ஞாயிறு, 25 மார்ச், 2018

நமோ ஆப் ... இந்தியர்களின் ரகசியங்களை அமெரிக்க கம்பனிகளுக்கு .... ராகுல் காந்தி அதிரடி குற்றச்சாட்டு !

மாலைமலர்: நமோ ஆப் என்னும் செயலியை பதவிறக்கம் செய்பவர்களின் தனிநபர்
ரகசியங்கள் வேறொரு இடத்தை சென்றடைவதாக வெளியான தகவலை வைத்து ராகுல் காந்தி கிண்டல் அடித்துள்ளார். புதுடெல்லி: சமூக வலைத்தளங்களின் ஜாம்பவனாக விளங்கும் பேஸ்புக் நிறுவனத்தினால் சமீபத்தில் ஏற்பட்ட குழப்பம் மோடி ஆப் வரை சென்றுள்ளது. அமெரிக்காவில் நடைபெற்ற அதிபர் தேர்தலில் டொனால்ட் டிரம்ப் வெற்றிபெற வேண்டும் என்பதற்காக சுமார் 5 கோடி அமெரிக்க மக்களின் தகவல்களை பேஸ்புக் நிறுவனம், லண்டனைச் சேர்ந்த கேம்பிரிட்ஜ் அனலிட்டிகா என்னும் நிறுவனத்திற்கு வழங்கியதாக பகிரங்கமான குற்றச்சாட்டு வெடித்தது. இந்த குற்றச்சாட்டை உண்மை என்று பேஸ்புக் நிறுவனர் மார்க் ஜுக்கர்பர்க் அதிகாரப்பூர்வமாக ஒப்புக்கொண்டார். மேலும், இதுபோன்ற தவறு நடந்தமைக்கு பொதுமக்களிடம் மன்னிப்பு கேட்பதாகவும் தனது முகநூல் பக்கத்தில் அவர் தெரிவித்தார். மார்க்கின் இந்த அறிவிப்பும், பயனாளர்களின் தகவல்கள் வெளியானது என்ற செய்தியும் பொதுமக்களிடம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.


அதன் பின்னர், பல்வேறு தரப்பில் இருந்தும் மார்க் ஜுக்கர்பர்க்-குக்கு எதிர்ப்புகள் கிளம்பின. அமெரிக்காவில் நடைபெற்றது போல் இந்திய தேர்தலில் நடந்தாலோ அல்லது இந்திய மக்களின் தகவல்கள் வெளியானாலோ மார்க் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் மத்திய தொழில்நுட்பத்துறை மந்திரி ரவிசங்கர் பிரசாத் எச்சரித்துள்ளார்.


இந்த பரபரப்புகள் இன்னும் ஓயாத நிலையில், தற்போது மீண்டும் ஒரு சர்ச்சை எழுந்துள்ளது. இந்திய பிரதமர் நரேந்திர மோடி வெளியிட்டுள்ள ‘நமோ ஆப்’ என்னும் ஆன்ராய்ட் செயலி மூலம் பொதுமக்களின் அந்தரங்க தகவல்கள் திருடப்படுவதாக தற்போது பூதகரமான குற்றச்சாட்டுகள் கிளம்பியுள்ளன.

மோடிக்கு, குறுந்தகவல் மற்றும் இ-மெயில் அனுப்பவும், உடனடியாக பதில் தகவல் பெறவும் வசதியாக, ‘நமோ ஆப்’ என்னும் ‘நரேந்திர மோடி மொபைல் செயலி’ என்ற சேவையை தொடங்கப்பட்டது. இந்த ஆப்பை பொதுமக்கள் ப்ளே ஸ்டோரில் இருந்து டவுன்லோட் செய்துக் கொள்ளலாம்.

இதை பயன்படுத்தி  நேரடியாக பிரதமர் அலுவலகத்திலிருந்து தகவல்கள் பெற முடியும் என்றும் பல்வேறு நலத்திட்டங்களுக்கு இந்த செயலி பெரிதளவில் உதவிகரமாக இருக்கும் என்று மத்தியில் ஆளும் பா.ஜ.க. அரசு தெரிவித்திருந்தது. 

இந்நிலையில், இந்த ஆப் மூலம் மக்களிடன் அந்தரங்க தகவல்கள் திருடப்பட்டு பிறரது சுயலாபத்துக்கு பயன்படுத்தப்படுவதாக பகீர் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.


இந்த செயலியை பயன்படுத்தும் மக்கள் உடனடியாக அதை ’டெலிட்’ செய்து விடுமாறு சமூக வலைத்தளங்களில் செய்திகள் பரவி வருகின்றன. மேலும், மென்பொறியாளர் ஒருவர் இந்த செயலியை ஹேக்(hack) செய்துவிட்டதால்தான் இதுப்போன்ற  தகவல்கள் பரவி வருவதாகவும் கூறப்படுகிறது.

மோடி ஆப் என்னும் செயலிக்குள் ஊடுருவியதாக அறிவித்துள்ள பிரான்ஸ் நாட்டை சேர்ந்த ‘ஹேக்கர்’ எல்லியட் அல்டர்சன் என்பவர், இந்த செயலியை பயன்படுத்தும் நபர்களின் பெயர், புகைப்படம், பாலினம் போன்ற ரகசிய குறிப்புகள் அனைத்தும் அவர்களின் சம்மதம் இல்லாமலேயே http:n.wzrkt.com என்னும் மையதளத்தை சென்றடைவதாக குறிப்பிட்டுள்ளார்.

சமூக வலைத்தளங்களில் பரவி வரும் இந்த தகவலை பா.ஜ.க. அரசு முற்றிலுமாக மறுத்துள்ளது. இது எதிர்க்கட்சியினரால் பரப்பப்படும் பொய் வதந்தி எனவும் விளக்கம் அளித்துள்ளது.


இந்நிலையில், இந்த விவகாரத்தை மையமாக வைத்து பிரதமர் மோடியை ராகுல் காந்தி இன்று கிண்டல் அடித்துள்ளார். இதுதொடர்பாக தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், ‘ஹாய்.., என் பெயர் நரேந்திர மோடி. நான் இந்தியாவின் பிரதமர். என்னுடைய அதிகாரப்பூர்வ ’ஆப்’பில் உங்களை பதிவு செய்து கொண்டால் உங்களைப் பற்றிய தகவல்கள் அனைத்தையும் அமெரிக்காவில் இருக்கும் எனது நண்பர்களின் கம்பெனிகளுக்கு தந்து விடுவேன்’ என குறிப்பிட்டுள்ளார்.

மேலும், ’மோடி ஆப்பின் மூலம் இந்தியர்களின் ரகசியங்கள் மூன்றாவது நபர்களுக்கு போய் சேருவது தொடர்பான செய்திகளை இருட்டடிப்பு செய்துவரும் இந்திய ஊடகங்களின் பாராமுக நடவடிக்கைகளையும் ராகுல் குற்றம்சாட்டியுள்ளார்.

மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த இந்த செய்தியை எப்போதும் போல் புதைத்ததன் மூலம் மிகப்பெரிய காரியத்தை செய்து வரும் பிரதான ஊடகங்களுக்கு நன்றி’ என்றும் ராகுல் பொறிந்து தள்ளியுள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக