திங்கள், 5 மார்ச், 2018

தினகரனின் தங்கையும் கணவரும் கைது ... சி பி ஐ நீதிமன்றம் ஸ்ரீ தளதேவி .. பாஸ்கரன்...

டிடிவி தினகரனின் சகோதரி-கணவர் கைது!மின்னம்பலம் : சொத்து குவிப்பு வழக்கில் டிடிவி தினகரன் சகோதரியையும் அவரது கணவரையும் சிறையில் அடைக்க சிபிஐ நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது.
சொத்துக் குவிப்பு வழக்கில் டிடிவிதினகரன் எம்.எல்.ஏ.வின் சகோதரி, மைத்துனருக்கு சென்னை சிபிஐ கோர்ட்டு பிடிவாரண்டு பிறப்பித்துள்ளது. சசிகலாவின் அக்கா வனிதாமணியின் மகளும், தினகரனின் தங்கையுமான ஸ்ரீதளாதேவிக்கும் பாஸ்கரனுக்கும் 1990இல் திருமணம் நடந்தது.
பாஸ்கரன், 1988 முதல் ரிசர்வ் வங்கியில் பணியாற்றிவந்தார். இவர்கள் வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்திருப்பது தெரியவந்ததைத் தொடர்ந்து 1998 மார்ச் 18 மற்றும் 30ஆம் தேதிகளில் இவர்களது வீடு, அலுவலகம், வங்கி லாக்கர் உள்பட பல்வேறு இடங்களில் சிபிஐ சோதனை நடத்தியது.

தமிழ்நாடு மாநிலக் கூட்டுறவு வங்கியின் சாந்தோம் கிளையில் இருந்த இவர்களது லாக்கரைப் பரிசோதனை செய்தபோது ஏராளமான தங்கக் கட்டிகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு அவை பறிமுதல் செய்யப்பட்டன. இதுபோல அசையும், அசையாச் சொத்துகளும் பறிமுதல் செய்யப்பட்டன.
விசாரணைக்குப் பின்பு இந்த வழக்கில் சிபிஐ தரப்பில் நீதிமன்றத்தில் குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. அதில், 87 லட்சத்து 96 ஆயிரத்து 823 ரூபாய் மதிப்புள்ள அசையாச் சொத்துகளும், 2 கோடியே 28 லட்சத்து 91 ஆயிரத்து 994 ரூபாய் மதிப்புள்ள அசையும் சொத்துகளும், ஸ்ரீதளாதேவி பெயரில் 1 கோடியே 68 லட்சத்து 54 ஆயிரத்து 305 ரூபாய் மதிப்புள்ள சொத்துகளும் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டதாகக் கூறப்பட்டிருந்தது.
மேலும், பாஸ்கரன் வேலையில் சேரும்போது ரூ.2 லட்சத்து 96 ஆயிரத்து 816 மதிப்புள்ள சொத்துகள் இருந்ததாகக் கணக்கு காட்டியுள்ளார். இதன் மூலம் அவர்கள் வருமானத்துக்கு அதிகமாகச் சொத்துக் குவித்துள்ளனர் என்றும் குற்றப் பத்திரிகையில் கூறப்பட்டிருந்தது.
இந்த வழக்கைச் சென்னையில் உள்ள சிபிஐ முதன்மை செஷன்ஸ் நீதிமன்றம் விசாரித்து, பாஸ்கரனுக்கு 5 ஆண்டு சிறைத் தண்டனை, 20 லட்சம் ரூபாய் அபராதமும், ஸ்ரீதளாதேவிக்கு 3 ஆண்டு சிறைத் தண்டனை, ரூ.10 லட்சம் அபராதமும் விதித்து 2008 ஆகஸ்டு 26ஆம் தேதி தீர்ப்பு கூறியது.
இதை எதிர்த்து பாஸ்கரன், ஸ்ரீதளாதேவி ஆகியோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர். சிபிஐ கோர்ட்டு பிறப்பித்த உத்தரவைச் சென்னை உயர் நீதிமன்றம் கடந்த நவம்பர் 16ஆம் தேதி உறுதி செய்தது.
சென்னை உயர் நீதிமன்றத்தின் இந்த உத்தரவு சில நாட்களுக்கு முன்பு சென்னை சிபிஐ நீதிமன்றத்துக்கு வந்து சேர்ந்தது. இதைத் தொடர்ந்து சிபிஐ நீதிமன்றம் பாஸ்கரன், ஸ்ரீதளாதேவி ஆகியோரைக் கைதுசெய்து சிறையில் அடைக்க பிடிவாரண்டு பிறப்பித்து உத்தரவிட்டது. அதன்படி, அவர்கள் இருவரையும் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த சிபிஐ அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டுவந்தனர்
இருவரும் சென்னை உயர் நீதிமன்ற வளாகத்தில் உள்ள சிபிஐ நீதிமன்ற நீதிபதி திருநீலகண்டபிரசாத் முன்பு சரணடைந்தனர். இருவரையும் புழல் சிறையில் அடைக்க உத்தரவிட்டார் நீதிபதி.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக