சனி, 17 மார்ச், 2018

திருப்பதியிலிருந்து திருமலை வரை மின்சார பேருந்து

திருப்பதி: எலெக்ட்ரிக் பேருந்து!மின்னம்பலம்: ஏழுமலையான் கோயிலுக்கு வரும் பக்தர்களின் வசதிக்காக அதிநவீன எலெக்ட்ரிக் பேருந்து போக்குவரத்து இன்று காலை (மார்ச் 17) தொடங்கியது.
ஏழுமலையானைத் தரிசிக்க திருப்பதிக்கு வரும் பக்தர்களுக்காக ஆந்திர அரசு சார்பில் திருப்பதியிலிருந்து திருமலை வரை பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இதனால், திருமலையில் காற்று மற்றும் சுற்றுச்சூழல் மாசுபடுகிறது எனத் தெரிவிக்கப்பட்டதால், சுற்றுச்சூழல் மாசுபடுவதைத் தடுக்கவும், பக்தர்களின் வசதிக்காகவும் முதன்முறையாக பேட்டரியால் இயங்கும் பேருந்துகளை ஆந்திர அரசு அறிமுகப்படுத்தியுள்ளது.
முதல்வர் சந்திரபாபு நாயுடு காற்று மாசுபாட்டை குறைப்பதற்காக 1,500 பேட்டரி பேருந்துகளை இயக்க முடிவு செய்தார். இந்தப் பேருந்துகள் திருப்பதி, விஜயவாடா, விசாகப்பட்டினம் ஆகிய நகரங்களில் இயக்க தீர்மானிக்கப்பட்டது. ரூ. 3 கோடிக்கு ஒரு எலெக்ட்ரிக் பேருந்தை வாங்க முடிவு செய்யப்பட்டது. அதற்காக மத்திய அரசு ஒரு பேருந்துக்கு ரூ. 87,000 மானியம் அளிக்கவும் முன்வந்தது.

அதைத் தொடர்ந்து, கோல்ட் ஸ்டோன் எலெக்ட்ரிக் பேருந்து நிறுவனத்துடன் பேச்சு வார்த்தை நடத்தப்பட்டு, 2 பேருந்துகளை ஆந்திர அரசு வாங்கியது. இந்த பேட்டரி பேருந்து நேற்று முன் தினம் (மார்ச் 14)திருப்பதி வந்தடைந்தது. இந்தப் பேருந்தை இயக்க 5 ஓட்டுநர்களுக்கு கோல்ட் ஸ்டோன் நிறுவனத்தினர் பயிற்சி அளித்தனர். வட்டார போக்குவரத்து அலுவலக அதிகாரிகள் மூலம் இரு பேருந்துகளுக்கும் பதிவெண் வழங்கப்பட்டுள்ளது. இந்தப் பேருந்தில் 32 பேர் பயணிக்கலாம். 9 மீட்டர் நீளம் கொண்ட இந்தப் பேருந்தில், கண்காணிப்பு கேமரா, சீட் பெல்ட், டிவி, சொகுசு இருக்கைகள் போன்றவை அமைக்கப்பட்டுள்ளன. இதில் சென்ஸார் அமைக்கப்பட்டிருப்பதால், விபத்து ஏற்படுவதை முன் கூட்டியே தெரியப்படுத்தும் நவீன உத்தியும் அமைக்கப்பட்டுள்ளது. இந்தப் பேருந்தை 3 மணிநேரம் சார்ஜ் செய்தால் சுமார் 250 கிலோ மீட்டர் தூரம் வரை இந்தப் பேருந்தை இயக்க முடியும். அதன்படி, திருப்பதியிலிருந்து திருமலை வரை மலைப்பாதையில் 4 முறை எலெக்ட்ரிக் பேருந்தை இயக்கலாம். தற்போது டீசல் மூலம் பேருந்து இயக்கப்படுகிறது. அவ்வாறு இயக்கப்படும் பேருந்துக்கு 1 கிலோ மீட்டருக்கு 16 ரூபாய் வரை செலவாகிறது. எலெக்ட்ரிக் பேருந்தை இயக்கக் கிலோ மீட்டருக்கு 3 ரூபாய் மட்டுமே செலவாகும்.
இன்று காலை திருப்பதி பேருந்து நிலையத்திலிருந்து திருமலைக்கு இந்தப் பேருந்தின் மூலம் பயணிகள் பயணித்தனர்.
இந்தப் பேருந்து பாதுகாப்பாக இருந்தால், இதேப்போன்று மேலும் 40 பேருந்துகள் வரும் ஏப்ரல் மாதம் முதல் வாரத்திலிருந்து திருப்பதி-திருமலை இடையே இயக்கப்படும் என தேவஸ்தான தலைமை நிர்வாக அதிகாரி அணில் குமார் சிங்கால் தெரிவித்துள்ளார். இந்தப் பேருந்தில் பயணம் செய்தது மிகவும் பாதுகாப்பாக இருந்ததாகப் பயணிகள் கருத்து தெரிவித்துள்ளனர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக