ஞாயிறு, 18 மார்ச், 2018

ப.சிதம்பரம் : பணமதிப்பிழப்பு என்பது மிகப்பெரிய பொய்; திருப்பதி கோயிலில் கூட ரூபாயை வேகமாக எண்ணுகிறார்கள்

tamilthehindu :டெல்லி காங்கிரஸ் மாநாட்டில் ப.சிதம்பரம்: மத்தியில் ஆளும் பாஜக அரசு கொண்டு வந்த பணமதிப்பிழப்பு நடவடிக்கை என்பது, மிகப்பெரிய பொய். திருப்பதியில் கூட பணத்தை வேகமாக எண்ணுகிறார்கள், ஆனால் ரிசர்வ் வங்கி இன்னும்பணத்தின் மதிப்பை கூறவில்லை என்று ப.சிதம்பரம் கடுமையாக குற்றம்சாட்டினார்.
காங்கிரஸ் கட்சியின் 84-வது தேசிய அளவிலான மாநாடு டெல்லியில் நடந்து வருகிறது. இதில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, முன்னாள் தலைவர் சோனியா காந்தி, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், மூத்த தலைவர்கள் ப.சிதம்பரம், குலாம் நபி ஆசாத் உள்ளிட்ட பலர் பங்கேற்றுள்ளனர். மேலும், 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட காங்கிரஸ் தலைவர்கள் கலந்து கொண்டுள்ளனர்.
இந்த மாநாட்டில் மூத்த தலைவரும், முன்னாள் நிதி அமைச்சருமான ப.சிதம்பரம் பேசினார். அப்போது, மத்திய அரசு கொண்டு வந்த பணமதிப்பிழப்பு நடவடிக்கையையும், பிரதமர் மோடியின் அரசையும் கடுமையாகச் சாடினார். அவர் பேசியதாவது:

மத்தியில் ஆளும் பாஜக அரசு கடந்த 2016-ம் ஆண்டு பணமதிப்பிழப்பு நடவடிக்கையை கொண்டு வந்தது. உண்மையில் பணமதிப்பிழப்பு நடவடிக்கை என்பது மிகப்பெரிய பொய்யாகும். இதைக் காட்டிலும் மிகப்பெரிய பொய் இருக்கவே முடியாது.
இந்த பணமதிப்பிழப்பு நடவடிக்கையில் செல்லாத ரூ.500, ரூ.1000 நோட்டுகள் எவ்வளவு வங்கி முறைக்குள் வந்தன, பணம் எண்ணி முடிக்கப்பட்டுவிட்டதா என்பது குறித்து ரிசர்வ் வங்கி இன்னும் அறிக்கை வெளியிடவில்லை. இன்னும் பணத்தை எண்ணிக் கொண்டு இருக்கிறோம் என்று ரிசர்வ் வங்கி கூறுகிறது.
நான் ரிசர்வ் வங்கி கவர்னருக்கு ஒரு அறிவுரை கூறுகிறேன். திருப்பதி கோயிலுக்கு செல்லுங்கள், அங்கு பணம் எண்ணும் முறையைப் பார்த்து கற்றுக்கொள்ளுங்கள். அவர்கள் ரிசர்வ் வங்கியைக் காட்டிலும் வேகமாக பணத்தை எண்ணுகிறார்கள்.
மத்தியில் ஆளும் மோடி தலைமையிலான அரசு நாட்டில் இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பை உருவாக்க தவறவிட்டது. காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் 10ஆண்டு கால அரசில் அதிகமான வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டன.
நாங்கள் போதுமான வேலைவாய்ப்புகளை உருவாக்க முடியாவிட்டாலும் வேலைவாய்ப்புகளை உருவாக்கினோம். கல்வித்துறை, சேவைத்துறை, தொழில்துறை, சேவைத்துறையில் வேலைவாய்ப்புகளை மக்கள் கண்டறிந்தார்கள், வாய்ப்புகளைப் பெற்றார்கள்.
ஆனால், கடந்த 4 ஆண்டுகளில் பாஜக அரசு எந்தவிதமான வேலைவாய்ப்புகளையும் உருவாக்கவில்லை. மாறாக வேலைவாய்ப்புகளை சிதைத்து, சமானிய மக்களின், தொழிலாளர்களின் வேலைவாய்ப்புகளை பறித்துள்ளது. இதற்கு முக்கியக் காரணம் ஜிஎஸ்டி முறையும், பணமதிப்பிழப்பு நடவடிக்கையும்தான் காரணம்.
இப்போதுள்ள நிலையில் நாடு 5 முக்கிய பிரச்சினைகளை எதிர்கொண்டுள்ளது.
1 லட்சக்கணக்கான இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகளை உருவாக்குதல்
2. கோடிக்கணக்கான ஏழை மக்களுக்கு தரமான சுகாதார வசதி, கல்வி வசதி,சமூக பாதுகாப்பு திட்டங்களை ஏற்படுத்தி தருதல்
3. சமநிலையுள்ள தொழிலாளர் கொள்கையைக் கொண்டு வந்துவளர்ச்சியை மேம்படுத்துதல், அதேசமயம் தொழிலாளர்களுக்கு உயர்ந்த கூலியையும், சமூக பாதுகாப்பு திட்டங்களையும் பெற்றுத்தருதல்
4. விவாசாயிகளின் பிரச்சினைகளைத் தீர்த்தல், வேளாண் உற்பத்தியை மேம்படுத்துதல்
5. ஒப்பந்த தொழிலாளர்களை பாதுகாத்து அவர்களின் உழைப்புக்கு ஏற்ற கூலியை பெற்றுத்தருதல்
இந்த பிரச்சினைகளைத் தீர்க்க காங்கிரஸ் கட்சியால் மட்டுமே முடியும். காங்கிரஸ் கட்சியின் இளம் தலைமை உலகம் முழுவதும் கட்சியைக் கொண்டுசெல்லும். மீண்டும் கூட்டணிக் கட்சிகளை அரவணைத்து ஆட்சியில்அமரும்.
கடந்த 2014ம் ஆண்டு பாஜக ஆட்சியில் 766 திட்டங்கள் கிடப்பில் இருந்தன, 2015-ம் ஆண்டில் 816 ஆகவும், 2016-ம் ஆண்டில் 893 ஆகவும் உயர்ந்துவிட்டது. இன்று ஏராளமான திட்டங்கள் இன்னும் செயல்படுத்தப்படாமல் உள்ளன. திட்டங்கள் புதுப்பிக்கப்படவில்லை, தொடங்கப்படவில்லை, நிறுத்தப்பட்டுவிட்டன.
நாட்டின் பொருளாதார வளர்ச்சி குறைந்ததற்கு பிரதமர் மோடி தலைமையிலான அரசே காரணம். வலிமையான பொருளாதாரத்தை மோடி அரசு பெற்றுள்ளது. வளர்ச்சி எனும் இலக்கை அடுத்த தலைமுறைக்கும் கொண்டு செல்லவேண்டும். ஆனால், இன்று உலகப்பொருளாதார வளர்ச்சிக்கு இணையாக இந்தியப் பொருளாதாரம் வளரவில்லை.
பிரதமர் மன்மோகன் சிங் ஆட்சியில் மிகப்பெரிய சாதனை 14 கோடி மக்களை ஏழ்மை நிலையில் இருந்து மீட்டதுதான். ஆனால், பாஜக அரசு வந்து மக்களை மீண்டும் ஏழ்மைநிலையில் தள்ளிவிட்டது. வறுமைக்கோட்டுக்குகீழ் மீண்டும் மக்கள் அதிகரித்துவிட்டனர்.
குறிப்பாக பணமதிப்பிழப்பு நடவடிக்கையால் லட்சக்கணக்காண மக்கள் ஏழ்மை நிலைக்கு சென்றனர். ஆயிரக்கணக்காண மக்கள் வேலையிழந்து தெருவுக்கு வந்தனர். ஜிஎஸ்டி வரி முறை வேலைவாய்ப்புகளை சிதைத்தது. மக்களை கட்டாயமாக ஏழ்மைக்குள் தள்ளியது. இதற்கிடையே விவசாயிகள் பிரச்சினையும் விவசாயிகளை வறுமைக்குவித்திட்டது. தினக்கூலித் தொழிலாளர்கள் கூட வேலைகிடைக்காமல் திண்டாடினார்கள்
இவ்வாறு ப.சிதம்பரம் பேசினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக