வியாழன், 8 மார்ச், 2018

அம்பேத்கர், பெரியார், லெனின் சிலைகள் ... இருட்டில் நடக்க பயப்படும் குழந்தையின் கைகளை பிடித்து செல்லும் தந்தை போல......

Shalin Maria Lawrence : சிலை அரசியல்.
“சிலையில் பெரியார் இல்லை, பெரியார் வழி நடந்தால் போதும், பெரியார் நெஞ்சில் இருக்கிறார், ஆயிரம் சிலைகளை உடைத்தாலும், பெரியாரியம் சாகாது”, என்பதெல்லாம் தத்துவார்த்த பேச்சுக்கள். இங்கே நாம் தத்துவ ஞானிகள் இல்லை, மாறாக ஒரு குடியரசில் வாழும் சராசரி மனிதர்கள். நமக்கு இங்கே தத்துவங்களை விட அரசியலும், அது சார்ந்த போராட்டங்களும்தான் சமூகநீதி மறுக்கப்பட்ட இந்த இருண்ட உலகில் நம்மை வழிநடத்தும் இரு விளக்குகள் ஆகும்.
தத்துவம் நம்மை மீட்காது. தத்துவமானது இருட்டில் நடக்க பயப்படும் குழந்தைக்கு தைரியமூட்ட ஒப்புக்கு சமாதனம் சொல்லுவது போன்றது. அரசியலும் போராட்டமும் இருட்டில் விளக்கு கொண்டு வந்து அந்த குழந்தையை நடக்க வைப்பது போல. It's sheer practicality.
அப்படி நம்மை நடமாட வைத்துக் கொண்டிருக்கும் அரசியலும் போராட்டங்களும் தான் நமக்கு முக்கியம். அந்த அரசியலில் சிலைகளும் முக்கியம். உலகம் முழுவதும் சிலைகளெல்லாம் வெறும் சிலைகள் அல்ல. சிலை என்பது ஒரு அரசியல். சிலை என்பது அதிகாரத்தின் அடையாளம். சிலை என்பது வரலாறு. சிலை என்பது உண்மை.
ஒரு சிலையை நிறுவும்போது அதனோடு சேர்ந்து ஒரு அரசியல் கொள்கையை நிறுவுகிறார்கள். ஒரு சிலையை நிறுவும்போது அதை சுற்றியுள்ள நூறடி நிலம் அந்த அரசியலுக்கும் கொள்கைக்கும் எழுதி வைக்காமலே சொந்தமாகிறது.
ஒரு சிலையின் பக்கத்தில் அதன் கொள்கையை வழிமொழியும் ஒருவன் எந்த ஆயுதமும் இன்றி பயமில்லாமல் நிற்கின்றான். அந்த சிலை அவனுக்கு கேடயமாக இருக்கிறது.

ஒவ்வொரு சிலையும் ஒவ்வொரு மாதிரி அடையாளப்படுத்தபடுகிறது. அந்த சிலையை வேறு ஒரு ஊரில் இருந்து வந்த அந்த நாட்டிற்கும் ஊருக்கும் சம்பந்தமில்லாத ஒருவன் பார்க்கும்போது அந்த சிலையின் வடிவத்தை வைத்து அவன் அந்த ஊரை பற்றிய முக்கிய விஷயங்களை புரிந்து கொள்கிறான்.
அம்பேத்கர் கோட்டும் சூட்டும் போட்டுக் கொண்டு கையில் அரசியல் சாசன புத்தகத்தை வைத்துக் கொண்டு முன்னோக்கி கையை நீட்டி கொண்டிருக்கிறார். ஆமாம், “அரசியல் சாசனத்தை பிடித்துக் கொண்டு முன்னேறு”, என்று அம்பேத்கர் சொல்லுவது தெள்ளத் தெளிவாக தெரிகிறது. அம்பேத்கர் கண்ணாடி அணிந்திருக்கிறார், அதிகம் படிப்பவராக இருக்க கூடும். நிமிர்ந்து நின்று கொண்டிருக்கிறார் சுயமரியாதைக்காரர் என்று தெரிகிறது. நவீன உடை “முன்னேற்றத்தின் மாற்றத்தின்” அடையாளம்.
பெரியார், வயோதிக காலத்தில் கையில் தடியோடு கூனி குறுகி நிற்கவில்லை. மாறாக நிமிர்ந்து நிற்கிறார். பார்த்தாலே தெரிகிறது “தடி”. எதிரில் வருபவர்கள் வம்பு செய்தால் தலையில் தட்டி நல்வழிப்படுத்துவது போல, ஒரு ஆசிரியர் போல நிற்கிறார் பெரியார்.
இப்படி ஒவ்வொரு சிலையும் ஒவ்வொரு மாதிரி. ஆனால் ஊருக்காக வாழ்ந்தவர்கள் சிலைகள் ஆகும்போது, கூடவே சில விஷச் செடிகளுக்கும் ஆங்காங்கே சிலைகள் முளைத்து விடுகிறது.
ஆனால் அதுவும் நல்லதுதான். “இவன் தான் சாதிவெறியன், அவள் தான் மக்கள் சொத்து திருடி”, என்று குழந்தைக்கு சொல்லிக்கொடுக்கவும் அது உதவுகிறது.
ஒன்று தெரியுமா!? சாமி சிலைகளை விட நமக்கு விடுதலை வாங்கிக் கொடுத்த பெரியார் அம்பேத்கர் போன்றோரின் சிலைகளுக்குதான் இங்கே அபாயங்கள் இருக்கின்றது. அவர்களின் சக்தி அப்படி.
சிலை என்பதே அரசியல். அதனால் தான் சிலைகளை வைத்து அரசியல் செய்கிறது பாஜக. ஒரு பாசிச ஆட்சி ஒரு நாட்டில் அமையும்போது அவர்கள் முதலில் குறிவைப்பது சிலைகளைதான் .ஒரு சிலை கீழே வீழ்த்தப்படும்போது, அவர்கள் குதூக்கலிக்கின்றாகள்.அவர்கள் நிஜத்தில் அந்த அரசியலை வீழ்த்தி விட்டதாக நினைத்துக் கொள்கிறார்கள். அவர்கள் சிலைகளை வீழ்த்துவது அந்த இடத்தில் இருக்கும் அந்த சிலை சார்ந்த அரசியல் மற்றும் கொள்கைகளை வீழ்த்துவது போல. ஒரு சிலையை வீழ்த்துவது தன் அதிகாரத்தை அங்கே நிறுவுவதை போன்றது.
உணவு, மொழி என்று தங்களின் அதிகாரத்தை அவர்கள் செலுத்த பயன்படுத்தும் விஷயங்களில் சிலையும் ஒன்று. அதனால் தான் கடலின் நடுவே சிவாஜியின் சிலையை அத்தனை ஆயிரம் கோடிகள் செலவில் நிறுவுகிறார்கள். சிலை அரசியல் அதிகாரத்தின் முக்கிய அங்கம். பாகுபலி காட்சி நினைவிருக்கிறதா!? அதே போல்தான்.
சிலை அரசியலானது இப்படி இருக்க, பாஜகவின் சிலை அரசியல் மிகவும் அபாயகரமானது. இது கொடுங்கோல் சைக்கோ மன்னர்களின் யுக்தி. அப்படிப்பட்ட சைக்கோதனத்தின் உச்சத்தில் இருக்கிறது பாஜக. இன்று ராஜா சொன்னது ராஜாவினுடைய சொல் மட்டும் அல்ல, அது ஒட்டுமொத்த பாஜகவினருடையது. இந்த வன்மத்தை நாம் முளையிலேயே அதீத பலத்துடன் எதிர்க்க வேண்டும்.
இல்லையென்றால் இங்கே ஊர்களில் உள்ள, இவர்களுக்கு பிடிக்காத பேச்சியின் ,கருப்பனின் சிலையை கூட தங்களின் ஆரிய வெறிக்காக இடிக்க துணிவார்கள்.
கடைசியில் இந்த ஒன்றைமட்டும் சொல்லி கொள்கிறேன். அம்பேத்கர் சிலைகளை தொடர்ச்சியாக அவமானப்படுத்தியதும் இதே போன்ற சாதிய அரசியல் அதிகாரத்திற்காகத்தான். அப்பொழுது ஏதோ ஒரு சாதி கட்சியின் தலைவர் போல அவரின் சிலையை அவமதிப்பை தங்களுக்கு நேர்ந்த அவமானமாக கருதவில்லை பெருன்பான்மை தமிழ் சமூகம். அந்த சமூகம் ஒன்றை மட்டும் புரிந்துக்கொள்ளட்டும், இங்கே அம்பேத்கர் சிலையும் பெரியார் சிலையும் லெனின் சிலையும் தோற்றத்தில்தான் தான் வேறு வேறு, ஆனால் அவைகளின் மேல் இழைக்கப்படும் அநீதி சமூகநீதி தெரியாத ஒரே கும்பலிடம் இருந்துதான் நிகழ்த்தப்படுகிறது. இவைகளின் பின்னணியில் இருப்பது ஒரே அரசியல்தான்.
புரிந்துகொள்வோம், ஒன்றுபடுவோம்.
அடங்க மறுப்போம்.
ஷாலின்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக