செவ்வாய், 13 மார்ச், 2018

பாஜகவுக்கு எதிரான கட்சிகளை ஒன்றிணைக்கும் சோனியா ..... டெல்லி இப்தார் விருந்து

மின்னம்பலம் :காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் சோனியா காந்தி, இன்று (மார்ச் 13) மாலை டெல்லியிலுள்ள தனது இல்லத்தில் எதிர்கட்சிகளுக்கு விருந்து அளிக்கிறார். இது, பாஜகவுக்கு எதிரான கட்சிகளை ஒன்றிணைக்கும் முயற்சிக்கான முன்னோட்டமாகக் கருதப்படுகிறது.
கடந்த பிப்ரவரி மாதம் திரிபுரா, மேகாலயா, நாகாலாந்து மாநிலங்களில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற்றது. இம்மாநிலங்களில் காங்கிரஸ் கட்சிக்குப் பெரும் பின்னடைவு ஏற்பட்டது. குறிப்பாக, மேகாலயாவில் அதிக தொகுதிகளைக் கைப்பற்றியபோதும் காங்கிரஸ் கட்சியினால் ஆட்சியைத் தக்கவைக்க முடியவில்லை.
மேலும், திரிபுரா மாநிலத்தில் திரிணமூல் காங்கிரஸ் கட்சியோடு கூட்டணி வைக்க காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல் மறுத்ததாலேயே, அங்கு காங்கிரஸ் கட்சியின் வெற்றி வாய்ப்பு மங்கியதாகக் கூறியிருந்தார் மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி.

இந்த நிலையில், மார்ச் 13ஆம் தேதியன்று நாடெங்கிலும் உள்ள 17 கட்சிகளின் தலைவர்களுக்கு தனது இல்லத்தில் விருந்தளிக்கப் போவதாக அறிவித்தார் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் சோனியா காந்தி. இந்த அறிவிப்பு, 2019 நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்னதாக பாஜகவுக்கு எதிரான அனைத்து கட்சிகளையும் ஒன்றிணைக்கும் முடிவாகவே அரசியல் விமர்சகர்களால் பார்க்கப்பட்டது.
10, ஜன்பத் சாலை, டெல்லியில் உள்ள சோனியாவின் இல்லத்தில் இன்று மாலை இந்த விருந்து நிகழ்ச்சி நடைபெறுகிறது. கனிமொழி (திமுக), சீதாராம் யெச்சூரி (மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி), டி.ராஜா (இந்திய கம்யூனிஸ்ட்), சுதீப் பந்தோபாத்யாய (திரிணமூல் காங்கிரஸ்), ராம்கோபால் யாதவ் (சமாஜ்வாதி கட்சி), தேஜஸ்வி யாதவ் (ராஷ்ட்ரீய ஜனதா தளம்), பாபுலால் மராண்டி (ஜார்க்கண்ட் விகாஸ் மோர்ச்சா), ஹேமந்த் சோரன் (ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா), ஜிதன்ராம் மாஞ்சி (ஹிந்துஸ்தானி அவாம் மோர்ச்சா) ஆகியோர் இதில் பங்கேற்கின்றனர். இவர்களோடு மதச்சார்பற்ற ஜனதா தளம், கேரளா காங்கிரஸ், இந்திய யூனியன் முஸ்லிம் லீக், ராஷ்டிரிய லோக் தளம் உள்ளிட்ட கட்சிகளின் தலைவர்களும் இதில் கலந்துகொள்கின்றனர்.
ஆந்திரா முதலமைச்சர் சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம், ஒரிசா முதலமைச்சர் நவீன் பட்நாயக்கின் பிஜு ஜனதாதளம் மற்றும் தெலங்கானா முதலமைச்சர் சந்திரசேகர ராவின் தெலங்கானா ராஷ்டிரிய சமிதி ஆகிய கட்சிகள், இந்த விருந்தில் பங்கேற்காது என்று தகவல்கள் வெளியாகியுள்ளது. அக்கட்சிகளுக்கு, காங்கிரஸின் சார்பில் அழைப்பு அனுப்பப்படவில்லை என்று கூறப்படுகிறது. ஆனால், தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத் பவார் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்கிறார்.
மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சி, இந்த விருந்தில் கலந்து கொள்ளாதது உறுதியாகியுள்ளது. கர்நாடகாவில் மதச்சார்பற்ற ஜனதாதளத்துடன் இணைந்து காங்கிரஸ் கட்சிக்கு எதிராக பகுஜன் சமாஜ் கட்சி போட்டியிடவுள்ளதே இதற்குக் காரணம் என்று தகவல் வெளியாகியுள்ளது. மூன்றாவது அணியை ஒருங்கிணைக்கும் முயற்சியில் இறங்கியுள்ள சந்திரசேகர ராவுக்கு வாழ்த்து தெரிவித்திருந்தார் மம்தா பானர்ஜி. இந்த காரணத்தினைக் குறிப்பிட்டு, திரிணமூல் காங்கிரஸும் இந்த விருந்தில் பங்கேற்காது என்று சற்று நேரத்திற்கு முன்னர் தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆனால், இது அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தப்படவில்லை.
கடந்த 2004ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்னர், இதே போன்ற ஒரு நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருந்தார் சோனியா காந்தி. அதன்பின், இரண்டு மக்களவை தேர்தல்களில் அடுத்தடுத்து வெற்றி பெற்றது காங்கிரஸ் கட்சி. வரும் 2019ஆம் ஆண்டு மக்களவை தேர்தலில் பாஜகவுக்கு எதிரான கட்சிகளுக்குத் தலைமை வகிக்கும் வாய்ப்பை, இந்த விருந்து காங்கிரஸ் கட்சிக்கு அளிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக