செவ்வாய், 20 மார்ச், 2018

உதயநிதி ஸ்டாலின் பேசும்முன்பே கலைந்துபோன திமுகவினர்

tamilthehindu :கே.கே.மகேஷ் மதுரை ஒத்தக்கடையில், உதயநிதி ஸ்டாலின் பங்கேற்ற திமுக பொதுக்கூட்டம் இன்று மாலையில் தொடங்கியது. ஸ்டாலின் பிறந்த நாளையொட்டி நடந்த இந்த விழாவில் கழக முன்னோடிகள் 1,207 பேருக்கு பொற்கிழி வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.
மதுரை வடக்கு மாவட்ட செயலாளர் பி.மூர்த்தி எம்எல்ஏ, தெற்கு மாவட்ட செயலாளரும், சேடப்பட்டி முத்தையாவின் மகனான மு.மணிமாறன் ஆகியோர் பல கோடி செலவில் கூட்டத்துக்கு மாநாடு போல ஏற்பாடு செய்திருந்தனர். மாவட்டம் முழுவதும் இருந்து சுமார் 40 ஆயிரம் பேரை அழைத்துவந்திருந்தனர்.
5 மணிக்கே கூட்டத்தினர் காத்திருக்க, உதயநிதி ஸ்டாலின் 7.15 மணிக்கு நிகழ்ச்சிக்கு வந்தார். அதுவரையில் கூட்டத்தில் யாரையுமே பேச அனுமதிக்கவில்லை. மாறாக, கூட்டத்தினர் அமைதியாக இருக்குமாறும், இருக்கையைவிட்டு நகரக்கூடாது என்றும் மேடையில் அறிவிப்பு மட்டும் விடுக்கப்பட்டது. இதனால், கட்சியினரும், அழைத்து வரப்பட்ட கூட்டத்தினரும் பொறுமையிழந்தனர். உதயநிதி வந்ததும், அவரைப் பார்த்துவிட்டு கூட்டத்தினர் கலையத் தொடங்கினர்.

அப்போதும்கூட கூட்டத்தைக் கட்டிப்போடும் வகையில் யாரையுமே பேச அனுமதிக்கவில்லை. இதனால், கூட்டம் தொடர்ந்து கரைந்துகொண்டே இருந்தது. மேடைக்கு முன்பு அமர வைக்கப்பட்டிருந்த கட்சி முன்னோடிகள் 1,207 பேருக்கும் உதயநிதியே சென்று தலா 5000 நிதி வழங்கி பொன்னாடை போர்த்தினார். இதனால், அந்த நிகழ்ச்சி முடியவே இரவு 8.40 ஆகிவிட்டது. கூட்டம் குறைந்துகொண்டே இருந்ததால், அதன் பிறகு தலைமைக்கழக பேச்சாளர்கள் பேச அனுமதிக்கப்பட்டனர். இருப்பினும் உதயநிதி பேச ஆரம்பித்தபோது, கூட்டத்தில் வெறுமனே ஐந்தில் ஒரு பங்கு கூட்டம் கூட இல்லை.
கூட்டத்திற்கு அழைத்துவரப்பட்டிருந்த மக்கள் பலரிடம் யார் பேசுகிறார்? என்று கேட்டபோது, ஸ்டாலின் என்றார்கள், சிலர் தளபதி ஸ்டாலின் மகன் என்றார்கள். ஒன்றிரண்டு பேரே உதயநிதி ஸ்டாலின் என்று சரியாகச் சொன்னார்கள். “இந்தக் கூட்ட நிகழ்வை கலைஞர் கருணாநிதியோ, பொதுச்செயலாளர் அன்பழகன் உள்ளிட்ட முன்னோடிகளோ நேரில் பார்க்கும் வாய்ப்பு இருந்திருந்தால் மிகுந்த மன வேதனை அடைந்திருப்பார்கள் என்று வேதனையுடன்” சொன்னார் மூத்த தொண்டர் மலைச்சாமி.
கூட்டத்தில் உதயநிதி பேசும்போது, “நான் எத்தனையோ கூட்டத்தில் கலந்துகொண்டிருக்கிறேன். இவ்வளவு நெகிழ்ச்சியான நிகழ்ச்சியில் நான் கலந்துகொண்டதேயில்லை. மிக விரைவாக தலைவர் கலைஞர் உங்களிடம் வந்து பேசுவார். அந்த நாளுக்காக நாங்களும் காத்திருக்கிறோம். கழக முன்னோடிகளுக்கு நிதி வழங்கியபோது, ஒரு சிலர் தேர்தல் நிதியாக எனக்குப் பணம் தந்தார்கள். ஒரு சிலர் ஈரோடு மாநாட்டில் கலந்துகொள்வோம் என்றார். ஒருவர் சான்றிதழில் என் தந்தை பெயர் மாறிவிட்டது. அதை சரிசெய்து தந்தால்தான் வாங்குவேன் என்றார். அதுதான் திமுக தொண்டனின் சிறப்பு. எனக்குத் தெரிந்து இந்தியாவிலேயே, இல்லை உலகத்திலேயே ஆயிரம் பேருக்கு மேல் பொற்கிழி வழங்கும் விழா மதுரையைப் போல் எங்குமே நடந்திருக்காது. இந்த விழாவில் கழக செயல் தலைவர் ஸ்டாலினை நான் கேட்டுக்கொள்வது ஒன்றுதான்.
நமது திமுக சார்பில் தமிழ்நாடு முழுக்க உள்ள அனைத்து கழக முன்னோடிகளுக்கும் அவர்களின் மருத்துவ செலவுக்காக ஒரு திட்டத்தை அறிவிக்க வேண்டும் என்று அன்போடு கேட்டுக்கொள்கிறேன். நான் திடீரென்னு அரசியலில் குதித்துவிட்டேன் என்று சிலர் எரிச்சல்படுகிறார்கள். நான் பிறந்ததில் இருந்தே திமுகதான். என் உடலில் ஓடுவது திராவிட முன்னேற்ற கழக ரத்தம். இதைச் சொல்வதில் நான் பெருமையடைகிறேன். எனக்கு பொறுப்பு, பதவி தரப்போவதாக சிலர் சொல்கிறார்கள். இவ்வளவு பேரைச் சந்தித்ததைவிட, எனக்கு வேறு என்ன பதவி கிடைத்துவிடப்போகிறது? இங்கே நரசிங்கத்தைச் சேர்ந்த 102 வயது பெரியவர் வாழவந்தான், மற்றொரு 102 வயதுப பெரியவர் தங்கசாமி ஆகியோருக்கும் பொற்கிழி வழங்கும் வாய்ப்பு கிடைத்தது. நான் பெரியாரைப் பார்த்ததில்லை, அண்ணாவையும் பார்த்தது இல்லை. தலைவர் கலைஞர், பேராசிரியர் அன்பழகன், தளபதி ஸ்டாலின் ஆகியோரைத்தான் பார்த்திருக்கிறேன். இங்கே உள்ள பெரியவர்களைப் பார்த்தபோது, இவர்கள்தான் கழகத்தின் பெரியார், அண்ணா என்று தோன்றியது” என்றார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக