வியாழன், 15 மார்ச், 2018

மோடிக்கு சந்திரபாபு எச்சரிக்கை: இது தமிழ்நாடு அல்ல!

இது தமிழ்நாடு அல்ல: மோடிக்கு சந்திரபாபு எச்சரிக்கை!
மின்னம்பலம் :தமிழகத்தில் செய்ததைப் போன்று
ஆந்திராவிலும் செய்ய பிரதமர் மோடி முயற்சிப்பதாக ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு குற்றம்சாட்டியுள்ளார். மேலும் பாஜக கூட்டணியில் நீடிக்கலாமா என்பது குறித்து முடிவு செய்ய தெலுங்கு தேசம் கட்சியின் அவசரக் கூட்டம் நாளை (மார்ச் 15) நடைபெறவுள்ளது.
ஆந்திராவுக்குச் சிறப்பு அந்தஸ்து வழங்குவது தொடர்பான விவகாரம் காரணமாக அம்மாநில அரசுக்கும் மத்திய அரசுக்கும் இடையிலான உறவில் விரிசல் அதிகரித்துவருகிறது. ஆந்திராவுக்குச் சிறப்பு அந்தஸ்து வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து அம்மாநில எம்பிக்கள் நாடாளுமன்றத்தில் தொடர்ந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர்.
இந்நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக ஆந்திர முதல்வரும் தெலுங்கு தேசக் கட்சியின் தலைவருமான சந்திரபாபு நாயுடு வீடியோ கான்பிரன்ஸிங் மூலம் எம்பிக்கள் மற்றும் எம்எல்ஏக்களுடன் இன்று (மார்ச் 15) உரையாடினார். அப்போது, “ஆந்திர மக்கள் நியாயமாகக் கேட்பதை கொடுப்பதற்குப் பதிலாக, எங்களுக்கு எதிராக பாஜக திசைதிருப்பிவருகிறது. தமிழ்நாட்டில் செய்ததைப் போன்று ஆந்திராவிலும் செய்ய மோடி முயற்சிக்கிறார்” என்று குற்றம்சாட்டியுள்ளார்.

முன்னதாக, ஜனசேனா கட்சியின் தலைவரும் நடிகருமான பவன் கல்யாண், ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவின் மகன் மீது கடும் ஊழல் குற்றச்சாட்டுகளைக் கூறியிருந்தார். ஆந்திர மாநிலம் பிரிக்கப்பட்ட பின், மாநிலம் முழுவதும் ஊழல் பரவிவிட்டது; தந்தையும், மகனும் கோடிக்கணக்கில் ஊழல் செய்துள்ளனர் என்று விமர்சித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
மேலும், சசிகலாவுக்கு எதிராக பன்னீர்செல்வம் தனி அணியாகச் செயல்பட்டபோது பாஜகவும் பிரதமர் மோடியும் அவருக்குத் துணையாக இருந்ததாக பல்வேறு கட்சிகளும் குற்றம்சாட்டியிருந்தன. அதனைச் சுட்டிக்காட்டியே, “தமிழகத்தில் செய்தது போன்று ஆந்திராவில் செய்ய பிரதமர் முயற்சிக்கிறார்” என சந்திரபாபு விமர்சித்துள்ளதாகக் கூறப்படுகிறது.
உத்தரப் பிரதேச இடைத்தேர்தலில் பாஜக தோல்வியடைந்துள்ளது தொடர்பாகப் பேசுகையில், “நாடு முழுவதும் மோடி மற்றும் பாஜகவுக்கு எதிரான அலை ஏற்பட்டுள்ளது. உ.பி மற்றும் பிகார் இடைத்தேர்தலில் பாஜக தோல்வியுற்றதே இதற்குச் சாட்சி” என்று கூறியிருக்கிறார்.
மேலும், பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் தொடரலாமா என்பது குறித்து இறுதி முடிவு எடுக்க நாளை தெலுங்கு தேசக் கட்சியின் கூட்டம் கூடவுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக