வெள்ளி, 30 மார்ச், 2018

தமிழக அரசு கேபிள் டிவி.க்கான உரிமம் நீக்கம் ? மத்திய செய்தி ஒலிபரப்பு அமைச்சகம் திட்டம்

tamilthehindu :ஆர்.ஷபிமுன்னா  ;புதுடெல்லி< தமிழக அரசு கேபிள் டிவிக்கான உரிமத்தை ரத்து செய்ய மத்திய செய்தி ஒலிபரப்புத்துறை அமைச்சகம் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதற்கு அனுமதி கேட்டு பிரதமர் அலுவலகத்துக்கு கடிதம் எழுத உள்ளதாகக் கூறப்படுகிறது. தமிழகத்தில் ‘டேக் டிவி’ அல்லது ‘அரசு கேபிள்’ என்றழைக்கப்படும் தமிழக அரசு கேபிள் டிவி கார்ப்பரேஷன் லிமிடெட் நிறுவனம் சார்பில், கேபிள் மூலம் 300 சேனல்கள் வழங்கப்படுகின்றன. இதன்மூலம், பொதுமக்களுக்கு குறைந்த கட்டணத்தில் தொலைக்காட்சி சேனல்களை வழங்கும் நோக்கம் நிறைவேறி வருகிறது. இதற்கு ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியின்போது ஜூலை 5, 2012-ல் கோரப்பட்ட டிஜிட்டல் உரிமம் கிடைக்காமல் இருந்தது. பிறகு பிரதமராக பொறுப்பேற்ற மோடியுடன் அப்போது தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதாவுக்கு இருந்த நட்பு காரணமாக டிஜிட்டல் உரிமம் வழங்கப்பட்டது. அதற்கு முன்பு ஆகஸ்ட் 2014-ல் தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் (டிராய்) மத்திய அரசுக்கு அளித்த பரிந்துரை கணக்கில் கொள்ளப்படவில்லை. இதற்கு காரணமாக அப்போது இரு அரசுகளுக்கு இடையே நிலவிய நட்பு ரீதியான அரசியல் சூழல் தற்போது மாறி வருகிறது.


இதுபோல இந்தியாவில் வேறு எந்த மாநில அரசுகளும் கேபிள் டிவி நிறுவனத்தை நடத்தவில்லை. எனினும், தமிழகத்தின் கேபிள் டிவி செயல்பாடுகளை கண்டு வியந்த ஆந்திரா, ஒடிஸா உள்ளிட்ட மற்ற மாநிலங்களும் அதை தொடங்க அனுமதி கேட்டு வந்தன. ஆனால் யாருக்கும் இதுவரை அனுமதி வழங்கப்படவில்லை. கடைசியாக இப்போது கேபிள் டிவி நடத்த மத்திய அரசிடம் தெலங்கானா மாநில அரசு உரிமம் கோரி உள்ளது. இந்நிலையில், தெலங்கானா அரசுக்கு அனுமதி வழங்காமல், தமிழக அரசின் கேபிள் டிவியின் உரிமத்தையும் ரத்து செய்ய மத்திய செய்தி ஒலிபரப்புத்துறை அமைச்சகம் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
இதுகுறித்து மத்திய செய்தி ஒலிபரப்புத் துறை அமைச்சக வட்டாரம் ‘தி இந்து’விடம் கூறும்போது, “தமிழகத்தைப் போல கேபிள் டிவி உரிமம் வழங்கப்படவில்லை என்றால் மற்ற மாநிலங்கள் நீதிமன்றத்தை நாட வாய்ப்பு உள்ளது. இப்போது தமிழகத்தின் அரசியல் சூழலும் மாறி வருவதால், டிராய் பரிந்துரையை காரணம் காட்டி உரிமத்தை ரத்து செய்ய திட்டமிட்டுள்ளோம். இது அரசியல் ரீதியான முக்கிய முடிவு என்பதால், அதற்கான அனுமதி கேட்டு பிரதமர் அலுவலகத்துக்கு கடிதம் எழுத உள்ளோம்” என்றனர்.
கடந்த மார்ச் 26-ல் தமிழக அரசு கேபிள் பற்றி பிரதமர் அலுவலகத்துக்கு விளக்கம் அளிக்க நேரம் ஒதுக்கப்பட்டிருந்தது. இது கடைசி நேரத்தில் ரத்து செய்யப்பட்டது. இதையடுத்து வேறொரு நாளில் நேரம் கேட்டு செய்தி ஒலிபரப்புத் துறை அதிகாரிகள் காத்திருக்கின்றனர்.
இத்துடன், தமிழக அரசு கேபிள், அதை அரசியல் ஆயுதமாக பயன்படுத்துவதாக தனக்கு வந்த புகாரையும் செய்தி ஒலிபரப்புத்துறை அமைச்சகம் முன்வைக்க உள்ளது. சமீபத்தில் தந்தி டிவியில் தமிழக அரசு விரும்பாத செய்தி ஒளிபரப்பப்பட்டதாக சர்ச்சை கிளம்பியது. இதன் காரணமாக தந்தி டிவியின் ஒளிபரப்பு, அரசு கேபிளில் நிறுத்தப்பட்டது.
இதுகுறித்து மத்திய செய்தி ஒலிபரப்புத் துறைக்கு புகார் அளிக்கப்பட்டுள்ளது. எனினும், அரசு கேபிளை ரத்து செய்வது தொடர்பான இறுதி முடிவை பிரதமர் அலுவலகமே எடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கடந்த ஆகஸ்ட் 12, 2014-ல் டிராய் அளித்த பரிந்துரையில் “அரசியல் அமைப்புகள், மதம் சார்ந்த அமைப்புகள், உள்ளாட்சி அமைப்புகள், பஞ்சாயத்து ராஜ் மற்றும் பொது நிதியில் செயல்படும் அமைப்புகள், மத்திய மற்றும் மாநில அரசுகளின் அமைச்சகங்கள், நிறுவனங்கள் ஆகியவற்றுக்கு கேபிள் டிவி நடத்தும் உரிமம் வழங்கக் கூடாது. ஒருவேளை ஏற்கெனவே உரிமம் வழங்கப்பட்டிருந்தால் அதை ரத்து செய்ய வேண்டும்” எனக் கூறப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக