வெள்ளி, 9 மார்ச், 2018

ஹாதியா திருமணம் செல்லும் உச்ச நீதிமன்றம் தீர்ப்பு

Supreme Court,உச்ச நீதிமன்றம்தினமலர் :புதுடில்லி : 'முஸ்லிமாக மதம் மாறி திருமணம் செய்த, கேரளாவைச் சேர்ந்த, ஹாதியாவின் திருமணம் செல்லும்' என, உச்ச நீதிமன்றம் தீர்ப்பு அளித்து உள்ளது.<>கேரளாவைச் சேர்ந்த, அகிலா என்ற பெண், மதம் மாறி, ஹாதியா என, பெயர் மாற்றம் செய்து, ஷபின் ஜகான் என்ற இளைஞரை, திருமணம் செய்தார். இந்த திருமணத்தை எதிர்த்து, அந்த பெண்ணின் தந்தை, அசோகன், கேரள உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். 'ஹிந்து பெண்களை காதலித்து, வலுக்கட்டாயமாக, முஸ்லிமாக மதமாற்றம் செய்கின்றனர். ஐ.எஸ்., போன்ற பயங்கரவாத அமைப்புக்கு, இந்தப் பெண்கள், பாலியல் அடிமைகளாகவும், பயங்கரவாதத்தில்< ஈடுபடுத்தவும் அனுப்பப்படுகின்றனர். 'லவ் ஜிகாத் எனப்படும், இந்தத் திருமணம் செல்லாது என, அறிவிக்க வேண்டும்' என, அசோகன் தரப்பில் வாதிடப்பட்டது. இதை விசாரித்த கேரள உயர் நீதிமன்றம், 'ஷபின் ஜகான் - ஹாதியாவின் திருமணம் செல்லாது' என, தீர்ப்பு அளித்தது. அந்த பெண்ணை, அவரது பெற்றோர் வீட்டில் தங்கியிருக்க வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டது.


இந்த தீர்ப்பை எதிர்த்து, ஜகான் சார்பில், உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. பயங்கரவாத அமைப்புக்கு பெண்கள் அனுப்பப்படுவது குறித்து, என்.ஐ.ஏ., எனப்படும், தேசிய புலனாய்வு அமைப்பின் விசாரணைக்கு உத்தரவிடப் பட்டது.இதற்கிடையில், ஹாதியாவிடம், உச்ச நீதிமன்ற அமர்வு தனியாக விசாரித்தது. அப்போது, கணவருடன் சேர்ந்து வாழ விரும்புவதாக, அவர் தெரிவித்திருந்தார்.

தமிழகத்தின், சேலத்தில் உள்ள கல்லுாரியில் தங்கி, ஓமியோபதி படிப்பைத் தொடரும்படி, உச்ச நீதிமன்றம், அப்போது உத்தரவிட்டிருந்தது.< ஜகான் தொடர்ந்த வழக்கு மற்றும் கணவருடன் சேர்ந்து வாழ அனுமதிக்கக் கோரும் ஹாதியாவின் வழக்குகளை, தலைமை நீதிபதி, தீபக் மிஸ்ரா தலைமையிலான, உச்ச நீதிமன்ற அமர்வு விசாரித்தது. இந்த வழக்கில், நேற்று தீர்ப்பு அளிக்கப்பட்டது.

அதன்படி, திருமணம் செல்லாது என்ற, கேரள உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பு ரத்து செய்யப்பட்டு உள்ளது. மேலும், தன் விருப்பத்தின்படி ஹாதியா, தன் வாழ்க்கையை தீர்மானித்து கொள்ளலாம் என்றும், தீர்ப்பில் குறிப்பிடப்பட்டு உள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக