணியில் லாக்கர் அறையை உடைத்து பெரும் தொகை நகை பணம் ,,

tamilthehindu: விருகம்பாக்கம் ஐஓபி வங்கியில் 'ஹாலிவுட்' பட பாணியில் லாக்கர் அறையை உடைத்து 3 லாக்கர்களில் பல நூறு சவரன் நகை, பணத்தைத் திருடிச்சென்ற வங்கி ஊழியரை போலீஸ் தேடுகிறது .
 விருகம்பாக்கம்  ஆற்காடு சாலையில் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி உள்ளது. இங்கு சனிக்கிழமை அரை நாளுடன் வங்கியை மூடிவிட்டுச் சென்றனர். பின்னர் ஞாயிறும் விடுமுறை என்பதால் மீண்டும் திங்கட்கிழமை காலை வழக்கம் போல் வங்கி மேலாளர் உள்ளிட்ட ஊழியர்கள் வங்கியைத் திறந்தனர்.
அப்போது வங்கிக்குள்ளே இருந்து கருகிய வாடையும் பொருட்கள் சிதறிக் கிடப்பதையும் பார்த்து அதிர்ச்சியடைந்து என்னவென்று பார்த்தனர். வங்கிக்குள் கேஸ் சிலிண்டர் மற்றும் கேஸ்கட்டர் (இரும்புப் பொருட்களை கடுமையான வெப்பம் மூலம் கட் பண்ணும் ஒரு கருவி) கிடந்துள்ளது. இதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த அவர்கள் மேலும் முதல் மாடியில் உள்ள லாக்கருக்கு சென்று பார்த்தபோது அதிர்ச்சி அடைந்தனர்.
எப்படி நடந்தது திருட்டு?
முதல் மாடியில் உள்ள லாக்கர் அறை கேஸ் கட்டர் மூலம் கட் செய்யப்பட்டு உள்ளே இருந்த லாக்கர்கள் உடைக்கப்பட்டு இருந்ததைப் பார்க்க முடிந்தது. இதைப் பார்த்த அதிகாரிகள் மேலதிகாரிகளுக்கும், போலீஸாருக்கும் தகவல் கொடுத்தனர். உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்த போலீஸார் விசாரணை நடத்தினர்.

விசாரணையில் வங்கியிலிருந்த துப்புரவு ஊழியர் சபில் லால் சந்த் என்பவர் காணாமல் போனது தெரிய வந்தது. சபீல் லால் சந்த் வடமாநிலத்தைச் சேர்ந்தவர் என்பதும் அவர் துப்புரவு ஊழியராக வங்கியிலேயே பணியாற்றியதும், வங்கியின் கீழ் தளத்தில் அவருக்காக தனி அறை ஒன்று ஒதுக்கப்பட்டிருப்பதும் தெரிய வந்தது.
சமையலுக்குப் பயன்படுத்தும் கேஸ் சிலிண்டர்கள், கேஸ் கட்டிங் கருவி, ஆக்ஸிஜன் சிலிண்டர் ஒன்றையும் எடுத்துச்சென்றுள்ளார். உள்ளே நுழைந்தவுடன் வங்கி லாக்கர் அறைக்குள் நுழைந்து அங்குள்ள லாக்கர் கதவை நிதானமாக கேஸ் கட்டிங் மெஷின் மூலம் துண்டித்து, உள்ளே நுழைந்து உள்ளே இருந்த லாக்கர் அறைகளில் எண். 259, 654 மற்றும் இன்னொரு லாக்கர் அறையை உடைத்துள்ளார்.
இதில் இரண்டு லாக்கர் பெட்டிகள் எளிதாக உடைபட அதிலிருந்த பல லட்சக்கணக்கான ரொக்கப்பணம், 130 சிறு பைகளில் வைக்கப்பட்டிருந்த நகைகள் போன்றவற்றை எடுத்துள்ளார். மூன்றாவது லாக்கர் பெட்டி கேஸ் கட்டிங் மூலம் துண்டிக்கும் போது அது எளிதில் திறக்கவில்லை. ஆனாலும் அதனுள்ளே இருந்த வெள்ளிப் பொருட்கள் தீயின் வெப்பத்தில் உருகி போயுள்ளன.
அதன் பின்னர் கிடைத்தவரை லாபம் என்று நகை பணத்துடன் மாயமாகி உள்ளார். லால்சந்த் வங்கியில் துப்புரவுப் பணியாளராக பல ஆண்டுகள் இருந்ததால் வங்கியின் ஒவ்வொரு இடமும் அத்துப்படி. ஒரு இடத்திலிருந்து இன்னொரு இடத்திற்கு எப்படி போவது என்பதையும் தெரிந்து வைத்திருந்த சபீல் லால்சந்த் லாக்கர் அறைஅயை உடைத்து பணம், நகைகளை திருட திட்டமிட்டுள்ளார்.
ஹாலிவுட் படப் பாணியில் திட்டம்
இதற்காக சனி, ஞாயிறு விடுமுறை தினத்தை தேர்வு செய்துள்ளார். பின்னர் சாவகாசமாக கேஸ் சிலிண்டர்கள், கேஸ் கட்டிங் கருவி, ஆக்சிஜன் சிலிண்டர் முதலானவற்றை வாங்கி வந்துள்ளார். கொள்ளையடிப்பதற்கு முன்னர் கண்காணிப்பு கேமராவை அணைத்துள்ளார். அதன் அத்தனை இணைப்புகளையும் துண்டித்துள்ளார். அதன் டிவிஆரையும் சேர்த்து தூக்கிச்சென்றுள்ளார்.
லாக்கர் அறையை துண்டிக்க தரை தளத்திலிருந்து இரண்டு சிலிண்டர்கள் கேஸ்கட்டர் போன்றவற்றை ஒரு நபரால் தூக்கி செல்ல முடியாது. இதை தனது கூட்டாளி ஒருவர் அல்லது இருவருடன் சேர்ந்து செய்திருக்கலாம் என போலீஸார் கருதுகின்றனர்.
ஆகவே சபீல் லால்சந்த் பற்றிய விபரங்களை சேகரிப்பதன் மூலமே இதற்கு விடை கிடைக்கும். மேலும் துப்புரவுத் ட்தொழிலாளியான சபீல் லால்சந்துக்கு இந்த அளவுக்கு ஞானம் கிடையாது, கேஸ்கட்டர் மெஷினை சாதாரண ஆள் இயக்க முடியாது, அதில் பயிற்சி பெற்றவர் மட்டுமே இயக்க முடியும். ஆகவே இது போன்ற விஷயங்களில் பயிற்சி பெற்ற ஒருவர் அல்லது இருவருடன் சேர்ந்து சபீல் லால்சந்தை இணைத்து கொள்ளையை முடித்துள்ளதாக போலீஸார் கருதுகின்றனர்.
கொள்ளை போனது  நகை, பணம் என ரூ.32 லட்ச ரூபாய் ரொக்கம் இருக்கலாம் எனவும், நகைகள் எவ்வளவு என்பது லாக்கருக்கு சொந்தமானவர்கள் வந்து பார்த்து கூறினால் தெரியவரும் என்பதால் நூறு சவரனுக்கு குறையாமல் திருடு போயிருக்கலாம் என போலீஸார் கருதுகின்றனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக