ஞாயிறு, 25 மார்ச், 2018

மேலாண்மை வாரியத்துக்கு பதிலாக காவிரி மேற்பார்வை ஆணையம்

தினத்தந்தி :சுப்ரீம் கோர்ட்டு விதித்த ‘கெடு’ இன்னும் 4 நாட்களில் முடிவடைய இருக்கும் நிலையில், மேலாண்மை வாரியத்துக்கு பதிலாக 9 பேர் கொண்ட காவிரி மேற்பார்வை ஆணையத்தை அமைக்க மத்திய அரசு நடவடிக்கை மேற்கொண்டு உள்ளது. புதுடெல்லி, < காவிரி நதிநீரை பங்கீடு செய்துகொள்வதில், தமிழ்நாட்டுக்கும், கர்நாடகத்துக்கும் இடையே நெடுங்காலமாக பிரச்சினை இருந்து வருகிறது.< இது குறித்த வழக்கை காவிரி நடுவர் மன்றம் விசாரித்து கர்நாடகம் ஆண்டுதோறும் தமிழ்நாட்டுக்கு 192 டி.எம்.சி. தண்ணீர் தர வேண்டும் என 2007-ம் ஆண்டு பிப்ரவரி 5-ந் தேதி இறுதி தீர்ப்பு அளித்தது. மேலும், காவிரி நதிநீர் பங்கீடு சரியாக நடக்கிறதா என்பதை உறுதி செய்வதற்கு காவிரி மேலாண்மை வாரியம் மற்றும் காவிரி ஒழுங்காற்று குழு ஆகிய அமைப்புகளை உருவாக்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு உத்தரவு பிறப்பித்தது.

ஆனால் அந்த தீர்ப்பை மத்திய அரசின் கெஜட்டில் வெளியிடவே தமிழ்நாடு 6 ஆண்டு காலம் பெரும் போராட்டம் நடத்த வேண்டியதாயிற்று. ஒரு வழியாக 2013-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 19-ந் தேதி மத்திய அரசு, காவிரி நடுவர் மன்ற தீர்ப்பு குறித்து கெஜட்டில் வெளியிட்டது.< இதற்கிடையே நடுவர் மன்ற தீர்ப்பை எதிர்த்து தமிழ்நாடு, கர்நாடகம், கேரளா, புதுச்சேரி என 4 மாநிலங்களும் சுப்ரீம் கோர்ட்டில் மேல் முறையீடு செய்தன. அதில், கடந்த மாதம் 16-ந் தேதி தீர்ப்பு வந்தது.
அந்த தீர்ப்பில், தமிழ்நாட்டுக்கு கர்நாடகம் தர வேண்டிய காவிரி நீரின் பங்கு 192 டி.எம்.சி.யில் இருந்து 177.25 டி.எம்.சி.யாக குறைக்கப்பட்டது; கர்நாடகத்தின் பங்கு 270 டி.எம்.சி.யில் இருந்து 284.75 டி.எம்.சி.யாக அதிகரிக்கப்பட்டது. தமிழ்நாட்டுக்கான தண்ணீரின் பங்கு 14.75 டி.எம்.சி. குறைக்கப்பட்டு, அது கர்நாடகத்துக்கு கூடுதலாக ஒதுக்கப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.


மேலும், காவிரி நதிநீர் பங்கீட்டை செயல் திட்டத்தின் கீழ் 6 வாரங்களில் அமல்படுத்த வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டது.

தமிழ்நாட்டுக்கான தண்ணீரின் அளவு குறைக்கப்பட்ட நிலையில், காவிரி மேலாண்மை வாரியம் அமைத்தாலாவது, அந்த தண்ணீராவது கிடைக் கும் என்ற நிலை உருவானது.

ஆனால் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்று தமிழ்நாட்டின் சட்ட சபையில் தீர்மானம் நிறைவேற்றியும், நாடாளுமன்றத்தில் குரல் கொடுத்தும் எந்த பலனும் இல்லை.

மத்திய அரசு 4 மாநிலங்களின் ஆலோசனை கூட்டத்தை டெல்லியில் கடந்த 9-ந் தேதி கூட்டி ஆலோசனை நடத்தியது. அதிலும் காவிரி மேலாண்மை வாரியம் குறித்து எந்த முடிவும் எடுக்கப்படவில்லை.

சுப்ரீம் கோர்ட்டு விதித்த காலக்கெடு, இன்னும் 4 நாட்களில், அதாவது 29-ந் தேதி முடிவுக்கு வருகிறது.

இந்த நிலையில் காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதை மத்திய அரசு கைவிரித்து விட்டு, அதற்கு பதிலாக காவிரி மேற்பார்வை ஆணையம் அமைக்க முடிவு செய்து உள்ளதாக தெரிய வந்து உள்ளது.

இது தொடர்பாக மத்திய நீர்வளத்துறை அமைச்சகம் ஒரு குறிப்பினை தயார் செய்து மத்திய மந்திரிசபையின் ஒப்புதலுக்கு விரைவில் அனுப்ப உள்ளது. அதில் காவிரி மேலாண்மை வாரியம் என பெயரிடுவது பற்றி வலியுறுத்தப்படவில்லை என தெரிகிறது.

இது தொடர்பாக மூத்த அதிகாரி ஒருவர் கூறியதாவது:-

தமிழ்நாடு, கர்நாடகம், கேரளா, புதுச்சேரி ஆகிய மாநிலங்கள் இடையேயான காவிரி நீர் பங்கீட்டை கவனிக்க காவிரி மேற்பார்வை ஆணையம் அமைக்கப்படும். இந்த ஆணையம், ஒரு சுதந்திரமான உறுப்பினர் தலைமையில் இயங்கும். அவர் காவிரி நடுவர் மன்றம் தனது தீர்ப்பில் கூறியபடி தலைமை என்ஜினீயராக இருக்க வேண்டும் என்பது இல்லை. ஐ.ஏ.எஸ். அதிகாரியாகவோ அல்லது தொழில்நுட்ப வல்லுனரோ இருக்கலாம்.

இது 9 பேரை கொண்டதாக இருக்கும்.

இதில் தலைவர் உள்பட 5 பேர் முழு நேர உறுப்பினர்களாக இருப்பார்கள். இவர் களை மத்திய அரசு நியமிக்கும். சம்மந்தப்பட்ட 4 மாநிலங்களும் பகுதி நேர உறுப்பினர்களாக இருப்பார்கள்.

இன்னும் எத்தனை நாளில் இந்த ஆணையம் அமைக்கப்படும் என காலவரையறை எதுவும் கூற முடியாது.

இவ்வாறு அவர் கூறினார்.

காவிரி நடுவர் மன்றம் கூறிய காவிரி மேலாண்மை வாரியம் என்றால், அதில் ஒரு முழு நேர தலைவர், மத்திய அரசால் நியமிக்கப்படும் 2 உறுப்பினர்கள் இடம் பெற்று இருப்பார்கள்.

தலைவரை பொறுத்தமட்டில் அவர் நீர்வள நிர்வாகத்தில் 20 ஆண்டுகள் அனுபவம் கொண்ட தலைமை என்ஜினீயர் அந்தஸ்துக்கு குறைவு இல்லாத நீர்ப்பாசன என்ஜினீயராக இருக்க வேண்டும்; 2 முழு நேர உறுப்பினர்களில் ஒருவர் தலைமை என்ஜினீயர் அந்தஸ்துக்கு குறைவு இல்லாத நீர்ப்பாசன என்ஜினீயராக இருக்க வேண்டும்; மற்றொருவர் விவசாய நிபுணராக இருக்க வேண்டும் என கூறப்பட்டு இருந்தது. அதிலும் மத்திய அரசு 2 பகுதி நேர உறுப்பினர்களை நியமிக்கும் வேளையில், சம்பந்தப்பட்ட மாநிலங்கள் பகுதி நேர உறுப்பினர்களாக இடம் பெற வாய்ப்பு அளிக்கப்பட்டு இருந்தது.

காவிரி மேலாண்மை வாரியத்துக்கு பதிலாக காவிரி மேற்பார்வை ஆணையம்தான் அமைக்கப்படும் என தகவல்கள் வெளியாகி இருப்பது காவிரி டெல்டா மாவட்ட விவசாயிகளுக்கு பெரும் அதிர்ச்சியாக அமைந்து உள்ளது. 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக