வெள்ளி, 2 மார்ச், 2018

பணப்பரிமாற்றம் ... சிதம்பரத்தை விசாரிக்க சி பி ஐ முடிவு

பண பரிமாற்ற வழக்கு - ப.சிதம்பரத்தை விசாரிக்க சிபிஐ முடிவு
மாலைமலர் :ஐ.என்.எக்ஸ். மீடியா நிறுவனத்தின் சட்ட விரோத  பணப் பரிமாற்ற வழக்கில் ப.சிதம்பரத்தை விசாரணை நடத்த சிபிஐ முடிவு செய்துள்ளது. புதுடெல்லி: ஐ.என்.எக்ஸ். மீடியா என்ற தொலைக்காட்சி நிறுவனம் மும்பையை தலைமை இடமாகக் கொண்டு செயல்பட்டு வருகிறது.
இந்த நிறுவனத்தின் இயக்குனர்களாக பீட்டர் முகர்ஜி, அவரது மனைவி இந்திராணி முகர்ஜி உள்ளனர்.
ஐ.என்.எக்ஸ். மீடியா நிறுவனத்தின் செயல்பாடுகளை மேம்படுத்த வெளிநாட்டில் இருந்து முதலீடு பெற பீட்டர் முகர்ஜி, இந்திராணி முகர்ஜி இருவரும் கடந்த 2007-ம் ஆண்டு முடிவு செய்தனர். ஒரு நிறுவனம் வெளிநாட்டில் இருந்து பணம் பெற வேண்டுமானால், மத்திய நிதி அமைச்சகம் மற்றும் அன்னிய முதலீடு மேம்பாட்டு வாரியத்திடம் இருந்து தடையில்லா சான்றிதழ் பெற வேண்டும்.

அப்போது மத்திய நிதி மந்திரியாக ப.சிதம்பரம் இருந்தார். 2007-ம் ஆண்டு டெல்லி நார்த் பிளாக்கில் உள்ள மத்திய நிதி அமைச்சக அலுவலகத்துக்கு சென்று ப.சிதம்பரத்தை பீட்டர் முகர்ஜியும், இந்திராணி முகர்ஜியும் சந்தித்து பேசினார்கள். தங்கள் நிறுவனத்துக்கு ரூ.305 கோடி அன்னிய முதலீடு பெற உதவி செய்யும்படி கோரிக்கை விடுத்தனர்.
இதையடுத்து ஐ.என். எக்ஸ். நிறுவனத்துக்கு வெளிநாட்டில் இருந்து ரூ. 305 கோடி முதலீடு கிடைத்தது. ஆனால் அரசின் சட்ட விதிகளை மீறி, சட்ட விரோதமாக இந்த பணப் பரிமாற்றம் நடந்ததாக குற்றச்சாட்டுகள் எழுந்தது.
அதாவது மத்திய நிதி அமைச்சகத்தின் அதிகாரத்தை ப.சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரம் தவறாக பயன்படுத்தி இந்த முறைகேடுக்கு உதவினார் என்று கூறப்பட்டது. இதைத் தொடர்ந்து சி.பி.ஐ.யும், அமலாக்கத் துறையும் கடந்த ஆண்டு கார்த்தி சிதம்பரம் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணையைத் தொடங்கியது.
சி.பி.ஐ. அதிகாரிகள் பல தடவை சம்மன் அனுப்பிய பிறகு கார்த்தி சிதம்பரம் டெல்லி சென்று விசாரணைக்கு ஆஜரானார். சி.பி.ஐ. அதிகாரிகள் அவரிடம் சுமார் 22 மணி நேரம் விசாரணை நடத்தினார்கள்.
இதற்கிடையே ஐ.என். எக்ஸ். மீடியா நிறுவன இயக்குனர்கள் பீட்டர் முகர்ஜி, இந்திராணி முகர்ஜி இருவரிடமும் சட்ட விரோத பணப் பரிமாற்றம் குறித்து வாக்குமூலம் பெற்றது. குற்றவியல் நடைமுறை சட்டம் பிரிவு 164-ன் கீழ் மாஜிஸ்திரேட் முன்பு அவர்கள் வாக்குமூலம் கொடுத்தனர். அந்த வாக்கு மூலத்தில் அவர்கள் கூறி இருப்பதாவது:-
மத்திய நிதி மந்திரியாக ப.சிதம்பரம் இருந்தபோது 2007-ம் ஆண்டு நாங்கள் எங்கள் நிறுவனத்துக்கு அன்னிய முதலீடு பெறுவது தொடர்பாக சந்தித்து பேசினோம். ரூ.4.2 கோடி பெற உதவ வேண்டும் என்று கோரிக்கை விடுத்தோம். அப்போது, “ப.சிதம்பரம் தனது மகன் கார்த்தி சிதம்பரம் செய்து வரும் தொழிலுக்கும் உதவி செய்யும்படி கேட்டுக் கொண்டார்.
இதையடுத்து நாங்கள் டெல்லியில் உள்ள ஒரு நட்சத்திர ஓட்டலில் கார்த்தி சிதம்பரத்தை சந்தித்துப் பேசினோம். அப்போது கார்த்தி சிதம்பரம், அன்னிய முதலீடு பெற தடையில்லா சான்றிதழ் பெற்று தருவதாகவும், அதற்கு பணம் தர வேண்டும் என்றார்.
எங்களிடம் இருந்து அவர் 1 மில்லியன் டாலர் பணத்தை எதிர்பார்த்தார்.
மேலும் கார்த்தி சிதம்பரம் தனது இரு நிறுவனங்களுக்கு உதவ வேண்டும் என்றும் நிபந்தனை விதித்தார். அந்த நிறுவனங்களில் “செஸ் மேனேஜ்மெண்ட்” எனும் நிறுவனத்தை கார்த்தி சிதம்பரமே சொந்தமாக நிர்வகித்து வருகிறார்.
அட்வான்டேஜ் ஸ்டிரட்ட ஜிக் கன்சல்டிங் பிரைவேட் லிமிடெட் (ஏ.எஸ்.சி.பி.எல்.) எனும் நிறுவனத்துக்கும் உதவ சொன்னார்கள். அந்த நிறுவனத்தை கார்த்தி சிதம்பரம் மறைமுகமாக தனது கட்டுப்பாட்டில் வைத்துள்ளார். அவரது நிறுவனங்களுக்கு நாங்கள் ரூ.3.1 கோடி வழங்கினோம்.
இவ்வாறு பீட்டர் முகர்ஜியும், இந்திராணி முகர்ஜியும் கூறினார்கள்.
இந்த வாக்குமூலம்தான் கார்த்தி சிதம்பரத்துக்கு எதிரான வலுவான ஆதாரமாக அமைந்தது. இதை வைத்து சி.பி.ஐ. அதிகாரிகள் நேற்று முன்தினம் காலை அமெரிக்காவில் இருந்து சென்னை திரும்பிய கார்த்தி சிதம்பரத்தை கைது செய்தனர். அவரை 5 நாள் காவலில் வைத்து விசாரிக்க சி.பி.ஐ. அதிகாரிகள் நேற்று கோர்ட்டில் அனுமதி பெற்றனர்.
டெல்லியில் இன்று காலை கார்த்தி சிதம்பரத்திடம் சி.பி.ஐ. அதிகாரிகள் விசாரணையைத் தொடங்கினார்கள். தேவைப்பட்டால் அவரை மும்பைக்கும் அழைத்து சென்று விசாரணை நடத்த சி.பி.ஐ. அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர். சட்ட விரோத பணப் பரிமாற்றம் எந்தெந்த வகைகளில் நடந்துள்ளது என்பதை முழுமையாக வெளியில் கொண்டு வர சி.பி.ஐ. அதிகாரிகள் தீவிரமாக உள்ளனர்.
பீட்டர் முகர்ஜி மற்றும் இந்திராணி முகர்ஜியிடம் இருந்து மேலும் பல கோடி ரூபாயை கார்த்தி சிதம்பரம் வாங்கி இருப்பார் என்று சி.பி.ஐ. அதிகாரிகள் சந்தேகப்படுகிறார்கள். மேலும் வெளிநாடுகளில் உள்ள தனது நிறுவனங்களுக்கு கார்த்தி சிதம்பரம் செய்த பண பரிமாற்ற விபரங்கள் அழிக்கப்பட்டுள்ளதாகவும் சந்தேகம் எழுந்துள்ளது. இதில் உண்மைகளை தோண்டி எடுக்கும் முயற்சிகளில் சி.பி.ஐ. அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.
எனவே கார்த்தி சிதம்பரத்திடம் 5 நாள் காவல் விசாரணை முடியும் போது பல புதிய தகவல்கள் வெளியாகும் என்று பரபரப்புடன் எதிர்பார்க்கப்படுகிறது.
இதற்கிடையே ஐ.என்.எக்ஸ் மீடியா நிறுவனம் மூலம் கார்த்தி சிதம்பரம் செய்த சட்ட விரோத பணப் பரிமாற்றத்தின் விசாரணை வளையம் விரிவடைய உள்ளது. அதாவது இந்த வழக்கின் விசாரணை வளைத்துக்குள் ப.சிதம்பரமும் கொண்டு வரப்படுவார் என்று தகவல் வெளியாகியுள்ளது.
இதை சி.பி.ஐ. மூத்த அதிகாரி ஒருவர் உறுதிப்படுத்தினார். அவர் கூறியதாவது:-
ஐ.என்.எக்ஸ். மீடியா நிறுவனத்தின் சட்ட விரோத பணப் பரிமாற்றத்தில் ப.சிதம்பரத்துக்கும் தொடர்பு இருக்கும் என்று எங்களுக்கு தெரிய வந்துள்ளது. எனவே ப.சிதம்பரத்தையும் நாங்கள் விசாரிக்க நடத்த முடிவு செய்துள்ளோம்.
விரைவில் இதற்காக ப.சிதம்பரத்துக்கு சம்மன் அனுப்பப்படும். டெல்லியில் உள்ள சி.பி.ஐ. தலைமை அலுவலகத்துக்கு வந்து ஆஜராகும்படி அவருக்கு உத்தரவிடுவோம். அவர் நேரில் ஆஜரானதும் சட்ட விரோத பணப்பரிமாற்றம் குறித்து உரிய விசாரணை நடத்துவோம்.
அவரை நாங்கள் இந்த வழக்கின் குற்றவாளிகள் பட்டியலில் சேர்க்கவில்லை. ஆனால் சட்ட விரோத பணப் பரிமாற்றத்தக்கு உதவும் வகையில் அவரது செயல்பாடுகள் அமைந்துள்ளதாக கருதுகிறோம். அதை அவரிடம் விசாரித்து தெரிந்து கொள்வோம்.
இவ்வாறு அந்த சி.பி.ஐ. அதிகாரி கூறினார்.
சி.பி.ஐ.யின் இந்த முடிவால் ப.சிதம்பரத்துக்கு சிக்கல் எழுந்துள்ளது. ப.சிதம்பரத்தை சி.பி.ஐ. குறி வைத்திருப்பதற்கு காங்கிரஸ் தலைவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
ஆனால் ஐ.என்.எக்ஸ் மீடியா நிறுவனத்தின் சட்ட விரோத பணப்பரிமாற்ற முறைகேட்டை வடி வமைத்து கொடுத்ததே ப.சிதம்பரம்தான். எனவே அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று பா.ஜ.க. மூத்த தலைவர்கள் வலியுறுத்தி உள்ளனர்.
ப.சிதம்பரத்தை நோக்கி சி.பி.ஐ. செயல்பட தொடங்கி இருப்பதால் இந்த விவகாரம் பா.ஜ.க. - காங்கிரஸ் இடையே மோதலாக மாறியுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக