சனி, 10 மார்ச், 2018

ராகுல் காந்தி : பணமதிப்பிழப்பு யோசனையை என்னிடம் கூறியிருந்தால் அவர்களை வெளியேற்றி இருப்பேன் ,, குப்பை தொட்டியில் போட்டு இருப்பேன்

tamilthehindu :நான் பிரதமராக இருந்து, அப்போது பண மதிப்பிழப்பு நடவடிக்கை குறித்த யோசனைகள் என்னிடம் தெரிவித்து இருந்தால், என்ன செய்திருப்பேன் தெரியுமா என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பார்வையாளர்களிடம் புதிர் போட்டுள்ளார்.
காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி 3 நாள் பயணமாக சிங்கப்பூர், மலேசியா நாடுகளுக்குச் சென்றுள்ளார். மலேசியாவில் ஒரு கலந்துரையாடல் நிகழ்ச்சியில் ராகுல் காந்தி பங்கேற்றுப் பேசினார்.
அப்போது கூட்டத்தில் இருந்த ஒருவர் எழுந்து, ராகுல் காந்தியிடம் ஒரு கேள்வி எழுப்பினார். நீங்கள் பிரதமராக இருந்திருந்தார், உங்கள் ஆட்சியில் பண மதிப்பிழப்பு நடவடிக்கையை எப்படி அமல்படுத்தி இருப்பீர்கள்? என்று கேட்டார்.
இதற்கு ராகுல் காந்தி சிரித்துக்கொண்டே பதில் அளித்தார்.
''காங்கிரஸ் ஆட்சி நடந்திருந்து, நான் பிரதமராக இருந்திருந்தால், என்னிடம் பண மதிப்பிழப்பு நடவடிக்கை குறித்த யோசனை கொடுக்கப்பட்டால் என்ன செய்திருப்பேன் தெரியுமா?பண மதிப்பிழப்பு குறித்த கோப்புகளை தூக்கி குப்பைத் தொட்டியில் வீசி இருப்பேன்.

எனக்கு அந்த யோசனையை கொடுத்தவர்களையும் வெளியேற்றி இருப்பேன். என்னைப் பொறுத்தவரை பண மதிப்பிழப்பு நடவடிக்கையை இப்படித்தான் கையாண்டு இருப்பேன்.
காங்கிரஸ் கட்சியைப் பொறுத்தவரை பண மதிப்பிழப்பு நடவடிக்கை என்பது மிகப் பெரிய சோகமான நிகழ்வு. பிரதமர் மோடியின் தீர ஆய்வு செய்யாத நடவடிக்கையால், கோடிக்கணக்கான மக்கள் வாழ்வாதாரத்தையும், வாழ்க்கையையும் இழந்து தவித்தனர்.
அவர்களுக்கு ஆதரவாகவே நாங்கள் செயல்பட்டோம். பண மதிப்பிழப்பு நடவடிக்கையின் முதலாம் ஆண்டை கறுப்பு நாளாக காங்கிரஸ் கட்சி கடைபிடித்தது'' என ராகுல்  தெரிவித்தார்.
நாட்டில் கறுப்புப் பணம், கள்ள நோட்டு, ஊழல் ஆகியவற்றை ஒழிக்கும் நோக்கில் கடந்த 2016-ம் ஆண்டு நவம்பர் 8-ம் தேதி நாட்டில் புழக்கத்தில் இருந்த ரூ.500, ரூ.1000 நோட்டுகள் செல்லாது என பிரதமர் மோடி அறிவித்து பண மதிப்பிழப்பை கொண்டு வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக