சனி, 24 மார்ச், 2018

பாஜகவின் ஆபரேஷன் திராவிடம் ... நடிகர்கள் தான் ஏவல் பேய்கள் ?

tamiloneindia - Gajalakshmi" 2019 பொதுத்தேர்தல்கள் மற்றும் சட்டசபை தேர்தல்களில் தென் இந்தியாவை குறி வைத்து பாஜக ஆபரேஷன் திராவிடத்தை திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
சென்னை:அப்படியானால் தமிழகத்தில் பாஜக நடத்த திட்டமிட்டுள்ள ஆபரேஷன் ராவணாவின் கதாநாயகன் நடிகர் ரஜினிதானோ என்ற சந்தேகங்களை இது எழுப்புகிறது.
வடமாநிலங்களில் காவிக் கொடி பட்டொளி வீசிப் பறந்தாலும், தென் இந்தியாவைப் பொருத்தமட்டில் அவர்களுக்கான வாய்ப்பு குறைவாகவே தான் இருக்கிறது. அதிலும் தமிழகத்தை எடுத்துக் கொண்டால் பாஜகவின் வாக்கு வங்கி அதலபாதாளம்.
இதற்கு சான்றாக அண்மையில் நடந்து முடிந்த ஆர்கே நகர் இடைத்தேர்தலை சொல்லலாம். பிளவுபட்ட அதிமுக இடையே ஒரு பக்கம் போட்டியென்றால் மற்றொரு பக்கம் திராவிடக் கட்சிகளுக்கு அடுத்த இடத்தை யார் பிடிப்பது என்பது தான்.
தினகரன், அதிமுக, திமுகவிற்கு அடுத்தபடியாக தமிழகத்தில் தாமரை மலர்ந்தே தீரும் என்று நெஞ்சை நிமிர்த்தி சொல்லி வந்த பாஜக பிடிக்கும் என்று பார்த்தால் நாம் தமிழர் கட்சி, நோட்டா இரண்டும் பாஜகவை 5வது இடத்திற்கு தள்ளியது

பாஜக வெற்றி பெறும் இடங்களில் நடக்கும் தேர்தல்களை குறைசொல்லாத அந்த கட்சி, தமிழகத்தில் நியாயமாக தேர்தல் நடக்கவில்லை என்று சொல்லியது. சரி இதெல்லாம் இருக்கட்டும் மக்கள் மனதில் எப்படியாவது இடத்தை பிடித்துவிடலாம் என்றால் பாஜக பற்றி தமிழக மக்களிடத்தில் கொண்டு சென்று பிரச்சாரம் செய்ய சரியான காரணம் சிக்கவில்லை.
தமிழகத்திற்கு வஞ்சனை பிரதமர் நரேந்திர மோடி ஆட்சி என்று சொன்னதுமே பணமதிப்பிழப்பால் மக்கள் பட்ட துயரங்கள், ஜிஎஸ்டியால் சிறு தொழிலாளர்கள் நசுங்கியது தான் கண்முன்னே நிழலாடுகின்றன.
தமிழக மக்களின் எதிர்ப்புகளையும் மீறி காவிரிப் படுகைகளில் விடாப்படியாக மீத்தேன், ஹைட்ரோகார்பன் திட்டங்களை நிறைவேற்றுவது, கட்டாய நீட் தேர்வு, கடைசியாக தற்போது உச்சநீதிமன்றம் கூறியும் அமைக்கப்படாமல் இருக்கும் காவிரி மேலாண்மை வாரியம் வரை என பாஜக அரசால் தமிழக மக்கள் சந்தித்த இடர்பாடுகள் தான் அதிக அளவில் இருக்கின்றன.
நிவாரணங்கள் மறுப்பு உதான் திட்டம், பசுமை வழிச்சாலைகள் என பாஜக தமிழகத்திற்கு எண்ணிலடங்கா அடிப்படை கட்டமைப்பு திட்டங்களை செயல்படுத்தியுள்ளதாக அந்தக் கட்சியின் தமிழகத் தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கூறுகிறார்.
நிவாரணங்கள் மறுப்பு
ஆனால் இதே மத்திய அரசு தான் விவசாயகளுக்காக தமிழக அரசு கேட்ட நிவாரணம், ஓகி பாதித்த கன்னியாகுமரியை தேசிய பேரிடர் மாவட்டமாக அறிவிக்க வேண்டும் என்ற கோரிக்கைகளையும் புறக்கணித்தது.
மற்றவர் முதுகில் சவாரி ஆக மொத்தத்தில் பாஜக போடும் வளர்ச்சித் திட்டங்களுக்கு இணையாக தமிழக மக்களுக்கு கடந்த 4 ஆண்டுகால மத்திய பாஜக ஆட்சியால் தமிழகம் புறக்கணிக்கப்பட்டதற்கான பட்டியலையும் தயாராகவே வைத்துள்ளனர்.
இதனால் நேரடி அரசியல் களத்தில் இறங்க முடியாத பாஜக அதிமுக, ரஜினி உள்ளிட்டோர் மீது ஏறி சவாரி செய்ய நினைக்கிறது. திடீர் அரசியலில் ரஜினி யார் முதுகிலும் சவாரி செய்ய வேண்டிய அவசியம் இல்லை என்று பாஜக திரும்பத் திரும்ப சொன்னாலும், தமிழகத்தில் அரங்கேறும் அரசியல் கூத்துகள் இதை உண்மை உண்மை என்றே சொல்கின்றன.
இல்லையென்றால் 30 வருடத்திற்கு முன்பே அரசியலுக்கு வரவேண்டிய ரஜினி திடுதிப்பென தற்போது அரசியலில் குதிக்க என்ன காரணம். ரஜினி தான் பாஜகவின் கதாநாயகனா? அதிலும் அவர் இப்போது அரசியலுக்கு வரமாட்டாராம் தேர்தலின் போது தான் வருவாராம்,
அதுவரை அவர் என்ன செய்யப்போகிறார் என்ற பரபரப்பிலேயே மக்கள் இருக்க வேண்டுமாம். தேர்தலை மட்டுமே குறிவைத்து அரசியலுக்கு வரும் அரசியல்வாதி மக்களுக்காக எப்படி நல்லது செய்வார் என்ற கேள்வி ஒருபுறம் இருந்தாலும் தனது பாதை ஆன்மிக அரசியல் என்று இந்துத்துவாவை அடிப்படையாக வைத்தே ரஜினியின் அரசியல் நகர்வுகளும் இருக்கின்றன.
ஆக பாஜக போடும் ஆபரேஷன் திராவிடத்தில் தமிழகத்திற்கான ஆபரேஷன் ராவணன் கதாநாயகன் ரஜினி தானோ என்று தான் நினைக்கத் தோன்றுகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக